சென்னை மற்றும் புறநகர்களில் அலட்சிய அதிகாரிகளால் வறண்டு போன குளங்கள்:குடிநீருக்கு ஏங்கும் மக்கள்

Daily_News_2169262170792_Fotor

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 15 மண்டலங்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான கோயில் குளங்கள் மற்றும் நீர்நிலைகள் போதிய பராமரிப்பின்றி, தூர்வாரப்படாமல் வறண்ட பாலைவனம் போல் மக்களிடையே பரிதாபமாக காட்சியளித்து வருகிறது.
உதாரணமாக, சென்னை நகரை ஒட்டிய மூலக்கடை, கொடுங்கையூர், மாதவரம் ஆகியவற்றில் சமீபகாலமாக மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. இதையொட்டி, அங்கு காலியாக உள்ள அரசு மற்றும் தனியார் நிலங்கள் உட்பட பல்வேறு பழமையான கோயில் குளங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

இதேபோல் பூந்தமல்லி நகராட்சியில் பழமையான கோயில்களுக்கு சொந்தமான குளங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு, ஆளுங்கட்சியினரால் வீட்டுமனைகளாகப் பிரிக்கப்பட்டு, லட்சக்கணக்கில் அப்பாவிகளிடம் விற்கப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
மேலும், புழல் ஏரியில் இருந்து மாதவரம், ரெட்டேரி, மணலி, திருவொற்றியூர் வழியாக கடலுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்கள் பல்லாண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டன. பின்னர், அக்கால்வாய்களை நீண்ட காலம் பராமரிக்காமல் விட்டுவிட்டனர். இதனால் அக்கால்வாய்கள் பல இடங்களில் தூர்ந்துபோய், தற்போது குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டன. இதேபோல், வடபழனி முருகன் கோயிலை ஒரு பிரபல தனியார் நிறுவனம் பராமரித்து வருகிறது.

ஆனால், அருகிலுள்ள கோயில் குளத்தின் சுற்றுச்சுவர்கள் பளிச்சென இருந்தாலும், அக்குளம் தனியார் பங்களிப்பின் மூலம் தூர்வாரப்படாமல் பசியால் வாடும் ஏழையின் வயிற்றை போல் காய்ந்து கிடக்கிறது. மேலும் புழல், செங்குன்றம், சோழவரம், அம்பத்தூர், ஆவடி, வளசரவாக்கம், போரூர், பூந்தமல்லி, மாங்காடு, குன்றத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் சென்னை நகரில் புரசை கங்காதீஸ்வரர் கோயில், மயிலாப்பூர் சித்திரக்குளம், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், மேற்கு மாம்பலம் லட்சுமி சீனிவாசப் பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் உள்ள புராதன குளங்களும் பரிதாபமாக காட்சியளிக்கிறது.

இதேபோல் திருவொற்றியூர், சன்னதி தெருவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அபிமானத்துக்கு உரிய அருள்மிகு வடிவுடையம்மன் சமேத தியாகராஜசாமி திருக்கோயில் குளமும் பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் அக்குளம் வறண்டு போய், பாலைவன பகுதியாக காட்சியளிக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருக்கும் பழமையான கோயில் குளங்கள் மற்றும் அனைத்து நீர்நிலைகளும் பல ஆண்டுகளாக அப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்தன. அவற்றை முறையாக சீரமைத்து, தூர்வாரி, அதன் வரத்து கால்வாய்களை பராமரிப்பதன் மூலம் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் மக்கள் பாதுகாத்து வந்தனர்.

பின்னர் இவையெல்லாமல் அரசுடைமையான பின், அக்குளங்களை அந்தந்த ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முறையாக பராமரிக்காமல் விட்டுவிட்டனர் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து அரசு தரப்பு அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பழமையான கோயில் குளங்கள் மற்றும் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் தரப்பில் பல்வேறு தடைகள் உள்ளன. இவற்றை அகற்றி, புழல் ஏரியிலிருந்து வரத்து கால்வாய் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டுவர பல்லாயிரம் கோடி செலவாகும்.

இதற்கு தமிழக அரசிடம் போதிய நிதி ஆதாரங்கள் இல்லை. எனவே, கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, கல்குவாரி மற்றும் கடல்நீரை சுத்தரிகரித்து குடிநீர் வழங்குவதன் மூலம் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இவை எந்தளவுக்கு நடைமுறை சாத்தி–்யமாகும் என்பது தெரியவில்லை’ என்று அதிகாரிகள் கூறுகின்றனர். சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்கு நிரந்தர தீர்வே கிடைக்காதா? அந்தந்த பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் குளங்கள் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளை மீட்கவே முடியாதா? ஆள்பவர்களுக்கே வெளிச்சம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>