சென்னை நகரில் அவலம்: கால்வாய்க்குள் இறங்கும் பரிதாப தொழிலாளர்கள்; அதிகாரிகளின் அலட்சிய போக்கு

கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாயில் ஏற்படும் அடைப்புகளை நீக்கும் பணி செய்யும் ஆண்களுக்கு ரூ.300, அள்ளி போடும் பெண்களுக்கு ரூ.200 கொடுக்கிறாங்க. ஆனால், அதுலயும் மாநகராட்சி அதிகாரிங்க ஒரு ஆளுக்கு ரூ.50 கமிஷனா எடுத்துக்கறாங்க.

கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாயில் ஏற்படும் அடைப்புகளை நீக்கும் பணி செய்யும் ஆண்களுக்கு ரூ.300, அள்ளி போடும் பெண்களுக்கு ரூ.200 கொடுக்கிறாங்க. ஆனால், அதுலயும் மாநகராட்சி அதிகாரிங்க ஒரு ஆளுக்கு ரூ.50 கமிஷனா எடுத்துக்கறாங்க.

சென்னை நகரில் ராயப்பேட்டை, அண்ணாசாலை, மயிலாப்பூர், அடையாறு, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணாநகர், அமைந்தகரை, அரும்பாக்கம், கோயம்பேடு 100 அடி சாலை, சின்மயாநகர், வடபழனி, சைதாப்பேட்டை, நந்தனம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் அடிக்கடி கழிவுநீர் குழாய்களில் அடைப்பு ஏற்படும். இவற்றை உடனுக்குடன் அகற்ற, லாரிகளில் பொருத்தப்பட்ட ஜெட்ராடர் இயந்திரங்கள் மூலம் பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் தீவிர முயற்சி எடுக்கின்றனர். ஆனால், சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாயில் ஏற்பட்ட கழிவு மற்றும் குப்பைகளை அகற்ற, இன்றும் ஒப்பந்த கூலித் தொழிலாளர்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதேபோல், வடசென்னையில் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள பெரம்பூர், கொடுங்கையூர், வியாசர்பாடி, மகாகவி பாரதி நகர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், மணலி, ராயபுரம், பாரிமுனை, குறளகம், பிராட்வே, தங்கசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளை ஒப்பந்த கூலித் தொழிலாளர்கள்தான் அகற்றி வருகின்றனர். சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ள காலங்களில் மழைநீரை வெளியேற்றுவதற்காக கால்வாய்கள் அமைக்கப்பட்டன. நாளடைவில் அந்த மழைநீர் கால்வாய்கள் அனைத்தும் அந்தந்த பகுதி மக்களின் கழிவுநீர் கால்வாயாக உருமாறி போனது. இதனால் அந்த கால்வாயில் கழிவுகளும் குப்பைகளும் குவிந்து, அப்பகுதி சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடிவருகிறது.

உதாரணமாக, வியாசர்பாடி மகாகவி பாரதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த சில நாட்களாக கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதைத் தொடர்ந்து, அங்கு மழைநீர் கால்வாயில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றும் பணியில் ஒப்பந்த கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அவர்கள் கால்வாயின் மூடியைத் திறந்தபோது, அடர்த்தியான கருநிறத்தில் ஏராளமான கழிவுகள் காணப்பட்டன. அதற்குள் இருந்து உயிரை குடிக்கும் விஷவாயு தொடர்ச்சியாக வெளியேறியது. இதைத் தொடர்ந்து எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் 4 கூலி தொழிலாளர்கள் கால்வாய்க்குள் இறங்கி கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அந்த கழிவுகளை முகமூடி அணியாமல் 2 பெண்கள் அள்ளி ஒதுக்குப்புறமாக கொட்டினர். இக்காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த மக்கள் அனைவரையும் கண்கலங்க செய்தது.

இதுகுறித்து ஒருசில கூலி தொழிலாளர்களிடம் கேட்டபோது, ‘நாங்க எல்லாரும் கூலிக்கு வேலை செய்யறோம். கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாயில் ஏற்படும் அடைப்புகளை நீக்கும் பணி செய்யும் ஆண்களுக்கு ரூ.300, அள்ளி போடும் பெண்களுக்கு ரூ.200 கொடுக்கிறாங்க. ஆனால், அதுலயும் மாநகராட்சி அதிகாரிங்க ஒரு ஆளுக்கு ரூ.50 கமிஷனா எடுத்துக்கறாங்க. கால்வாய்க்குள் இறங்கற எங்களுக்கு எவ்வித பாதுகாப்பு கவசங்களும் உபகரணங்களும் கொடுக்கறதில்லை. இதுல எங்களை கூலி வேலைக்கு அழைத்து செல்பவர் ரூ.50 எடுத்துக் கொள்வார். மீதித் தொகையை வைத்து நாங்க எப்படி குடும்பம் நடத்த முடியும்?
எங்க பரிதாப நிலையை மாநகராட்சி அதிகாரிங்க நேர்ல பார்த்தும் எங்களை கேவலப்படுத்தி, எங்களை பாதுகாக்க முன்வராமல் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வர்றாங்க. எங்களுக்கு விடிவுகாலம் பிறக்கவே பிறக்காதா?’ என்று கூலி தொழிலாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

இதுகுறித்து மண்டல அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, ‘இதுபோன்ற மழைநீர் கால்வாய் மற்றும் கழிவுநீர் குழாய்களில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்க ஜெட்ராடர் எனும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. எனினும், இவை தென்சென்னை மற்றும் மத்திய சென்னை மண்டலங்களில் மட்டும் குறைந்த அளவே செயல்படுவதால், வடசென்னை பகுதிகளில் அடைப்புகளை நீக்க ஒப்பந்த தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம்தான் வழங்க வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பேற்க முடியாது. ’ என்று அலட்சியமாகக் கூறுகின்றனர்.

சென்னை நகரில் கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய்களில் இதுபோன்ற கழிவுகளை அள்ளி, தங்களது வாழ்க்கையை தியாகம் செய்து வரும் ஒப்பந்த கூலி தொழிலாளர்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா? அவர்களின் அவலநிலையைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை மற்றும் அரசு அதிகாரிகள் பாதுகாப்பு அளிக்க முன்வருவார்களா? காலம்தான் பதில் செல்லும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>