சுதந்திரம் அடைந்து 70 ஆண்டாகியும் மின்வசதி இல்லாத மலைக்கிராமம் :மு.திலிப்

தலைச்சுமையாக கொண்டுசென்று, கடம்பூர் மற்றும் கெம்பநாயக்கன்பாளையம் கிராமங்களில் விற்பனை செய்கின்றனர். தரமான, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட இப்பொருட்களுக்கு இவர்களால் விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை

தலைச்சுமையாக கொண்டுசென்று, கடம்பூர் மற்றும் கெம்பநாயக்கன்பாளையம் கிராமங்களில் விற்பனை செய்கின்றனர். தரமான, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட இப்பொருட்களுக்கு இவர்களால் விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை

சத்தியமங்கலம்: மின்சாரம் இல்லை, சாலை வசதி இல்லை, டெலிபோன் வசதி இல்லை, செல்போன் சிக்னல் இல்லை, தொலைக்காட்சி இல்லை. மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி என எதுவுமே இல்லை. இப்படியொரு கிராமம் 21 ம் நூற்றாண்டில் உள்ளது. அதுவும் தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில்தான் இந்த நிலை. சத்தியமங்கலம் தாலுகா கடம்பூர் மலைப்பகுதி, குத்தியாலத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மல்லியம்மன்துர்க்கம் என்ற மலைகிராமம்தான் இது. அடர்ந்த வனப்பகுதியில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 2,000 அடி உயரத்தில் இந்த கிராமம் உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பம் வசிக்கிறது. சாலை வசதி இல்லாத இந்த கிராமத்திற்கு, கடம்பூரில் இருந்து 7 கி.மீ தூரம் மலைகளை கடந்து அடர்ந்த வனப்பகுதி வழியாக நடந்துதான் செல்ல வேண்டும்.

கடம்பூரில் இருந்து இந்த ஊரை அடைய 3 மணி நேரமாகிறது.தற்போது, புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ள சத்தியமங்கலம் வனப்பகுதியில்தான் இந்த கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு நடந்துசெல்லும் வழியில் யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல வகை வன விலங்குகள் சர்வசாதாரணமாக நடமாடுகின்றன. இங்கு பெரும்பாலும் பழங்கால குடிசை வீடுகளே அதிகம். 50 ஆண்டுகளுக்கு முன்பு வருவாய் துறையினர் நிலப்பட்டா வழங்கியுள்ளனர். இங்கு விவசாயம் மட்டுமே முக்கிய தொழில். மானாவாரி பயிராக ராகி, சோளம், தினை, அவரை, பலா, கொய்யா, காபி ஆகிய விளைபொருட்களை இவர்கள் சாகுபடி செய்கின்றனர். ஆனால் இவற்றை வெளியே கொண்டுசென்று விற்க வழியில்லை. மலைப்பாதையில் 7 கி.மீ தூரம் தலைச்சுமையாக கொண்டு சென்று விற்பது என்பது கடினமான காரியமாக உள்ளது.

இருப்பினும், முடிந்த வரை தலைச்சுமையாக கொண்டுசென்று, கடம்பூர் மற்றும் கெம்பநாயக்கன்பாளையம் கிராமங்களில் விற்பனை செய்கின்றனர். தரமான, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட இப்பொருட்களுக்கு இவர்களால் விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை. ஊர் மக்கள் கொடுக்கும் பணத்தை வைத்து, தங்களுக்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கிக்கொண்டு ஊர் திரும்புகின்றனர். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, கடந்த 70 ஆண்டுகளாக இக்கிராமத்துக்கு மின்சார வசதி செய்துகொடுக்கப்படவில்லை. இரவில், மண்ணெண்ணை விளக்கு மற்றும் தீப்பந்தம் உதவியுடன் இக்கிராம மக்கள் வாழ்க்கை நடத்துகின்றனர். நவீன தொழில்நுட்பம் என்னவென்று இவர்களுக்கு தெரியாது. ஊர் நடுவில் உள்ள 2 பொதுக்கிணற்றில் தண்ணீர் இறைத்து குடிக்கவும், இதர பயன்பாட்டுக்கும் பயன்படுத்துகின்றனர்.

1972 ம் ஆண்டு கொண்டையம்பாளையம் பகுதியில் இருந்து வனப்பகுதி வழியாக மரக்கம்பங்கள் நட்டு, இக்கிராமத்திற்கு மின்இணைப்பு கொண்டுசெல்லவும், 3 தெருவிளக்கு அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, மரக்கம்பங்கள் எரிந்து சாம்பலாகிவிட்டது. அத்துடன், மின்சார கனவும் தகர்ந்துபோய்விட்டது. அதன்பிறகு, யாருமே முயற்சி எடுக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 5 சோலார் தெருவிளக்கு அமைக்கப்பட்டது. இதுவும், முழுமையாக கைகொடுக்கவில்லை. கடந்த 1985 ம் ஆண்டு நடுநிலைப்பள்ளி கட்டப்பட்டு, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஆனால், வனப்பகுதி என்பதால், 7 கி.மீ தூரம் நடந்துசென்று பணிபுரிய எந்த ஆசிரியரும் தயாராக இல்லை. இதனால், கல்வியும் பாழாய்போய்விட்டது.பல தடைகளை தாண்டி, இங்குள்ள 17 மாணவ-மாணவிகள் சமீப காலமாக பள்ளி செல்கின்றனர். கடம்பூர், கே.என்.பாளையம், சத்தியமங்கலம் பகுதிகளில் உள்ள உறவினர் வீடு, விடுதிகளில் தங்கியிருந்து கல்வி பயில்கின்றனர்.
இக்கிராமத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட எந்த குற்றச்செயலும் இதுவரை நடந்தது இல்லை. கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ வலி எடுத்தால் தொட்டில் கட்டி, தூக்கி வரும் நிலை இன்னும் தொடர்கிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் என யாரும் இதுவரை இக்கிராமத்துக்கு சென்றது இல்லை. கடுமையான உழைப்பின் காரணமாக இவர்களது வாழ்க்கை நகர்கிறது. கிடைக்கும் சொற்ப வருமானத்தில் இக்கிராம மக்கள் வாழ்க்கை நடத்துகின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>