சிவகாசி பட்டாசு கடை வெடிவிபத்து 8 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்

விதிகள் மீறி செயல்படும் பட்டாசு கடைகள் குறித்து அதிகாரிகளுக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் விளைவாக இன்று 8 உயிர்கள் பலியாகி உள்ளன.

விதிகள் மீறி செயல்படும் பட்டாசு கடைகள் குறித்து அதிகாரிகளுக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் விளைவாக இன்று 8 உயிர்கள் பலியாகி உள்ளன.

சிவகாசி: சிவகாசி பட்டாசு கடை வெடிவிபத்தில், அருகிலிருந்த ஸ்கேன் சென்டர் பெண்கள் 6 பேர் உட்பட 8 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். டாக்டர் உள்பட 16 பேர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தில் 25 வாகனங்களும் எரிந்து சாம்பலாயின.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி சின்னத்தம்பி நகரை சேர்ந்தவர் ஆனந்த் (40). இவருக்கு சொந்தமான பட்டாசு கடை சிவகாசி பைபாஸ் சாலை, காமாக் ரோட்டில் உள்ளது. இங்கு, நேற்று காலை 11.30 மணியளவில் சரக்கு வாகனத்தில் வந்த பட்டாசு பண்டல்களை லோடுமேன்கள் இறக்கி கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக ஒரு பட்டாசு பண்டல் கீழே விழுந்தது. இதில் உராய்வு ஏற்பட்டு பண்டலில் தீப்பிடித்தது. இதில் இருந்து தெறித்த தீப்பொறியால், சரக்கு வாகனத்தில் இருந்த மற்ற பண்டல்களிலும் தீப்பிடித்தது. இதையடுத்து லோடுமேன்கள், கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

சரக்கு வாகனத்தில் சரமாரியாக வெடித்த பட்டாசுகள், கடைக்குள்ளும் தெறித்து விழுந்தன. இதில் கடையில் இருந்த பட்டாசுகளும் வெடித்து மளமளவென தீப்பற்றியது. ஒரேநேரத்தில் கடை, சரக்கு வாகனத்திலும் பட்டாசுகள் வெடித்து சிதறியதால், அப்பகுதி முழுவதும் பயங்கர வெடிச்சத்தமாக இருந்தது. நூறு அடி உயரத்துக்கு மேலும் கரும்புகை எழும்பியதால், அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது. பட்டாசு கடையை ஒட்டி தனியார் ஸ்கேன் சென்டர் உள்ளது. அங்கு ஸ்கேன் எடுப்பதற்காக வந்தவர்கள் மற்றும் ஊழியர்கள் விபத்தை அடுத்து உள்ளேயே இருந்தனர். சிறிது நேரத்தில் பட்டாசு கடையில் இருந்து வெளியேறிய கரும்புகை, ஸ்கேன் சென்டருக்குள்ளும் புகுந்தது. முன்புறம் பட்டாசுகள் வெடித்துக் கொண்டிருந்ததால், அவர்களால் வெளியேற முடியவில்லை. பின்புற கதவையும் திறக்க முடியவில்லை. இதனால் அங்கிருந்தவர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்தனர். தங்களை காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். தீ பயங்கரமாக எரிந்ததாலும், பட்டாசுகள் வெடித்துச் சிதறியதாலும் யாரும் ஸ்கேன் சென்டரை நெருங்க முடியவில்லை.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் அவர்களை காப்பாற்ற ஸ்கேன் சென்டர் பின்புறம் ஓடினர். அங்கிருந்த முள்வேலிகளுக்கு இடையே நடந்து, ஜன்னலை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு புகை மண்டலத்திற்கு இடையே சிக்கி தவித்தவர்களை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மயக்க நிலையில் இருந்தவர்களை சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஸ்கேன் சென்டர் மேலாளர் பாஸ்கர் (42), உதவியாளர்கள் சொர்ணகுமாரி (36), ராஜா (21), நர்ஸ்கள் காமாட்சி (23), புஷ்பலட்சுமி (35), டைப்பிஸ்ட்கள் வளர்மதி (21), பத்மலதா (30) மற்றும் ஸ்கேன் எடுக்க வந்த கர்ப்பிணி தேவி (19) ஆகிய 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், ஸ்கேன் சென்டர் டாக்டர் ஜானகிராமன் (29), சண்முகராஜ் (21), கணேசன் (61) ஆகியோர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் டாக்டர் ஜானகிராமன் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கரும்புகையால் மூச்சுத்திணறி பாதிக்கப்பட்ட மேலும் 13 பேர், சிவகாசி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் ஒரு லோடு வேன், ஒரு மினி ஆட்டோ, 20 டூவீலர்கள், 5 சைக்கிள்கள் எரிந்து சேதமாயின. விபத்து நடந்த இடத்தை விருதுநகர் கலெக்டர் சிவஞானம், எஸ்பி ராஜராஜன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், பட்டாசு பண்டல்களை கவனக்குறைவாக கையாண்டதாக பட்டாசு கடை உரிமையாளர் ஆனந்த் மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பட்டாசு கடை வெடி விபத்தில் அருகில் உள்ள ஸ்கேன் சென்டரில் 8 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சிவகாசியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒன்றரை மணிநேரம்போராடி தீ அணைப்பு
சிவகாசி தீயணைப்பு வீரர்கள் 2 தண்ணீர் வாகனம் மற்றும் மீட்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். கரும்புகை அதிகமாக கிளம்பியதால் சாத்தூர் மற்றும் விருதுநகரிலிருந்து மேலும் 2 தீயணைப்பு வாகனங்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டன. சுமார் ஒன்றரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

காயமடைந்தவர்களை காப்பாற்றிய மக்கள்
பட்டாசுக்கடையில் தீ விபத்து ஏற்பட்டவுடன் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். விபத்து நடந்த கடைக்கு அருகிலிருந்த ஸ்கேன் சென்டருக்கு பின்பகுதி வழியாக செல்ல முடியும் என்பதை அங்கிருந்த சிலர் கூறியதையடுத்து, பொதுமக்களே கடப்பாரையுடன் சென்று ஜன்னலை உடைத்து உள்ளே மயங்கிக் கிடந்தவர்களை மீட்க உதவி செய்தனர்.

சாலைக்கு ‘சீல்’
சிவகாசியின் முக்கிய சாலையான விருதுநகர் பைபாஸ் சாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் காரனேசன் ஜங்சனிலிருந்து பஸ்கள் மற்றும் வாகனங்கள் மாற்றுச்சாலையில் திருப்பி விடப்பட்டன. நாரணாபுரம் சாலையிலிருந்து பைபாஸ் சாலை வரை போலீசார் சாலைக்கு சீல் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

‘கர்ப்பிணியாய் வந்து கருவாடாய் போனாயே’
விபத்தில் இறந்த தேவி (19), சமீபத்தில் திருமணமானவர். 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். விபத்தில் இவரும் பரிதாபமாக இறந்தது, அவரது குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தேவியின் தாய் மல்லிகா கூறுகையில், ‘‘3 மாத கர்ப்பிணியான எனது மகள் ஸ்கேன் எடுக்க சென்றாள். இப்படி கருவாடாக கருகி போவாள் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லையே. ஒரே பிள்ளையை பெத்து பறி கொடுத்து விட்டேனே. என்னை அம்மா என்று சொல்லுவதற்கு பிள்ளை இல்லையே…’’ என்று கதறியவாறு கூறினார்.

‘அலட்சியத்தால் இழந்தோம்’
ஸ்கேன் சென்டர் ஊழியர் ரமேஷ் கூறுகையில், ‘‘ஸ்கேன் சென்டர் அருகே கடந்த சில நாட்களாக அதிக அளவு பட்டாசுகளை கொண்டு வந்து இறக்கியவண்ணம் இருந்தனர். மூச்சுத்திணறி உயிரிழந்த எங்களது மேனேஜர் பாஸ்கர், பட்டாசு கடை உரிமையாளர்களிடம் சென்று எச்சரித்தார். அவரது எச்சரிக்கையை பட்டாசு கடை உரிமையாளர் கண்டுகொள்ளவே இல்லை. பட்டாசு கடையால்தான் எங்களது ஊழியர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்து விட்டனர். நான், எனது நண்பர்கள், போலீசார் சேர்ந்து கடப்பாரையால் பின் வாசலை உடைத்து சென்றதால் 15 உயிர்களை காப்பாற்ற முடிந்தது.

‘கில்லர் கிச்சன்’
ஸ்கேன் சென்டர் ஊழியர் அப்பாஸ் கூறுகையில், ‘‘ஸ்கேன் சென்டரின் உள்ளே வேலை பார்த்துக் கொண்டிருந்தோம். மதிய நேரம் என்பதால் சென்டரில் குறைந்த ஆட்களே இருந்தனர். அப்போது வெளியில் பட்டாசு சத்தம் கேட்டது. வழக்கம்போல் பட்டாசுகளை வெடித்து சோதனை செய்கின்றனர் என்று நினைத்தோம். ஆனால் நேரம் ஆக ஆக வெடி சத்தம் அதிகம் கேட்டது. புகை மூட்டம் அதிகம் இருந்ததால் கிச்சன் பகுதிக்கு சிலர் சென்றுவிட்டனர். கிச்சன் பகுதியில் சிக்கிக் கொண்டவர்கள் புகைமூட்டதால் உயிரிழந்து விட்டனர்’’ என்றார்.

ஸ்கேன் மிஷினில் கதிரியக்க கசிவு ஏற்பட்டிருந்தால்…?
ஸ்கேன் சென்டரில் புகை நுழைந்ததே உயிரிழப்பிற்கு காரணம். உள்ளே தீ பற்றியிருந்தால், இதைவிட பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். காரணம், ஸ்கேன் மிஷினில் கதிரியக்க கருவி உள்ளது. இது பாதிக்கப்பட்டிருந்தால் 300 மீட்டர் தூரத்திற்கு கதிரியக்க கசிவு ஏற்பட்டிருக்கும். இதனால் மக்கள் மூச்சுத்திணறி பாதிக்கப்பட்டிருப்பார்கள். விபத்திற்கு பிறகு, உதவி கலெக்டர் குஷ்வாகா மற்றும் தீயணைப்பு வீரர்கள் கவசம் அணிந்து சென்று, ஸ்கேன் கருவியை சோதித்தனர். அதில் பாதிப்பு ஏற்படவில்லை என கண்டறியப்பட்டது.

மருத்துவமனையும்… மரண ஓலமும்…
பலியானவர்களின் உடல்கள் அனைத்தும் சிவகாசி அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கபட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டுள்ளனர். அவர்கள் கதறி அழுததால், மருத்துவமனை முழுவதும் மரண ஓலம் கேட்டுக் கொண்டிருந்தது. சிலர் பட்டாசு கடை உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்று ஆவேசமாக கூச்சலிட்டனர்.

2010 செப்டம்பர் மாதம் விஜயகரிசல்குளம் கிராமத்தில் அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட வெடிகளை பறிமுதல் செய்து அழித்தபோது ஏற்பட்ட விபத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 2012 செப். 5ம் தேதி முதலிப்பட்டி ஓம்சக்தி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தை பார்க்க சென்ற பார்வையாளர்கள் 32 பேர் உட்பட 35 பேர் உயிரிழந்தனர்.

விதிமீறிய கடைகளால் விபத்துகள் அதிகரிப்பு
விபத்தில் உயிரிழந்த ஸ்கேன் சென்டர் மேலாளர் பாஸ்கரின் உறவினர் செல்வி, ‘‘சிவகாசி பகுதியில் மருத்துவமனைகள், ஸ்கேன் சென்டர்கள், குடியிருப்புகள், கல்யாண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள் அருகே விதிகளை மீறி பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விதிகள் மீறி திறக்கப்பட்டுள்ள இந்த பட்டாசு கடைகளில் அதிகமாக பட்டாசுகளை தேக்கி வைக்கின்றனர். இவ்வாறு தேக்கி வைக்கப்படும் பட்டாசுகளால் வெடி விபத்துகள் நடந்து உயிரிழப்பும் ஏற்படுகிறது. விதிகள் மீறி செயல்படும் பட்டாசு கடைகள் குறித்து அதிகாரிகளுக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் விளைவாக இன்று 8 உயிர்கள் பலியாகி உள்ளன. சம்பந்தப்பட்ட பட்டாசு கடை உரிமையாளரை கைது செய்ய வேண்டும்’’ என்றார்.

விபத்தில் இறந்தவர்கள் விவரம்
விபத்தில் எஸ்.என்.புரத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் மனைவி தேவி (19), ஹரிராம் மனைவி சொர்ணகுமாரி (36), ரிசர்வ்லைன் நேருஜி நகரை சேர்ந்த காமாட்சி (23), எதிர்கோட்டையை சேர்ந்த புஷ்பலட்சுமி (35), சிவகாசி மணி நகரை சேர்ந்த பத்மலதா (30), வளர்மதி (21), நெல்லை மாவட்டம், திருவேங்கடம் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பாஸ்கர் (42), செல்லையநாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜா (21) ஆகிய 8 பேர் உயிரிழந்தனர். இவர்களில் தேவியைத் தவிர மற்ற 7 பேரும் ஸ்கேன் சென்டர் ஊழியர்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>