சிறுவாணி அணைப் பிரச்சினையில் ஜெயாவின் விளக்கமென்ன? .தி.மு.க.தலைவர்:கருணாநிதி

சிறுவாணி அணைப் பிரச்சினையில் ஜெயாவின் விளக்கமென்ன? .தி.மு.க.தலைவர்:கருணாநிதி

சிறுவாணி அணைப் பிரச்சினையில் ஜெயாவின் விளக்கமென்ன? .தி.மு.க.தலைவர்:கருணாநிதி

26-8-2016 அன்று “இந்து” ஆங்கில நாளிதழில் முதல் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி தரத் தக்க செய்தி வெளி வந்திருந்தது. “Kerala plans Dam across Siruvani River” (“சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை ஒன்றைக் கட்ட கேரளா திட்டமிடுகிறது”) என்ற தலைப்பில் வந்த அந்தச் செய்தியில், “With the Tamil Nadu Government failing to respond to “Several Letters” sent by the Union Ministry of Environment and Forests and the Kerala Government regarding the latter’s proposal to build a gravity dam across Siruvani river, the Expert Appraisal Committee (EAC) for River Valley and Hydroelectric Projects has recommended grant of standard Terms of Reference for the Project” அதாவது “சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது பற்றி மத்திய அரசின் சுற்றுப்புற சூழல் மற்றும் வனத் துறையும், கேரள அரசும் அனுப்பிய பல கடிதங்களுக்கு தமிழக அரசு பதிலளிக்க தவறிவிட்ட காரணத்தால், நதி நீர்ப் பள்ளத் தாக்கு மற்றும் புனல் மின் திட்டங்களுக்கான மத்திய நிபுணர்கள் குழு இந்தத் திட்டத்தை மேற்கொள்வதற்கான வரைமுறைகளைப் பரிந்துரை செய்திருக்கிறது” என்ற தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களின் விவசாயிகளையும், பொது மக்களையும் உலுக்கியெடுக்கும் செய்தி வெளி வந்திருக்கின்றது. இந்தச் செய்தி இன்று மற்ற ஏடுகளிலும் வெளிவந்துள்ளது.

ஆனால் பேரவையில் தமிழக முதலமைச்சர் என்ன சொல்கிறார்? தமிழ் நாட்டு மக்களின் நலன்களுக்காக 24 மணி நேரமும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறார்களாம்! காவேரியாக இருந்தாலும், முல்லைப் பெரியாறாக இருந்தாலும், பரம்பிக் குளம் ஆளியாறு திட்டம், பவானி திட்டம், கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணித் திட்டம் என்பன போன்ற திட்டங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு, தங்கள் கடமை முடிந்து விட்டதாக இந்த ஆட்சியினர் எண்ணிக் கண் துஞ்சுகிறார்களே, அப்படி இல்லாமல் மிகுந்த விழிப்போடு தமிழ்நாடு அரசுக்கும், கேரள அரசுக்கும் இடையே நதி நீர்ப் பங்கீடு குறித்து ஆராய்ந்து தீர்வு காண இரண்டு மாநிலங்களின் மாநாடு 10-5-1969 அன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதில் தமிழக அரசின் சார்பில் முதல் அமைச்சராக இருந்த நானும், நிதி அமைச்சராக இருந்த கே.ஏ. மதியழகன், பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த சாதிக் பாட்சா ஆகியோரும் – கேரள அரசின் சார்பில் முதலமைச்சராக இருந்த நம்பூதிரிபாத், பாசனத் துறை அமைச்சராக இருந்த பி.ஆர். குரூப், மின் துறை அமைச்சராக இருந்த எம்.என். கோவிந்தன் ஆகியோரும் கலந்து கொண்டோம். மாநாட்டிற்கு மத்திய பாசன மின் விசைத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் கே.எல். ராவ் அவர்கள் தலைமை வகித்தார். மாநாட்டின் முடிவில் பரம்பிக்குளம் ஆளியாறு திட்டம், பவானி திட்டம், பம்பார் படுகை, கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி திட்டம், கபினி ஆறு ஆகியவற்றின் தண்ணீரைப் பங்கீடு செய்து கொள்வது பற்றி ஒரு ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பில் நானும், கேரள அரசின் சார்பில் நம்பூதிரி பாத் அவர்களும், மத்திய அரசின் சார்பில் கே.எல். ராவ் அவர்களும் கையெழுத்திட்டோம்.

09-1449642084-tn-govt-fort3-600ஜக்கம்மா

அந்த ஒப்பந்தம் பற்றி செய்தியாளர்கள் அப்போது என்னிடம் கேட்டபோது, “ஏறத்தாழ 60 கோடியிலிருந்து 70 கோடி ரூபாய்ச் செலவில் தயாரிக்கப்பட்ட பரம்பிக்குளம் ஆளியாறு திட்டத்தால் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட ஏக்கரா நிலம் பாசன வசதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் தொடங்கப்பட்ட வேலைக்கு 50 கோடி ரூபாய்க்கு நெருக்கமாக செலவழித்திருந்தும் கூட, தமிழக அரசுக்கும், கேரள அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நிறைவு பெறாததால் ஒரு லட்சம் ஏக்கரா அளவே பயனடைய முடிந்தது. நீராறு பிரச்சினை தீராத பிரச்சினையாக இருந்தது. இப்போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி மேலும் ஒரு இலட்சம் ஏக்கரா பரம்பிக்குளம் ஆளியாறு பகுதியில் பாசன வசதி பெறும். கோவை நகருக்கு சிறுவாணி மூலம் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண இந்த ஒப்பந்தம் பயன் படுகிறது. பல ஆண்டுகளாகப் பேசப்பட்ட பிரச்சினைக்கு வெற்றிகரமான முடிவு ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நல்ல எண்ணத்துடன் திரு. சி. சுப்பிரமணியம் அவர்கள் முயற்சியால் தொடங்கப்பட்ட திட்டம் பூரணத்துவம் பெற்றதில் தனி மகிழ்ச்சி அடை கிறேன்” என்று கூறினேன்.

என்னையும், கேரள முதல்வரையும் பாராட்டிய மத்திய அமைச்சர் கே.எல். ராவ் அவர்கள், “மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினையைத் தீர்ப்பதில் இவர்கள் இந்தியாவுக்கே வழி காட்டுகிறார்கள்” என்று கூறினார். அந்த ஒப்பந்தத்தை திரு. சி. சுப்ரமணியம் அவர்கள் வரவேற்றுப் பாராட்டிய செய்தி “தினமணி” நாளிதழில் 14-5-1969 அன்று வெளியானது.

இது அன்றைய செய்தி. ஆனால் இன்றைய செய்தி என்ன? அதையும் “இந்து” நாளேடு எழுதியுள்ளது. சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளாவில் அணை கட்டுவது பற்றி மத்திய அரசின் செயலாளர் 4-5-2016 அன்று தமிழக அரசின் பொதுப்பணித் துறைச் செயலாளருக்குக் கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார். No Reply was received from the State of Tamil Nadu till August 11 and 12 when the EAC meeting was held. அதாவது இதற்கான வல்லுநர் குழுவின் கூட்டம் நடைபெற்ற 2016 ஆகஸ்ட் 11 மற்றும் 12ஆம் தேதிவரை, தமிழக அரசாங்கத்திடமிருந்து எந்தப் பதில் கடிதமும் வரவில்லை. மத்திய அரசு மற்றும் கேரள அரசிடமிருந்து அனுப்பப்பட்ட பல கடிதங்களுக்கு, தமிழக அரசிடமிருந்து எந்தப் பதிலும் இல்லாத காரணத்தால், இதற்கான குழு இந்தத் திட்டத்திற்காகப் பரிந்துரை செய்திருக்கிறது என்று “இந்து” நாளிதழ் எழுதியிருக்கிறது.

அதே செய்தியில், 1970ஆம் ஆண்டு வாக்கிலேயே இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த யோசிக்கப்பட்டதாகவும், ஆனால் தமிழக அரசின் எதிர்ப்பு காரணமாக திட்டம் கைவிடப்பட்டதாகவும் எழுதப்பட்டுள்ளது. (In fact, the Project was conceived in the 1970s and was dropped following opposition from the Tamil Nadu Government)

மத்திய அரசும், கேரள அரசும் எழுதிய பல கடிதங்களுக்கு எந்தவிதமான பதிலும் தமிழக அரசின் சார்பில் இப்போது அனுப்பப்படவில்லை என்று தமிழக அரசின் மீது குறை கூறி, அதனையே அடிப்படையாக வைத்து, சிறுவாணியின் குறுக்கே அணை கட்டுவதற்கான பரிந்துரையை குழு செய்ய நேரிட்டது என்று சாட்டப்பட்டுள்ள கடும் குற்றச்சாட்டிற்கு தமிழக அரசு விளக்கம் அளித்திருக்க வேண்டாமா? கேள்வி கேட்கும் எதிர்க் கட்சிகளை, கேள்விகளையும் பதிவு செய்யாமல், பதிலுமளிக்காமல் அவையை விட்டு நாள் கணக்கிலே வெளியேற்றும் அ.தி.மு.க. அரசு; எதையும் கேட்டு விடுவார்களோ என்று அஞ்சி எதிர்க் கட்சிகளை முன் கூட்டியே இடை நீக்கம் செய்து விட்டு காவல் துறை மானியக் கோரிக்கையை, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நிறைவேற்றிக் கொண்ட அதிமுக அரசு; சிறுவாணியின் குறுக்கே அணை சம்பந்தமாகத் தற்போது தமிழக அரசின் மீது சாட்டப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் அளிக்கப் போகிறது?

Logo Ab

இதுபோலவே தான் அண்மையில் தடப்பள்ளி, அரக்கன் கோட்டை பாசன விவசாயிகளுக்காக ஆகஸ்ட் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால் கீழ்பவானி பாசனத்தில் உயர் நீதி மன்ற உத்தரவை தமிழக அரசு மீறுகிறது என்றும், நடுவர் மன்றத் தீர்ப்பை மதிப்பதில்லை என்றும் கூறி அந்தப் பகுதி விவசாயிகள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கியிருக்கிறார்கள். இதுபற்றி விவசாயச் சங்கத் தலைவர்கள் பொன்னையன், நல்லசாமி ஆகியோர் தமிழக அரசின் மீது சாட்டியிருக்கும் குற்றச் சாட்டுகளுக்கு தமிழக அரசு என்ன விளக்கம் அளிக்கப்போகிறது?

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கேரள அரசு வெற்றி பெற்று விடுமானால், கோவை மாவட்ட மக்களுக்கான குடி நீராதாரம் அடை பட்டுப் போய் விடும் என்பதுடன்; பவானி ஆற்றுக்கு வரும் தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைந்து கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் பாசனமும் பாழ்பட்டுப் போய் விடும். காவிரியில் கர்நாடக அரசு மேகதாது அணை எனத் தொடங்கி, பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணைகள் என்று நீட்சி அடைந்து, தற்போது சிறுவாணியில் கேரள அரசின் அணை என்பது வரை தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் நசுக்கி நாசமாக்கப்பட்டு வருகிறது. இவற்றைக் கண்டு வெகுண்டெழுந்து அதிவேகமாகக் காரியமாற்றிட வேண்டிய ஜெயலலிதா அரசோ; எந்தப் பிரச்சினைக்கும் உரிய காலத்தே தீர்வு காண முயற்சி செய்யாமல், எல்லாப் பிரச்சினைகளையும் சுருட்டித் தலையணையாக்கிக் கொண்டு நீடு துயிலில் ஆழ்ந்திருக்கிறது; இந்த இலட்சணத்தில் வக்கணைக்கும், வசைமாரிக்கும் பொய்களையே பேசிப் பொழுது போக்கும் புரட்சிக்கும் மட்டும் குறைச்சலே இல்லை!

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி குறித்து, கோவை மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர், “கேரள அரசு சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி வனப் பகுதியில் உள்ள முக்காலி என்ற இடத்தில் 500 மீட்டர் நீளம், 51 அடி உயரத்தில் ரூ. 900 கோடி செலவில் அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த ஆற்றில் வரும் தண்ணீர் முழுக்க தமிழக நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து வரக்கூடியது. எனவே இதில் அணை கட்ட கேரள அரசுக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கா ததால் தான் இந்தத் திட்டத்தை தற்போது கேரள அரசு கையில் எடுத்து அதை நிறைவேற்ற தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டம் நிறைவேற்றப் பட்டால் மூன்று மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். எனவே தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கூறியிருக்கின்றனர். விவசாயிகள் சங்கத்தினரின் எச்சரிக்கையை ஏற்று ஜெயலலிதா அரசு உடனடியாக என்ன செய்யப் போகிறது? இந்த அணை கட்டும் பிரச்சினையில் உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறித் தாமதித்ததற்கு நாட்டு மக்களுக்கு ஜெயலலிதா என்ன விளக்கம் தரப் போகிறார்? நாளை 110வது விதியின் கீழ் சட்டப் பேரவை மூலம் பதில் வருமா?

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>