சட்டப்பேரவை யில்இன்று காலை 11 மணிக்கு ஓட்டெடுப்பு நடைபெறுகிறது

காலை 11 மணிக்கு ஓட்டெடுப்பு : அரசுக்கு எதிராக ஓட்டளிக்க திமுக, காங். முடிவு ; ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஓபிஎஸ் கோரிக்கை

காலை 11 மணிக்கு ஓட்டெடுப்பு : அரசுக்கு எதிராக ஓட்டளிக்க திமுக, காங். முடிவு ; ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில், பழனிச்சாமி அணியினருக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதை நிரூபிக்க ரகசிய ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் என்று வலியுறுத்த திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.தமிழகத்தில் கடந்த 12 நாட்களாக நடைபெற்ற இழுபறிக்கு நேற்று முன்தினம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமிக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

எடப்பாடி பழனிச்சாமி தனக்கு 124 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்ற கடிதத்தை கவர்னரிடம் காட்டியதன் பேரிலேயே அவரது தலைமையில் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். பதவியேற்ற நாளில் இருந்து 15 நாட்களுக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மைைய நிரூபிக்க வேண்டும் என்றும் கவர்னர் உத்தரவிட்டார். தற்போது தமிழகத்தில் 233 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஜெயலலிதா மரணம் அடைந்துள்ளதால் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. பேரவையில் அதிமுக 135, திமுக 89, காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 என்று உறுப்பினர்கள் உள்ளனர். சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அவரது அணியில் தற்போது 124 எம்எல்ஏக்கள் உள்ளதாக கூறியுள்ளார்.

நேற்று மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜும் நேற்று ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஓபிஎஸ் அணிக்கு 11 அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. திமுக , காங்கிரஸ் கட்சிகள் அரசுக்கு எதிராக ஓட்டளிக்க முடிவு செய்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் 124 எம்எல்ஏக்கள், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காக கடந்த 8ம் தேதி முதல் இன்று வரை 11 நாட்களாக காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூரில் உள்ள பீச் ரிசார்ட்சில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு கூட, ஒரே காரில் 6, 7 எம்எல்ஏக்களை அமைச்சர்கள் பாதுகாப்பாக அழைத்து வந்து, விழா முடிந்ததும் மீண்டும் கூவத்தூருக்கு திரும்ப கூட்டி சென்றனர்.

அதிமுக கொறடா உத்தரவு: சட்டப்பேரவையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் நடைபெறுவதையொட்டி, அதிமுக கொறடா ராஜேந்திரன் 134 எம்எல்ஏக்களுக்கும் அவசர கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார். இதில், “இன்று சட்டப்பேரவையில் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது அதிமுக உறுப்பினர்கள் 134 பேரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு வாக்களிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் 11 அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களிப்பார்களா? என்று கொறடாவிடம் கேட்டபோது, “ஆதரவு தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கை” உள்ளது என்றார்.

ஓபிஎஸ் அணியில் உள்ள 11 பேரும் அதிமுக கொறடா உத்தரவை மீறி எதிர்த்து வாக்களித்தால் அவர்களது எம்எல்ஏ பதவி பறி போகலாம் என்று ஒரு தரப்பினரும், பதவி பறிபோகாது என்று மற்றொரு தரப்பினரும் கூறுகிறார்கள். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்றைக்கு பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் நேற்று முன்தினம் மாலை வெளியிட்டார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டம் பிப்ரவரி 18ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு பேரவை மண்டபத்தில் நடைபெறும். அப்போது, அமைச்சரவை மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று காலை 11 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூட்டம், சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெறும். இதில், முதல்வர் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள எம்எல்ஏக்கள், ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள எம்எல்ஏக்கள் மற்றும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்களும் கலந்து கொள்வார்கள். கூட்டம் தொடங்கியதும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது தலைமையிலான அமைச்சரவையின் மீதான நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்து பேசுவார். தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராமசாமி, ஓபிஎஸ் அணியினர் உள்ளிட்டவர்களும் கருத்து தெரிவித்து பேசுவார்கள். இறுதியில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும்.

குறிப்பாக, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ், ஓபிஎஸ் அணியினர் பேசும்போது, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதை சபாநாயகர் ஏற்றுக்கொள்வாரா அல்லது வழக்கமான முறையில், ஆதரவு தெரிவிப்பவர்கள் கையை உயர்த்தி, எண்ணிக்கையின் அடிப்படையில் வாக்கெடுப்பு நடைபெறுமா என்பது இன்று பேரவை கூட்டம் தொடங்கிய பிறகுதான் தெரியவரும். இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் என்பதால், தமிழக மக்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

வாக்கெடுப்பில் சபாநாயகர் தனபால் பங்கெடுக்க முடியாது. பெரும்பான்மைக்கு 117 வாக்குகள் தேவை என்ற நிலையில், 116 வாக்குகள் பெற்று சமநிலை ஏற்பட்டால் சபாநாயகர் தனபால் வாக்களிக்கலாம். அப்போது சபாநாயகர் தனது வாக்கை அளித்து, நம்பிக்கை கோரும் அணியை வெற்றி பெற அல்லது தோல்வி அடையச் செய்ய வைக்க முடியும்.

சட்டப்பேரவை இன்று காலை 11 மணிக்கு கூடியதும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும். தீர்மானத்தின் மீது அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் பேசுவார்கள். இதைத்தொடர்ந்து சபாநாயகர் வாக்கெடுப்புக்கு விடுவார். தற்போது 233 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 117 எம்எல்ஏக்களின் வாக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்தால் மட்டுமே அவரது அமைச்சரவை நீடிக்க முடியும்.சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களின் இருக்கைகள் 6 பகுதிகளாக உள்ளன. ஒவ்வொரு பகுதியாக வாக்கெடுப்பு நடைபெறும். இதில் ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள், நடுநிலை வகிப்பவர்கள் என மூன்று பிரிவாக வாக்கெடுப்பு நடைபெறும்.

ஆதரிப்பவர்கள் எழுந்து நிற்கச் சொல்லி எண்ணப்படும். இப்படி 6 பகுதிகளிலும் உறுப்பினர்களிடம் தனித்தனியாக வாக்கெடுப்பு நடத்த வாய்ப்புள்ளது.
திமுக மற்றும் ஓபிஎஸ் அணியினர் கூறும் குற்றச்சாட்டே, “எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்தி எடப்பாடி பழனிச்சாமி அணியினர் கடந்த 10 நாட்களாக அடைத்து வைத்துள்ளனர்” என்பதுதான். அதனால், ரகசிய ஓட்டெடுப்பு நடத்தினால் மட்டுமே எம்எல்ஏக்களின் உண்மை நிலை தெரியவரும். அதனால் இன்று நடைபெறும் வாக்கெடுப்பை, ரகசிய ஓட்டெடுப்பாக, அதாவது ஒரு காகிதம் கொடுத்து அதில் தற்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை ஆதரிக்கிறேன், எதிர்க்கிறேன், நடுநிலை என எழுதி வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வற்புறுத்துவார்கள். இதற்கு சட்டப்பேரவை தலைவர் அனுமதி அளிப்பாரா? என்பது கேள்விக்குறிதான்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>