குழப்பங்களின் கூடாரமா? பிசிசிஐ:மகிழ்

22-1498115302-ravi-shastri-virat

முட்டல்… மோதல் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த கும்ப்ளே – கோஹ்லி மோதல் திரி, சாம்பியன்ஸ் டிராபியில் டமாரென வெடித்தது. சிதறியது அணியின் வெற்றி மட்டுமல்ல… கும்ப்ளேவின் பதவியும்தான். இவர் ராஜினாமாவை அறிவித்ததும், புதிய பயிற்சியாளர் பதவிக்கு பொருத்தமானவரை தேடும் படலம் துவங்கியது. சேவக், டாம் மூடி, ரிச்சர்ட் பைபஸ், ராஜ்புட், பில் சிம்மன்ஸ் உள்ளிட்டோர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். கடந்த முறையே ஒதுக்கப்பட்ட மனக்கசப்பில் இருந்த ரவி சாஸ்திரியை, கடைசி நேரத்தில் வலுக்கட்டாயமாக விண்ணப்பிக்க வைத்தார் கோஹ்லி. இவரை இப்பதவிக்கு கொண்டு வரத்தான், கும்ப்ளேவோடு மறைமுகமாக மோதினாரோ என்று கூட பரபரப்பாக பேசப்பட்டது. முதல் ‘செக்’ இந்திய அணியின் ஆலோசனைக்குழு மும்மூர்த்திகளான கங்குலி – சச்சின் – லட்சுமண், கடந்த 11ம் தேதி புதிய பயிற்சியாளர் தேர்வுக்காக கூடினர். அப்போது சேவக் இந்திய அணியின் வருங்கால திட்டங்களை விளக்கிய விதம் மூவரையும் கவர்ந்தது. இதில் மிரண்ட மூவரும் ‘ஓகே டிக்’ அடிக்க வேண்டியதுதான் பாக்கி. கோஹ்லி கருத்தையும் கேட்க வேண்டியது முக்கியம் அல்லவா? ‘கேப்டன் கருத்தை கேட்டுத்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும். ஆனாலும், பயிற்சியாளரிடம் முட்டல் – மோதலை கோஹ்லி கடைப்பிடிக்க கூடாது’ என முதல் செக் வைத்தார் கங்குலி.
‘நோ’ சொன்ன கோஹ்லி ஆலோசனைக்குழுவின் பரிந்துரையை பெரிதாகக் கருதாமல், ‘பிடித்த முயலுக்கு மூணே கால்’ என்று பிடிவாதமாய் ரவி சாஸ்திரிக்கு ‘டிக்’ அடித்தார் கோஹ்லி. தனக்கு பிடிக்காத கம்பீருக்கு நெருக்கமானவர் சேவக் என்பதாலும், தனக்கு இவரால் பிரச்னை எழலாம் என்ற ரீதியிலும் கோஹ்லி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்ற பேச்சும் பரவலாக ஓடுகிறது. இவரின் வீம்பு கங்குலியை கடுப்பேற்றி விட்டிருக்கிறது. அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகிர்கான் மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டதற்கு இவரே முக்கிய காரணம் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.

சரியான பதிலடி
தலைமை பயிற்சியாளர் இருந்தாலும், கிரிக்கெட்டில் பேட்டிங், பவுலிங் பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுவது சகஜம்தான். ஏற்கனவே இந்திய அணி, 19 வயதிற்குட்பட்டோருக்கான அணியை மெருகேற்றும் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறார். இவரையே தலைமை பயிற்சியாளராக்கி இருக்கலாமே என்று கூட கூறப்பட்டது.

ஆனால், தற்போதைய நிலையில் இந்திய அணியின் அடுத்தக்கட்ட வீரர்கள் வளர்ச்சி மிக முக்கியமானது. இன்று அணியில் இருக்கும் பல முக்கிய வீரர்கள், டிராவிட்டால் பட்டை தீட்டப்பட்டவர்கள். எனவே, சில ஆண்டுகள் டிராவிட் அந்த பணியில் தொடரட்டும் என இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதாக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

2019 உலக கோப்பை வரை ரவிசாஸ்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், கங்குலியின் கழுகுக்கண் பார்வையில், இவரது பதவி அதுவரை நீடிக்கப்படுமா என்பதுதான் ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வி. கேப்டன் பதவி வகித்தபோது, ‘தாதா’ என அழைக்கப்பட்டவர், தற்போது மற்றொரு முறையில் ‘தாதா’ அவதாரம் எடுத்துள்ளார். இனி கோஹ்லிக்கு தலைவலிதான் என்கின்றனர் ரசிகர்கள்….!

மறுபடியும் முதல்ல இருந்தா?
கடைசியாக வந்த தகவலின்படி பயிற்சியாளர் நியமனங்களை நிறுத்தி வைக்க நிர்வாகக் குழு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. ஊதிய ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த புதிய திருப்பம் பிசிசிஐ வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஜாகீர் பந்துவீச்சு ஆலோசகராக உள்ள நிலையில், முழு நேர பவுலிங் பயிற்சியாளராக பரத் அருணை நியமிக்க வேண்டும் என்று சாஸ்திரி சிபாரிசு செய்ததே குழப்பத்துக்கு காரணம் என்கிறார்கள். ‘கோடிக் கணக்கில் சம்பளம் கொட்டுவதாலேயே இப்படி அடித்துக் கொள்கிறார்கள். கூடவே அதிகார போதையும் தலைக்கேறி விடுகிறது. இதனால்தான் கிரிக்கெட் வாரியத்தில் உள்குத்து அரசியல் கொடிகட்டிப் பறக்கிறது’ என்று அங்கலாய்க்கிறார் ஒரு மாஜி நிர்வாகி. காலையில் அறிவிப்பு, மாலையில் மறுப்பு, நள்ளிரவில் புது அறிவிப்பு… என்று பிசிசிஐ செயல்படும் விதமும் அதை உறுதி செய்வதாகவே இருக்கிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>