குஜராத்: இன்று முதல்கட்டத் தேர்தல்; 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு

சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளோ, பாஜகவும், காங்கிரசும் சமபலத்தில் இருப்பதாக தெரிவிக்கின்றன.

சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளோ, பாஜகவும், காங்கிரசும் சமபலத்தில் இருப்பதாக தெரிவிக்கின்றன.

குஜராத் மாநிலத்தில் சனிக்கிழமை முதல்கட்டத் தேர்தல் நடைபெறவிருப்பதையொட்டி, ராஜ்கோட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வெள்ளிக்கிழமை சரிபார்க்கும் தேர்தல் அதிகாரிகள்.
குஜராத் சட்டப் பேரவைக்கு முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு சனிக்கிழமை (டிச.9) தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் இருக்கும் என்று ஆளும் பாஜகவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கருதுவதால், இந்தத் தேர்தல் தேசிய அளவில் மிகுந்த முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் சட்டப் பேரவைக்கு டிசம்பர் 9-ஆம் தேதி முதல்கட்டத் தேர்தலும், டிசம்பர் 14-ஆம் தேதி 2-ஆவது கட்டத் தேர்தலும் (93 தொகுதிகள்) நடைபெறவுள்ளது. முதல்கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் கடந்த வியாழக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து, 89 தொகுதிகளில் சனிக்கிழமை தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் அரசியல் கட்சியினர் உள்பட மொத்தம் 977 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் முதல்வர் விஜய் ரூபானி (ராஜ்கோட் மேற்குத் தொகுதி), காங்கிரஸ் மூத்த தலைவர் சக்திசிங் கோஹில் (மாண்டவி தொகுதி), பரேஷ் தனானி (அம்ரேலி தொகுதி) ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
தேர்தலில் மொத்தம் 2.12 கோடி பேர் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். தேர்தலையொட்டி 89 தொகுதிகளிலும் சிறப்புப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
குஜராத் மாநிலமானது, பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால், அங்கு நடக்கும் தேர்தல் தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தை ஆளும் பாஜகவைத் தோற்கடிக்கும் தீவிரத்துடன் காங்கிரஸ் பிரசாரத்தில் ஈடுபட்டது. அதேபோல், பாஜகவும் ஆட்சியைத் தக்க வைக்கும் செயல் திட்டத்துடன் பிரசாரம் செய்தது.
தேசிய அளவில் கூட்டணி வைத்துள்ள பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் இத்தேர்தலில் தனித்தே போட்டியிடுகின்றன. அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு படேல் சமூக போராட்டக் குழுத் தலைவர் ஹார்திக் படேலின் ஆதரவாளர்களால் தொடங்கப்பட்ட கட்சி, அதிருப்தி ஐக்கிய ஜனதா தளத்தினர் தொடங்கியுள்ள புதிய கட்சி ஆகியவை ஆதரவு அளித்துள்ளன.
குஜராத்தில் தொடர்ந்து 20 ஆண்டுகளாக பாஜகவே ஆட்சியில் உள்ளது. தற்போது நடக்கும் தேர்தலிலும் வெற்றி பெற்று, தொடர்ந்து 5-ஆவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் அக்கட்சி உள்ளது. பாஜக சார்பில் குஜராத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப. சிதம்பரம், ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் பைலட் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். எனினும், இந்தத் தேர்தல் பிரசாரமானது, பிரதமர் மோடி-காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இடையேயான போட்டி என்று கூறுமளவுக்கு இருவரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தனர்.
குஜராத் சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தனது தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி சுட்டிக்காட்டி பேசினார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து மணிசங்கர் அய்யரை அக்கட்சி மேலிடம் இடைநீக்கம் செய்துள்ளது.
முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை: முதல்வர் பதவிக்கான வேட்பாளராக யாரையும் பாஜகவும், காங்கிரஸýம் முன்னிலைப்படுத்தவில்லை. அவ்வாறு முதல்வர் பதவி வேட்பாளரை அறிவித்து போட்டியிடுவது தேர்தலில் தங்களுக்குச் சாதகமான முடிவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று இரு கட்சிகளும் நினைப்பதே இதற்கு காரணமாகும்.
தேர்தல் தொடர்பாக முதலில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்தன. இந்நிலையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளோ, பாஜகவும், காங்கிரசும் சமபலத்தில் இருப்பதாக தெரிவிக்கின்றன. எனவே குஜராத் தேர்தல் களம் கடைசிக் கட்ட விறுவிறுப்பில் உள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>