புதுடெல்லி: சமையல் காஸ் சிலிண்டர் மானியத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து வலியுறுத்தின. காஸ் மானியம் விஷயத்தில் மக்களை மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. சமையல் காஸ் சிலிண்டர் விலையை, ஜூலை 1ம் தேதி முதல் மாதம் ரூ.4 உயர்த்தி, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மானியம் முழுவதையும் ரத்து செய்யப் போவதாக மக்களவையில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று முன்தினம் அறிவித்தார். இதற்கு மாநிலங்களவையில் நேற்று ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகள் இணைந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மாநிலங்களவை நேற்று காலை கூடியதும், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் தெரிக் ஓ பிரையன், சமையல் காஸ் மானியம் ரத்து விவகாரம் தொடர்பாக விவாதிக்க, 267வது விதியின் கீழ் நோட்டீஸ் கொடுத்தார். அவர் பேசுகையில், ‘‘மானிய விலையில் சமையல் காஸ் வழங்கும் சமூக கடமையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை பீப்பாய்க்கு 111 அமெரிக்க டாலரிலிருந்து 48 டாலராக குறைந்துவிட்டது. ஆனால் மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் காஸ் ஆகியவற்றின் விலையை அதிகரித்துக் கொண்டே போகிறது. அரசு அளித்த வாக்குறுதிகள் என்னாச்சு? அதை ஏன் அமல்படுத்தவில்லை?’’ என்றார். மார்க்சிஸ்ட் எம்.பி. சீதாராம் யெச்சூரி பேசுகையில், ‘‘பிரதமர் வேண்டுகோள்படி, ஏழைகளுக்கு மானிய விலை காஸ் சிலிண்டர் கிடைப்பதற்காக, வசதியானவர்கள் தாங்களாக
முன்வந்து மானியத்தை விட்டுக் கொடுத்தனர். ஆனால் தற்போது அனைத்து ஏழைகளுக்கும், சிலிண்டர் விலையை ஒவ்வொரு மாதமும் ரூ.4 உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த முடிவை அரசு திரும்ப பெற வேண்டும்’’ என்றார்.
சிலிண்டர் மானியம் ரத்து முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷம் எழுப்பினர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியதும் பேசிய எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், ‘‘ஏழைகளுக்கு மானிய விலை சிலிண்டர் வழங்கப்படும் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் தாங்களாக முன்வந்து தங்களின் கேஸ் மானியத்தை விட்டுக் கொடுத்தனர். ஆனால் ஏழைகளை அரசு கொல்கிறது. சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்கள் விலை பல மடங்கு குறைந்துள்ள நிலையில், சமையல் கேஸ் சிலிண்டர் விலையை ஓராண்டுக்குள் ரூ.48 வரை அரசு உயர்த்தவுள்ளது. இது ஏற்க முடியாதது’’ என்றார். அமளி தொடர்ந்ததால் மாநிலங்களவையை மதியம் 12 மணி வரை குரியன் ஒத்திவைத்தார்.
காங் அரசு எடுத்த முடிவு: கடும் அமளிக்கு இடையே இதற்கு பதில் அளித்த பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘‘சமையல் காஸ் சிலிண்டர் விலையை ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் கொஞ்மாக உயர்த்தி, மானியம் முழுவதையும் குறைக்க வேண்டும் என்ற முடிவை ஐக்கிய முற்போக் கூட்டணி அரசு கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் எடுத்தது. அதன்படிதான் தற்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பா.ஜ அரசு கடந்த 3 ஆண்டுகளில் காஸ் இணைப்புகளை 14 கோடியிலிருந்து 21 கோடியாக உயர்த்தியுள்ளது. 2.6 கோடி ஏழைகளுக்கு காஸ் சிலிண்டர்களை இலவசமாக வழங்கியுள்ளது’’ என்றார்.
2018 வரைதான் மானியம்?
காஸ் மானியம் ரத்தாகும் என்று பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. இந்த நிலையில் மக்களவை கேள்வி நேரத்தில் நேற்று பதில் அளித்த மத்திய உணவு மற்றும் நுகர்வோர்த்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், ‘‘தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்(2013) படி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உணவு தானியங்களின் விலை மாற்றியமைக்க வேண்டும். ஆனால் 2018ம் ஆண்டு வரை அரிசி, கோதுமை மானியத்தை தொடர முடிவு செய்துள்ளோம்.
இத்திட்டத்தின் கீழ் அரிசி கிலோ ரூ.3க்கும், கோதுமை கிலோ ரூ.2க்கும், பண்படுத்தப்படாத தானியங்கள் ரூ.1க்கும் வழங்கப்படுகிறது. யாரும் பசி இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு. இத்திட்டத்தை முறையாக அமல்படுத்த மத்திய அரசு சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்றார்.
2018 வரை மானியம் வழங்கப்படும் என்று அறிவித்த மத்திய அமைச்சர் பஸ்வான் அதன்பின் மானியம் நிறுத்தப்படுமா அல்லது விலை மாற்றம் மட்டும் செய்யப்படுமா என்பதை அறிவிக்கவில்லை. இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.