காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

2016-21-9-02-29-21m

புதுடெல்லி : காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது. காவிரி நீரை கர்நாட அரசு காவிரி நடுவர் மன்ற இறுத்தித் தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீர் திறந்து விடாததால் தமிழகத்தில் குறுவைச் சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால், டெல்டா மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை நம்பி இருக்கும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், தற்போது பயிரிடப்பட்டுள்ள சம்பா சாகுபடியையாவது காப்பாற்ற வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். பல விவசாய அமைப்புகள் போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், நடப்பு ஆண்டில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான 3 மாதங்களில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 50 டிஎம்சி தண்ணீரை காவிரியில் இருந்து உடனடியாக வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் கடந்த 5ம் தேதி விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘’சம்பா பயிர் சாகுபடிக்காக விவசாயிகளின் நலன் கருதி தமிழகத்திற்கு 10 நாட்களுக்கு தினமும் 15 ஆயிரம் கன அடி தண்ணீரைக் கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீர் தேவை என்றால் 3 நாட்களுக்குள் தமிழக அரசு காவிரி கண்காணிப்புக் குழுவை அணுகலாம். கண்காணிப்புக்குழு தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலித்து 10 நாட்களுக்குள் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டன. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் திருத்தங்கள் செய்ய வேண்டும் எனக் கோரியும் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு கடந்த 12ம் தேதி நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், எங்கள் தீர்ப்பை அமல்படுத்தாமல் இதுபோன்ற மனுக்களைத் தாக்கல் செய்தது ஏற்க முடியாது. கர்நாடக அரசின் மனு ஏற்கத்தக்கதல்ல. கர்நாடக அரசு வரும் 20ம் தேதிவரை தினமும் 12 ஆயிரம் கன அடி என்ற அளவில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

கண்காணிப்பு குழு: காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், கடுமையான விவாதத்திற்குப்பின், செப்டம்பர் 30ம் தேதிவரை வினாடிக்கு 3 ஆயிரம் கன அடிவீதம் தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கண்காணிப்புக் குழு உத்தரவிட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பாலி நாரிமன் வாதிடும்போது, கர்நாடக மாநிலத்தின் குடிநீர் தேவையை தீர்ப்பதற்கே தண்ணீர் போதுமானதாக இல்லை. இந்நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது. இதனால், கர்நாடக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாங்கள் திறந்துவிடும் தண்ணீரை தமிழகம் மேட்டூர் அணையில் சேமித்துவைக்கிறது. ஒவ்வொரு மாதமும் தண்ணீர் திறந்துவிடுவது முடியாத காரியம் என்று வாதிட்டார்.

அப்போது, மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் ஆஜராகி, காவிரி கண்காணிப்புக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவையும், உத்தரவையும் அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே வாதிடும்போது, தண்ணீரைச் சேமித்துவைத்துத்தான் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. எங்களுக்கு சேர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தரவேண்டும் என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “ கடந்த 2007ல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் ஏன் இதுவரை காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. எனவே, 4 வாரத்திற்குள் காவிரி ேமலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்.

அடுத்த விசாரணையின்போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்ததற்கான அறிவிப்பாணையை காட்ட வேண்டும். இல்லையென்றால் மீண்டும் ஒரு உத்தரவைப் பிறப்பிக்க நேரிடும்.கடந்த 1894 முதல் உள்ள இந்த பிரச்னையை இன்னும் எவ்வளவு நாட்களுக்கு நீட்டித்துக்கொண்டிருப்பீர்கள்? காவிரி மேலாண்மை வாரியம்அமைக்க நடவடிக்கை எடுங்கள். வரும் 27ம் ேததிவரை தமிழகத்திற்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் கர்நாடகா தினமும் தண்ணீர் திறந்து விட வேண்டும் . வழக்கு விசாரணை வரும் 27ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.

கடந்த 1894 முதல் உள்ள இந்த பிரச்னையை இன்னும் எவ்வளவு நாட்களுக்கு நீட்டித்துக்கொண்டிருப்பீர்கள்.
* கடந்த 2007ல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் ஏன் இதுவரை காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை.
* அடுத்த விசாரணையின்போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்ததற்கான அறிவிப்பாணையை காட்ட வேண்டும். இல்லையென்றால் மீண்டும் ஒரு உத்தரவைப் பிறப்பிக்க நேரிடும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>