காவிரி நீருக்கு பதில் மின்சாரம் : உச்ச நீதிமன்றத்தில் கேரளா

3

புதுடெல்லி : காவிரி நதி நீர் விவகாரத்தில், கர்நாடகாவிற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் கேரளாவுக்கு மின்சாரத்தை கொடுத்து அதை ஈடு செய்ய வேண்டும் என அம்மாநில வக்கீல் வாதிட்டார். காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் கடந்த மாதம் 11ம் தேதி முதல் நடந்து வருகிறது. வாரத்திற்கு மூன்று நாட்கள் என்ற வீதம் தொடர்ந்து 15 நாள் நடக்கும் இதில், பத்தாவது நாள் விசாரணை நேற்று நடந்தது. இதுவரை கர்நாடக மாநிலத்தின் வாதங்களை கேட்டு வந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடந்த மாதம் 27ம் தேதி முதல் கேரள மாநிலத்தின் வாதங்களை கேட்க தொடங்கினர். கேரளாவின் பல்வேறு நீர் திட்டங்களுக்கு கர்நாடகாவுடன் இணைந்து தமிழகம் தடையாக இருந்து வருகின்றது என பல்வேறு வாதங்களை முன்வைத்த கேரள அரசு, நேற்று தனது வாதங்களை தொடர்ந்தது.

அம்மாநில வழக்கறிஞர் குப்தா வாதிடுகையில், “காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகமும், கர்நாடகமும் தொன்மையான நாகரிகத்தை பின்பற்றி வருகின்றது. கேரளாவை பொருத்தவரையில் புனல் மின்திட்டங்களுக்கு முழுமையான அனுமதி தரப்படவில்லை. மேலும் நீர் பயன்பாட்டில் புனல் மின்திட்டங்களுக்கு குறைந்த அளவு முக்கியத்துவமே கேரளாவிற்கு வழங்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர நீர் மின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு காவிரி நடுவர்மன்ற தீர்பாயம் கூட கேரளாவிற்கு அனுமதியளிக்கவில்லை. மேலும் நாட்டில் உள்ள பிற மாநிலங்களை போல் அணு மற்றும் அனல் மின்நிலையங்களை அமைக்க கேரள மாநிலத்தில் போதுமான புவியமைப்பு கிடையாது. ஒருவேலை கர்நாடகத்திற்கு நீர் பற்றாக்குறை ஏற்படும்பட்சத்தில் அதற்கு பதிலாக மின்சாரத்தை கொடுத்து ஈடு செய்ய வேண்டும்’’ என்றார்.

வாதங்களை தொடர்ந்து நீதிபதி கூறுகையில், “காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் கேரள மாநிலத்தின் அனைத்து வாதங்களையும் நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது. நதிநீர் பங்கீடு விவகாரத்தில் கேரள அரசு, நீர் குறித்த அனைத்து ஆவணங்களையும் எழுத்து வடிவிலாக நீதிமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் காவிரி இறுதி விசாரனையில் இன்றோடு கேரள மாநிலத்தின் வாதங்கள் நிறைவடைந்தது. நாளை முதல் தொடர்ந்து 5 நாட்கள் தமிழக வாதங்கள் மேற்கொள்ளப்படும்’’ என்று கூறினர். இதையடுத்து காவிரி விவகாரத்தில் தமிழக வாதங்கள் முன் வைக்கபடவுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>