காவிரி உரிமையை விட்டுத்தரக் கூடாதுபா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு

2016-29-9-01-06-14v

தமிழ்நாட்டில் சம்பா சாகுபடிக்காக இன்று முதல் காவிரியில் 3 நாட்களுக்கு வினாடிக்கு 6000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, காவிரி நீர்ப்பகிர்வு குறித்து இப்போது ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக  இரு மாநிலங்களின் முதலமைச்சர்களை அழைத்து பேசும்படி மத்திய அரசுக்கு ஆணையிட்டுள்ளது.

காவிரி சிக்கலில் நடுவர் மன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி விட்ட நிலையில், அதை நடைமுறை படுத்துவது தான் இயல்பானதாகவும், சரியானதாகவும் இருக்க முடியும். மாறாக மீண்டும் பேச்சு நடத்தினால் அது காவிரி பிரச்சினையை 25 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லும் ஆபத்து உள்ளது. அதனால் தான் காவிரி பிரச்சினை குறித்து கர்நாடகத்துடன் எந்த பேச்சும் நடத்தக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனினும், காவிரி பிரச்சினை பற்றி  இரு மாநில அரசுகளையும் அழைத்து பேசும்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், அதை  ஏற்று பேச்சு நடத்துவது தான் சரியானதாக இருக்கும். அதை உணர்ந்து தில்லியில் நாளை நடைபெறும்  பேச்சுக்களில் தமிழகம் பங்கேற்கவிருப்பது சரியானதாகும்.அதே நேரத்தில் இந்த பேச்சுக்களால் எந்தவித பின்னடைவும் ஏற்படாத வகையில் தமிழக அரசு எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் செயல்பட வேண்டும்.

காவிரி பிரச்சினை தொடர்பாக இரு மாநில அரசுகளையும் அழைத்துப் பேசும்படி மத்திய அரசுக்கு ஆணையிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு அதன் நோக்கத்தை தெளிவாக தெரிவித்திருக்கிறது. ‘‘காவிரி சிக்கல் குறித்து பேச்சு நடத்தும்படி நாங்கள் கூறுவதற்கு காரணம் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தவும், அதை சம்பந்தப்பட்ட மாநிலங்களை செயல்படுத்த வைக்கவும் நீதித்துறைக்கு அதிகாரம் இல்லை என்பதால் அல்ல. மாறாக கூட்டு ஜனநாயக உணர்வின் அடிப்படையில் இரு மாநில முதலமைச்சர்களும், பிரதமரும் தங்களுக்கிடையிலான சிக்கலை பேசித் தீர்த்துக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால் தான்’’ என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். அந்த வகையில் காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் பக்கம் உள்ள நியாயத்தையும், கர்நாடக அரசு செய்து வரும் அடாவடிகளையும் நன்றாக உணர்ந்துள்ள நீதிபதிகள், இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிப்பதற்கு முன் கடைசி வாய்ப்பாக இப்பேச்சுக்களை நடத்த ஆணையிட்டிருப்பதாகவே தோன்றுகிறது.

கடந்த காலங்களிலும் இதேபோன்ற வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதன்படி காவிரி பிரச்சினை பற்றி 06.01.1997 அன்று அப்போதைய தமிழக முதலமைச்சர் கலைஞரும், கர்நாடக  முதலமைச்சர் ஜெ.எச்.படேலும் பேச்சு நடத்தினார்கள். அதேபோல், முல்லைப் பெரியாறு சிக்கல் பற்றி 29.11.2006 அன்று புதுதில்லியில் அப்போதைய தமிழக முதலமைச்சர் கலைஞரும், கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனும் பேச்சு நடத்தினர். இந்த 2 பேச்சுக்களிலும் உடன்பாடு ஏற்படவில்லை என்ற போதிலும், தமிழகத்தின் பக்கம் உள்ள நியாயத்தின் அடிப்படையில் தமிழகத்திற்கு சாதகமாகவே உச்சநீதிமன்றம்  தீர்ப்பளித்தது. எனவே, நாளைய பேச்சுக்களின் முடிவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் காவிரி சிக்கலில் தமிழகத்திற்கு உள்ள உரிமைகளை ஆதாரங்களுடன் தமிழக அரசுக் குழுவினர் வலியுறுத்த வேண்டும்.

உச்சநீதிமன்றம் ஆணையிட்டவாறு அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், உச்சநீதிமன்றம் ஆணையிட்டவாறு காவிரியில் வினாடிக்கு 6000 கனஅடி வீதம் அடுத்த 3 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும், மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தமிழக அரசுத் தரப்பு ஆதாரங்களுடன் முன்வைக்க வேண்டும். கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள 4 அணைகளுக்கும் நேற்று இரவு நிலவரப்படி வினாடிக்கு 10,879 கன அடி தண்ணீர் வருவதையும், அணைகளின் நீர் இருப்பு கடந்த ஒரு வாரத்தில் 5 டி.எம்.சி. உயர்ந்து 30.53 டி.எம்.சி.யாக அதிகரித்திருப்பதையும் சுட்டிக்காட்டி தமிழகத்திற்கான தண்ணீர் பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

அதேநேரத்தில் தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்க்கும் எந்த முடிவுக்கும் தமிழக அரசு ஒப்புக் கொள்ளக்கூடாது. அது போராடிப் பெற்ற நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு உள்ளிட்ட உரிமைகளை பறித்துவிடும் என்பதால் இந்த விஷயத்தில் தமிழக அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதேபோல், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசும், காவிரி ஆணையத்தை இனியும் தாமதமின்றி அமைக்க மத்திய அரசும் முன்வர வேண்டும். 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>