காசிமேடு பகுதியில் பதுக்கிய ரூ.1 கோடி போதை பொருள் பறிமுதல்

jakkammanews

சென்னை, பிப்.18: குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பிலான போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகம் முழுவதும் குட்கா, பான்பராக், ஹான்ஸ், மாவா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்ய அரசு தடைவிதித்துள்ளது. ஆனால், பெரும்பாலான கடைகளில் தடையை மீறி போதை பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன. டெல்லி, மும்பை ஆகிய பகுதிகளில் இருந்து லாரி மற்றும் ரயில்கள் மூலம் கடத்தி வரப்படும் இந்த போதை பொருட்கள், வட சென்னையில் உள்ள தனியார் குடோன்களில் பதுக்கி வைத்து, கடைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அவ்வப்போது, சோதனை நடத்தி போதை பொருட்களை பறிமுதல் செய்து வந்தாலும், கடைகளில் விற்கப்படுவது குறைந்தபாடில்லை.

இந்நிலையில், காசிமேடு எஸ்.என்.செட்டி தெருவில் உள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பதுக்கி வைத்து, மினி லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஜெயகோபால், சிவசங்கரன், ஜெபராஜ், இளங்கோவன், சுந்தரராஜ் உள்ளிட்டோர் நேற்று அந்த குடோனில் சோதனையிட சென்றனர். அப்போது, அதிகாரிகளை கண்ட குடோன் உரிமையாளர் அங்கிருந்து தப்பியோடினார்.
இதையடுத்து, அதிகாரிகள் குடோனில் சோதனையிட்டபோது பண்டல், பண்டலாக சுமார் 8 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியாகும்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில், ராயபுரம் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய குடோன் உரிமையாளர் பாலாஜி என்பவரை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இந்த போதை பொருட்கள் டெல்லியில் இருந்து அழகு சாதன பொருட்கள் என்ற போர்வையில் லாரியில் ெகாண்டு வரப்பட்டு, இங்கிருந்து பல்வேறு கடைகளுக்கு சப்ளை செய்யபட்டு வந்தது தெரியவந்தது. இதில், தொடர்புடைய நபர்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>