கர்நாடகாவில் நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்திமுக தலைவர் கருணாநிதி

daily_news_4348522424698

சென்னை : “கர்நாடகாவில் நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்று திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்தது. திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். கூட்டத்தில், பொது செயலாளர் க.அன்பழகன், தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், துணை பொது செயலாளர்கள் வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், சென்னை மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம் மற்றும் திமுக அனைத்து மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

1967ம் ஆண்டிலிருந்து தலைவர் கருணாநிதி பொதுப் பணித்துறை அமைச்சராகவும், பின்னர் தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்றதிலிருந்து காவிரிப் பிரச்னைக்குத் தீர்வு காண நடுவர் மன்றம் ஒன்றினை அமைக்க வேண்டுமென்று தொடர்ந்து மத்திய அரசை வற்புறுத்தி வந்தார். சட்டப் பேரவையிலும் இதுகுறித்து தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார். இறுதியாக வி.பி.சிங் பிரதமராக இருந்த நேரத்தில், தலைவர் கருணாநிதி மேற்கொண்ட அணுகுமுறையின் காரணமாக காவிரி பிரச்னைக்கு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எப்படி அமல்படுத்துவது என்பதை நடுவர் மன்றம் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. “காவிரி மேலாண்மை வாரியம்”-“காவிரி ஒழுங்காற்றுக் குழு” என்ற இரண்டு அமைப்புகளை உருவாக்கி, இவைகளின் மூலம் நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டுமென்று காவிரி நடுவர் மன்றம் குறிப்பிட்டிருக்கிறது. இந்தக் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு தான் அரசியல் அங்கீகாரம் உண்டு.

கர்நாடக அரசைக் கேள்வி கேட்கவும், கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கவும் இந்தக் குழுவுக்குத்தான் அதிகாரம் உண்டு. இந்தக் குழுக்களை குறிப்பிட்ட காலத்திற்குள் மத்திய அரசு அமைத்திருந்தால் இப்போது ஏற்பட்டிருக்கின்ற பிரச்னைகள் எல்லாம் வந்தே இருக்காது. இந்தக் குழுக்களை அமைக்க வேண்டுமென்று தமிழகத்திலிருந்து எல்லா தரப்பினரும் தொடர்ந்து வற்புறுத்தியும், மத்திய அரசு என்ன காரணத்தினாலோ இவைகளை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருவதை மாவட்ட செயலாளர்களின் இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதோடு, இனியாவது உடனடியாக இந்தக் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டுமென்று வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது. காவிரி பிரச்னை போன்ற பொதுப் பிரச்னைகள் உருவாகும் போதெல்லாம் தமிழகத்தில் ஆட்சியிலே இருப்பவர்கள், அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டங்களைக் கூட்டி, அவர்களுடைய கருத்துக்களை அறிந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை மாநில அரசு எடுப்பதுதான் இதுவரையில் தமிழகத்தில் இருந்து வந்த நிலை. ஏன்? மற்ற மாநிலங்களிலும் இந்த ஜனநாயக முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், தமிழகத்தில் அதிமுக அரசை நடத்திக் கொண்டிருக்கின்ற முதல்வர் ஜெயலலிதா, அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டங்களை கூட்டுங்கள் என்று தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளின் சார்பில் வேண்டுகோள் விட்டபோதும், சட்ட மன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பலமுறை அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டங்களை கூட்டும்படி கோரிக்கை வைத்தபோதும், அதைப்பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல், “தானே அறிவாளி, எல்லாமே தனக்குத் தெரியும், எவர் யோசனையும் தனக்குத் தேவையில்லை, தானே மன்னன், தானே நாடு” என்று கூறிய லூயி மன்னன் பாணியில் முதல்வர் ஜெயலலிதா, அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். ஆனால் தண்ணீரை கொடுக்க வேண்டிய இடத்திலே உள்ள கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, கர்நாடகத்தில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தைப் பலமுறை கூட்டியிருக்கிறார். அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு பிரதமர் மற்றும் மத்திய நீர் வளத்துறை அமைச்சரையும் சந்தித்து, பிரச்னைகளை அவர்களிடம் விளக்குகிறார்.

அது மட்டுமல்லாமல் கர்நாடகத்தில் உள்ள முன்னாள் பிரதமர், முன்னாள் முதல்வர்கள், நீதியரசர்கள், சட்ட வல்லுநர்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்கிறார். அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டிப் பேசுகிறார். ஆனால் தமிழ்நாட்டில் எதுவுமே இல்லாத நிலைதான் உள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் இத்தகைய சர்வாதிகார போக்கினை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கின்றது. காவிரிப் பிரச்னைக்காக தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் குரல் கொடுத்து வரும் நிலையில், கர்நாடகத்தில் வன்முறைகள் தலைதூக்கி, தமிழ் இளைஞர் சந்தோஷ் என்பவரை கடுமையாகத் தாக்கினர். தமிழகத்திலிருந்து சென்ற வாகனங்களையெல்லாம் தீக்கிரையாக்கினர். பல கோடி ரூபாய் இழப்புகளை கர்நாடகத்தில் தமிழர்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கர்நாடகத்தில் சிறையிலே இருந்த கைதிகளை விடுவித்து அவர்கள் மூலமாக, அந்த மாநிலத்தில் வாழும் தமிழர்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

வழக்கமாக குறுவை சாகுபடிக்கென ஜூன் 12ம் தேதி வாக்கில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும் இதற்குரிய முன்னேற்பாட்டுப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டிருக்க வேண்டும். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை எடுத்துச் செல்லும் ஆறுகள், வாய்க்கால்கள் ஆகியவற்றை சீரமைத்துப் பராமரிப்பதோடு மட்டுமன்றி, மேட்டூர் அணை நீர்வரத்தை உறுதி செய்யும் வகையில், அணையின் நீர் மட்டத்தை கண்காணிப்பதுடன், போதிய நீர் வரத்து இல்லை எனில் கர்நாடக மாநில அரசுடன் பேசி நீர் வரத்தை உறுதி செய்திருக்க வேண்டும். மேற்கண்ட பணிகளைச் செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாமல் தமிழக அரசு செயலற்றுத் தூங்கிக் கொண்டிருந்த காரணத்தால், தமிழகம் முழுவதுமுள்ள விவசாயிகளே சாலையில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

எதிர் விளைவாகக் கர்நாடக மாநிலத்தில் உள்ளவர்களும் போராடும் நிலை ஏற்பட்டதோடு, இருமாநில மக்களிடையே மோதலும், பொருள் சேதமும் ஏற்பட்டது. கர்நாடகத்தில் நிலவிய இத்தகைய வன்முறைகளை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதோடு, இழப்புக்கு ஆளானவர்களுக்கு உரிய நிவாரணத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கூட்டம் தொடங்கியதும் மறைந்த திமுக துணைப் பொதுச்செயலாளர் சற்குணபாண்டியனுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>