கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதலை கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு: பல லட்சம் கடைகள் மூடப்படும்; தனியார் பள்ளிகள் இயங்காது

evening-tamil-news-paper_34992617369

சென்னை : கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் கடைகள் அடைக்கப்படுகிறது.

ஆம்னி பஸ், லாரி, வேன்கள் ஓடாது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க தமிழகம் முழுவதும் 1.18 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காவிரி நீர்ப் பிரச்னையில் தமிழகத்தின் நியாயமான உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்தும், தமிழகம் முழுவதும் இன்று முழு கடையடைப்பு மற்றும் ரயில் மறியல், சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், ஈரோடு தெய்வசிகாமணி தலைமையிலான தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டியக்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் ஆகியோர் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பல கட்சிகளும் ஆதரவு: போராட்டத்திற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

அது மட்டுமல்லாமல், இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு முக்கிய எதிர்க்கட்சியான திமுக முழு ஆதரவு அளித்துள்ளது. மேலும் காங்கிரஸ், பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக, தமாகா, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், எஸ்.டி.பி.ஐ., தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் முழு ஆதரவு அளித்துள்ளன. முழு அடைப்பு போராட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் இன்று மொத்தம் மற்றும் சில்லரை வணிக நிறுவனங்கள், மளிகை, ஜவுளி, நகை, ஹார்டுவேர்ஸ், ஓட்டல்கள், டீக்கடைகள், உணவு விடுதிகள், சிறு டிபன் கடைகள், ஸ்வீட் ஸ்டால், பேக்கரிகள், மாவு மில்கள், சுய தொழில் நிறுவனங்கள், நடைபாதை கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து காய்கறி, பழம், பூ மார்க்கெட்டுகள், மீன், கறிக்கடைகள் செயல்படாது. வாரச்சந்தை இயங்காது. இவை அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்பட்டிருக்கும். மேலும், 4.50 லட்சம் லாரிகள், 4.50 லட்சம் மினிவேன்கள் உள்பட சரக்குகளை ஏற்றி செல்லும் 11.50 லட்சம் வாகனங்கள் ஓடாது. இதுதவிர, 55 ஆயிரம் மணல் லாரிகள் இயங்காது.

ஆம்னி பஸ்கள் அனைத்தும் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்துக்கு ஆட்டோ ெதாழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் ஆட்டோக்களும் இயங்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு போர்வெல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநில இணை செயலாளர் குணசீலன் கூறுகையில், ‘தமிழ்நாடு ரிக் (போர்வெல்) உரிமையாளர்கள் சம்மேளனத்தின் அனைத்து மாவட்ட கிளைச் சங்கங்களின் சார்பில் முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர்வெல் லாரிகள் இயங்காது’ என்றார்.

பெட்ேரால் பங்க் மூடல்: போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகம், புதுச்சேரியில் உள்ள 48,000 பெட்ரோல், டீசல் பங்குகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பால் விற்பனை நிலையங்கள், வினியோக மையங்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அடைக்கப்படுகிறது. கடையடைப்பு, ரயில் மறியல் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 1.18 லட்சம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர், திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடைகளை அடைக்க சொல்லி யாரையும் வற்புறுத்தக்கூடாது.

வன்முறையில் ஈடுபடுபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

பஸ், ரயில் ஓடும்: தமிழகம் முழுவதும் பஸ், ரயில்கள் வழக்கம் போல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவைகளில் பாதுகாப்புக்காக போலீசார் அனுப்பப்படுவார்கள் என்று தெரிகிறது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறுகையில், “தமிழத்தில் இன்று நடைபெறும் போராட்டத்தில் 21 லட்சம் கடைகள் அடைக்கப்படும். மாவட்ட வணிக சங்கங்கள், பல்வேறு விவசாய சங்கங்களின் இயக்கங்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் சார்பில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்.

இப்போராட்டங்களில் வணிகர்கள் பெருமளவில் கலந்து கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறுகையில், “போராட்டத்தில் 65 லட்சம் கடைகள் அடைக்கப்படும். மாவட்ட தலைநகரங்களில் காலை 10 மணிக்கு கர்நாடக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வளாகத்தில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்றார்.

தனியார் பள்ளிகள் இயங்காது: தனியார் நடத்தும் 18,000 பள்ளிகள் இன்று இயங்காது. தனியார் பள்ளிகளில் இயங்கும் 28 ஆயிரம் வாகனங்களும் இயங்காது.

பள்ளிகளில் படிக்கும் சுமார் 1 கோடியே 30 லட்சம் மாணவ, மாணவியர், 1 லட்சம் ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வரமாட்டார்கள்.

தனியார் பள்ளிகள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை இந்த வேலை நாள் ஈடு செய்யப்படும். இன்று நடக்க இருக்கும் தேர்வுகள் வேறு ஒருநாள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் மேனிலைப் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் நந்தகுமார் தெரிவித்தார். 2.5 லட்சம் ஆட்டோக்கள்: தமிழகம் முழுவதும் நாளை (இன்று) சுமார் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான ஆட்டோக்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.

சென்னையில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான ஆட்டோக்கள் ஓடாது.

ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், அபே ஆட்டோக்கள் என அனைத்து விதமான ஆட்டோக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றன. அண்ணா தொழிற்சங்கத்தை தவிர்த்து, ஏஐடியூசி, தொமுச, சிஐடியு, ஐஎன்டியுசி, தேமுதிக தொழிற்சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் பங்கேற்கும் என்று ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொது செயலாளர் சேஷசயனம் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகள் உண்டு

அரசு, மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் வழிகாட்டுதலின்படியும், காலாண்டுத் தேர்வு அட்டவணையின் படியும், அனைத்து அரசு, மெட்ரிக்குலேஷன் மற்றும் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வுகள் நடக்கும்.

மேலும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அனைத்து மெட்ரிக்குலேஷன், மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

35,000 நகைக்கடைகள் அடைப்பு

சென்னை தங்கம், வைரம் நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: தமிழகத்தில் இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு நகை வியாபாரிகள் சங்கம் முழு ஆதரவு அளிக்கிறது. இன்று தமிழகம் முழுவதும் 35,000 நகைக்கடைகள் மூடப்படும். சென்னையில் மட்டும் சுமார் 7,000 நகைக்கடைகள் இயங்காது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நகைக்கடைகள் மூடப்பட்டிருக்கும்.

தியேட்டர்கள் மூடல்

முழுஅடைப்பை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இன்று காலை மற்றும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. அதே போல் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுகின்றன.

* இன்று 48,000 பெட்ரோல் பங்குகள் மூடப்படும். பால் விற்பனை காலை 6 முதல் 9 மணி வரை மட்டுமே நடைபெறும்.
* 18 ஆயிரம் தனியார் பள்ளிகள் மூடப்படும். 1.30 கோடி மாணவர்கள், 1 லட்சம் ஆசிரியர்கள் வரமாட்டார்கள். இன்றைய தேர்வு நாளை நடைபெறும்.
* குறுந்தொழில் கூட்டமைப்பில் 25 லட்சம் தொழிலாளர் பணிக்கு வரமாட்டார்கள்.
* கடைகள், பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் டீக்கடைகள், காய்கறி கடைகள் மூடப்படும்.
* தனியார் பேருந்துகள், மினிபஸ்கள், ஆம்னி பஸ்கள் ஓடாது.
* 12 லட்சம் லாரிகள், மணல் லாரிகள், 6 ஆயிரம் போர்வெல் லாரிகள், இரண்டரை லட்சம் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் ஓடாது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>