கர்நாடகத்தின் ‘குடிநீர் தேவைக்காக’ மட்டுமே காவிரி நீரை பயன்படுத்த வேண்டும் : மாநில சட்டமேலவையில் தீர்மானம்

2016-23-9-14-46-48m

பெங்களூரூ: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தருவதை எதிர்த்து கர்நாடக சட்டமேலவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கர்நாடகாவின் குடிநீர் தேவைக்காக மட்டுமே காவிரி நீரை பயன்படுத்த வேண்டும் என்று அம்மாநில சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்விகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தை தவிர்க்க ‘குடிநீர் தேவைக்காக’ என்று குறிப்பிடப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒருமனதாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர் கர்நாடகா சட்டமேலவை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக காவிரியிலிருந்து கூடுதல் நீரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 20-ம் தேதி தீர்ப்பளித்தது. இதனால் கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், தமிழகத்திற்கு கூடுதல் நீர் திறக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்ற கர்நாடகா அரசு அம்மாநிலத்தின் இரு அவைகளின் சிறப்பு கூட்டு கூட்டத்தை இன்று கூட்டியது.

கூட்டத்தில் முதலில் எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் தீர்மானத்தை தாக்கல் செய்து, உறுப்பினர்கள் அதன் மீது விவாதித்து, ஒருமனதாக ஒப்புதல் தர வேண்டும் என பேசினார். ஜெகதீஷ் ஷெட்டர் இந்த தீர்மானத்தை ஆங்கிலத்திலும், அதே தீர்மானத்தை மதசார்பற்ற ஜனதா தள உறுப்பினர் தத்தா, கன்னடத்திலும் 2 முறை தாக்கல் செய்தனர். பின்னர் இந்த தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடத்தினர். இறுதியாக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

கர்நாடக சட்டமேலவையில் நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்தில் உள்ள விவரம் பின்வருமாறு: நடப்பாண்டில் மழை பொய்த்ததால் கர்நாடகாவில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இருப்பினும் தற்போதைய தண்ணீர் தட்டுப்பாட்டின் அளவு குறித்து வரும் ஆண்டு ஜனவரி 31ம் தேதிக்கு பிறகே அதிகாரப்பூர்வமாக தெரியவரும். காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, கே.ஆர்.எஸ், ஹேமாவதி, ஹாரங்கி மற்றும் கபினி ஆகிய நான்கு அணைகளின் நீர் மட்டம் மிகவும் குறைந்துள்ளது.

மேற்கண்ட 4 அணைகளின் மொத்த நீர்இருப்பே, 27.6 டிஎம்சி தண்ணீர் மட்டுமே ஆகும். இந்த யதார்த்த நிலையை கருத்தில் கொண்டு, பெங்களூர் நகரம் உள்பட காவிரி பாசன பகுதியிலுள்ள கிராமம் மற்றும் நகரங்களின் குடிநீர் தேவைக்காக மட்டுமே 4 அணைகளிலிருந்தும் தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என்று இந்த சட்டசபை வலியுறுத்துகிறது. கர்நாடகாவில் வாழ்வோர் நலனை கருத்தில் கொண்டு, 4 அணைகளின் தண்ணீரை பெங்களூர் உள்ளிட்ட காவிரியை நம்பியுள்ள பகுதிகளின் குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு எந்த காரணத்திற்கும் இந்த அணைகளின் தண்ணீரை பயன்படுத்த கூடாது என்பதற்கு பேரவை அங்கீகாரம் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>