கனத்த இதயத்துடன் தண்ணீர் தருகிறோம்:கர்நாடக முதல்வர் சித்தராமையா

காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. இது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானதாகும்.

காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. இது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானதாகும்.

காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு கர்நாடகத்துக்கு பாதகமாக இருந்தாலும் நீதிமன்ற உத்தரவை மதித்து கனத்த இதயத்துடன் தமிழகத்துக்கு வரும் 20-ஆம் தேதி வரை தினமும் 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடுகிறோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
காவிரி விவகாரத்தை முன்வைத்து யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த முதல்வர் சித்தராமையா சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு யாராவது வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
இந்த விவகாரத்தில் தலையிட்டு சுமுகத் தீர்வு காண உதவுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தாம் கடிதம் எழுதியிருப்பதாகவும் விரைவில் அவரை சந்தித்துப் பேச இருப்பதாகவும் முதல்வர் சித்தராமையா குறிப்பிட்டார்.
காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக செவ்வாய்க்கிழமை முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை அளித்த தீர்ப்பையடுத்து, பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட கலவரத்தில் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. இது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானதாகும். நாள்தோறும் 15 ஆயிரம் கன அடி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என செப்.5-ஆம் தேதி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், செப்.12-ஆம் தேதி 12 ஆயிரம் கன அடியாக குறைத்து, செப். 20-ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது.
அணைகளில் நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில், செப்.20 வரை தண்ணீர் திறக்க முடியுமா என்பது தெரியவில்லை. எனினும், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற முடிவு செய்துள்ளோம். கர்நாடகத்தின் நிலையை மீண்டும் நீதிமன்றத்தில் தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
காவிரி நதி நீர்ப் பங்கீடு பிரச்னையில் தற்போதைய தீர்ப்புகளைவிட அக்.18-ஆம் தேதி வெளியாகும் இறுதித் தீர்ப்பை ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளோம்.
தமிழர்களுக்குப் பாதுகாப்பு: காவிரி விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் மேற்கொண்ட போராட்டம் காரணமாக மாநகரின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். பெங்களூரில் வசிக்கும் தமிழர் உள்பட அனைத்து மொழிச் சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பு வழங்கப்படும். பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டம்- ஒழுங்கு சீர்குலையாத வகையில் கடும் நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கன்னடர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது குறித்து அந்த மாநில முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
இதேபோல, கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி அவரும் எனக்கு கடிதம் எழுதியுள்ளார். இரு மாநில மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பெங்களூரு சர்வதேச நகரமாக ஆகியுள்ளது. எனவே, அதன் புகழுக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது. 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை பெங்களூரு, மண்டியா, மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எந்த ஓர் இடையூறு இல்லாமல் குடிநீர் வழங்கப்படும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவிரி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும். இதுகுறித்து பேச அவரிடம் நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இரண்டொரு நாளில் நரேந்திர மோடியைச் சந்தித்து, மாநிலத்தின் நிலைமையை விளக்குவேன் என்றார்.
ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் எம்.பி.பாட்டீல், மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. முன்னாள் அமைச்சர்கள் மார்கரெட் ஆல்வா, முனியப்பா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹரிபிரசாத், மாநில செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே வன்முறைக்கு மேலும் ஒருவர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறையில் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 360 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரில் தடையுத்தரவையும் மீறி கன்னட அமைப்பினர் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக வன்முறை, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலத்தில் பதற்றமான பகுதிகளில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கலவர தடுப்புப்படை, துணை ராணுவப்படையினர் 1,700 பேர் குவிக்கப்பட்டுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>