கத்திரி முடிந்தும் வெயில் கொளுத்துவது ஏன்?:மு.திலிப்

heat

தமிழகத்தில் சமீபகாலமாக காலநிலை மாறி மாறி வருகிறது. தவறும் பருவமழை, புவி வெப்பம் அதிகமாதல் உள்ளிட்டவை இதற்கு காரணம். உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் அடிப்பது மக்களை பெரும் வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. மதுரையில் அதிகபட்சம் 107 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இதுபோன்ற காலநிலை மாற்றங்கள் குறித்து இன்றைய சிறப்பு விருந்தினர் பக்கத்தில் இடம் பிடித்துள்ள, சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் நம்மிடம் மனம் திறக்கிறார்… தினகரனுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி: பொதுவாக வானிலை மாற்றம் என்பது காற்று மண்டலம், பூமி மற்றும் கடல் ஆகிய மூன்றில் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. இந்த மூன்றுக்கும் இடையே ஒருவித சக்தி சுழற்சி நிகழ்கிறது. அதுதான் வானிலை மாற்றம் என்று கூறுகிறோம். பருவநிலையை பொறுத்தவரை, காலத்தின் போக்கில் மக்களின் தேவைகளுக்கேற்ப பல விஞ்ஞான வளர்ச்சிகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அது சுற்றுச்சூழலை பாதிக்கும் என்று தெரிந்தாலும் கூட மக்களுக்கு அவசியம் என்பதால் அதை செயல்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

பூமி, கடல், காற்று மண்டலம் ஆகியவற்றின் சக்திகள் மாறுபடும்போது இயல்பாகவே பருவநிலை மாறிவிடும். குறிப்பாக இயற்கையை அழிப்பது பருவநிலை மாற்றத்துக்கு ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். காற்றுமண்டலத்துக்கும் பூமிக்கும் இடையே மரங்கள் ஒரு இணைப்பு பாலமாக செயல்படுகிறது. அதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த மரங்களை நாம் வெட்டும்போது சூழல்கள் மாறுகின்றன. சுற்றுச்சூழலை கருத்தில் கொள்ளாமல் நாம் செயல்படுத்தும் பல திட்டங்களால் நச்சு மாசு அதிகரிக்கிறது. இதன் மூலம் பூமி வெப்பமாதல் அதிகரிக்கும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், புதை வடிவ எரிபொருட்களான நிலக்கரி, பெட்ரோல், இயற்கை எரிவாயு ஆகியவற்றை எரிக்கும்போது கரியமில வாயு வெளியாகிறது.
இதுவும் புவி வெப்பம் அதிகரிக்க ஒரு காரணம். அதேபோல், காடுகளை அழிக்கும்போது மீத்தேன் வாயு அதிகளவு வெளியாகும். அது மட்டும் அல்ல, நைட்ரஜன் உரங்களை அதிகளவு விவசாயத்துக்கு பயன்படுத்தும்போது நைட்ரஸ் ஆக்சைடு வாயுக்கள் வெளியாகிறது.

இதுபோன்ற வெப்ப வாயுக்கள் ஒன்றாக சேரும்போது பூமியின் காற்று மண்டலத்தில் புவி வெப்ப வாயுக்களின் அளவு பல மடங்கு அதிகரிக்கிறது. இதன் விளைவாக பூமியின் வெப்பம் அதிகரிக்கும். பருவநிலை மாற்றத்தில் பல்வேறு விளைவுகள் உருவாகும். அந்த வகையில், கனமழை பெய்து வெள்ளம் ஏற்படலாம் அல்லது வெயில் அளவு வழக்கத்தைவிட அதிக அளவு அதிகரிக்கலாம். இந்த இரண்டில் எது நிகழ்ந்தாலும் அது மக்களை நிச்சயம் பாதிக்கும். வெப்பம் அதிகரிப்பதால் மலேரியா உள்ளிட்ட நோய்கள் அதிகரிக்கும். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள மக்களின் தற்போதைய பெரும் அச்சமாக இருப்பது வெப்ப நிலை மாற்றம் தான். என்னடா இது, கத்திரி வெயில் முடிந்த பிறகு பருவமழை பெய்யும். அப்படி பெய்தால் வெயில் அளவு குறையும். ஆனால் இந்த ஆண்டு மட்டும் ஏன் கத்திரி வெயில் முடிந்து 2 மாதம் ஆகியும் வெயில் குறையவில்லை என பொதுமக்கள் ஒருவருக்கொருவர் கேள்வி எழுப்புவதை எங்களால் உணர முடிகிறது.

ஜூலை மாதம் வெயில் வழக்கத்துக்கு மாறானது தான் என்றாலும் இது புதிது அல்ல. கடந்த காலங்களிலும் இதுபோன்று ஜூைல மாதம் வெயில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2015ல் சென்னை உள்பட பல மாவட்டங்களில் ஜூலை மாதம் 104 டிகிரி வெயில் அடித்தது. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய 4 மாதங்கள் தென்மேற்கு பருவமழை காலம் என்கிறோம். தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் மழை பெய்யும் என்றாலும், வடகிழக்கு பருவமழை தான் தமிழகத்துக்கு அதிக மழை கொடுக்கும். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் தான் தென்மேற்கு பருவமழையால் அதிக மழை பெய்யும். இந்த தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களில் வலுவிழக்கும் பட்சத்தில் தமிழகத்தில் காற்றில் ஈரப்பதம் குறையும். தமிழகம் ஒரு மழை நிழல் பிரதேசம். பருவமழை குறைவதால் சூரிய கதிர்கள் நேராக பூமியில் விழும். இதுவே தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்க காரணம். எனவே, வெயில் அதிகரிப்பதால் மக்கள் யாரும் பயப்பட வேண்டாம்.

பருவமழை மாற்றங்களை இரண்டு வகைகளாக வகைப்படுத்தலாம். உள்நிகழ்வு மற்றும் வெளி நிகழ்வு ஆகிய 2 மாற்றங்களால் பருவமழை மாறுபடுகிறது. உள்நிகழ்வு மாற்றங்கள் குறித்து மூத்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். வெளிநிகழ்வு மாற்றங்களை பொறுத்தவரை, இயற்கையை அழிப்பது, அதன் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றம் ஆகிய காரணங்களால் மாற்றம் நிகழ்கிறது. இதுபோன்ற மாற்றங்கள் நிகழ்வது இயல்பான ஒன்று தான். இந்தியாவை பொறுத்தவரை தற்போது பெரிய அளவில் பருவநிலை மாற்றமோ அல்லது பருவமழை மாற்றமோ நிகழவில்லை. வெயில் அதிகரிப்பது, மழை குறைவது எல்லாம் மாற்றத்தின் ஒரு பகுதி தான். தென்மேற்கு பருவமழை தொடங்கிய 2 மாதங்களில் 38 சதவீதம் இயல்பை விட குறைவாகவே மழை பெய்துள்ளது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

பருவமழை கணிப்பை பொறுத்தவரை நீண்ட கால கணக்கெடுப்பு மற்றும் குறுகிய கால கணக்கெடுப்பு என 2 வகைகளில் கணிக்கின்றனர். புனேவில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தில் நீண்டகால கணக்கெடுப்பு குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. குறுகிய கால கணக்கெடுப்பு என்பது பருவமழை தொடங்கும் 2 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்படும். அந்த வகையில், தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை குறித்த குறுகிய கால கணக்கெடுப்பு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும். அதன்பிறகே, பருவமழை இயல்பாக பெய்யுமா அல்லது அதை விட குறையுமா என்று கூற முடியும். முடிந்தவரை இயற்கையை அழிக்காமல் அதை பேணி பாதுகாத்து வந்தால் பருவநிலை மாற்றம் ஏற்படாமல் செய்ய முடியும்..மக்களுக்கு நான் சொல்லும் அறிவுரை இதுதான்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக இயல்பைவிட 32% குறைவாக பெய்துள்ளது. ஜூன் 1 முதல் ஜூலை 28ம் தேதி வரை தமிழகத்தில் 110 மி.மீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 32% குறைவாக 75 மி.மீ மழை தான் பெய்துள்ளது. மாவட்டங்களை பொறுத்தவரை அதிகபட்சமாக இந்த ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 87% அதிகம் பெய்துள்ளது. அதேபோல், கோவை மாவட்டத்தில் 66% மழை இயல்பைவிட அதிகம் பெய்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடர்ச்சியாக வெயில் 100 டிகிரிக்கு மேல் அடித்தது. அதிகபட்சம் 102 டிகிரி வெயில் அடித்தது. ஆனால், ஏற்கனவே சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு வெயில் அதிகபட்சம் 105 டிகிரி அடித்தது. அதேபோல், 2012 மற்றும் 2013ல் அதிகபட்சம் 101 டிகிரி வெயில் அடித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் தான் இந்த ஆண்டு ஜூலை மாத அனல் காற்று உச்சத்தை தொட்டது. அதிகபட்சம் 107 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. ஆனால் கடந்த ஆண்டுகளில் அதிகபட்சம் மதுரையில் ஜூலை மாதம் 105 டிகிரி வெயில் தான் அடித்திருந்தது. அதன்படி 2015ல் அங்கு 105 டிகிரி வெயில் அடித்தது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>