என் கல்யாண வாழ்க்கை இரண்டு வருடம்கூட நீளாது சொன்னார்கள் 12 வருடமாகிவிட்டது – நடிகர் பக்ரு

cele_lovers_012.w540

கின்னஸ் பக்ரு புகழ்பெற்ற குள்ள நடிகர். முப்பது வருடங்களாக தென்னிந்திய திரைப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். முழு நீள படத்தில் நடித்த மிக சிறிய குள்ள நடிகராக கின்னசில் இடம்பிடித்த சாதனையாளர். திருமணமாகிவிட்டது. மூன்றாம் வகுப்பு படிக்கும் இவரது மகள் தீப்தகீர்த்தி, இப்போது தந்தையை விட வளர்ந்துவிட்டாள்.

பக்ரு, வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது அவளும் சென்று விடுகிறாள். தந்தையோடு விளையாடுவதிலும், பொழுதுபோக்குவதிலும் அவளுக்கு ஆர்வம் அதிகம்.

‘‘எனது மகள் படிக்கும் பள்ளி ஆண்டுவிழாவில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. நிகழ்ச்சியில் என் மகள் நடினமாடினாள். அவ்வளவு சிறப்பாக அவள் நடனமாடுவாள் என்பது எனக்கு தெரியாது. இப்போது நடனம், ஓவியம் இரண்டும் கற்றுக்கொண்டிருக்கிறாள். எனது மகளுக்கு நான் தந்தை என்பதைவிடவும், விளையாட்டுத் தோழன் என்பதுதான் சரி.

எனது சிறுவயது பருவத்தில், என் தந்தையுடன் சைக்கிள் பயணம் மேற்கொண்டது சுவாரஸ்யமான அனுபவம். அவரது சைக்கிளில் எனக்காக சிறிய சீட் ஒன்று இணைக்கப்பட்டிருந்தது. நான் கதைபிரசங்க நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது அப்பா உடன் வருவார். நான் நிகழ்ச்சி முடிந்து வண்டியில் ஏறியதும் உறங்கத் தொடங்கிவிடுவேன். கண்விழித்து பார்க்கும்போது படுக்கையில் தூங்கிக்கொண்டிருப்பேன். என் தூக்கத்தை கெடுக்காத அளவுக்கு தந்தை என்னை வீடு கொண்டு வந்து சேர்த்து, படுக்கையில் கிடத்திவிடுவார். நான் பிரபலமாகவேண்டும் என்பது அப்பாவின் ஆசையாக இருந்தது’’ என்கிறார், பக்ரு.

இவரது இயற்பெயர் அஜய்குமார். பெற்றோர்: ராதாகிருஷ்ணன்– அம்புசாக்ஷி.

‘‘1986–ல் நான் ‘அம்பிலிஅம்மாவன்’ என்ற முதல் படத்தில் நடித்தேன். அப்போது எனக்கு பத்து வயது. பள்ளி விடுமுறை நாட்களில் நடித்தேன். யானைப் பாகனின் மகனாக நான் நடித்தேன். முதல் காட்சியில் யானையில் வருவேன். யானை அப்படியே என்னை தும்பிக்கையில் தூக்கி பெஞ்சில் இருத்தும். யானையால் சரியாக என்னை தூக்கி, பெஞ்சில் நிறுத்த முடியவில்லை. திரும்பத் திரும்ப அந்த காட்சியை எடுத்ததும் நான் அழுதுவிட்டேன். பின்பு யானை பாகனாக நடித்த ஜெகதி ஸ்ரீகுமாரிடம் யானை என்னை தூக்கிக் கொடுக்க அவர் என்னை பெஞ்சில் கொண்டு இருத்துவதுபோல் படமாக்கினார்கள்.

அந்த படத்தில் என் பெயர் ‘உண்ட பக்ரு’. அந்த பெயர் என் மனைவிக்கோ, அம்மாவுக்கோ பிடிக்கவில்லை. அதன் பின்பு கின்னஸ் சாதனையாளரானதால், கின்னஸ் பக்ருவாகிவிட்டேன். அற்புத தீவு படம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது’’

‘‘ஒரு பட காட்சிக்காக கயிற்றில் தொங்கியபடி நடித்தபோது கீழே விழுந்துவிட்டேன். கழுத்துப்பகுதி யில் காயமடைந்து சிகிச்சை பெற்றபோது ஆபரே‌ஷன் தேவைப்படும் என்று டாக்டர்கள் சொன்னார்கள். ஆனால் அந்த இடத்தில் ஆபரே‌ஷன் செய்வது அவ்வளவு நல்லதல்ல என்று கருதியதால், நாட்களை நகர்த்தினேன். வலியை பொறுத்துக்கொண்டு மீண்டும் நடித்ததால் பாதிப்பு அதிகமானது. பின்பு ஆபரே‌ஷன் செய்துகொண்டேன். ஓய்வு எடுத்துவிட்டு, பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறேன்’’

‘‘மேடை நிகழ்ச்சிகளுக்காக நிறைய பயணம் செய்திருக்கிறேன். அமெரிக்காவில் கலை நிகழ்ச்சி நடத்திவிட்டு, அங்குள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்தபோது அருகில் படுத்திருந்தவரின் இரண்டரை சவரன் தங்கச் சங்கிலியை திருடன் ஜன்னல் வழியாக கையைபோட்டு அறுத்துச்சென்றுவிட்டான். அருகில் படுத்திருந்த என் கழுத்தில் ஐந்து சவரன் சங்கிலி கிடந்தது. குழந்தை என்று நினைத்து அதை பறிக்காமல் சென்றுவிட்டான் என்று நினைக்கிறேன்’’

‘‘இரண்டு வருடம்கூட என் கல்யாண வாழ்க்கை நீளாது என்று சிலர் சொன்னார்கள். எங்கள் திருமணம் நடந்து 12 வருடங்கள் ஆகிவிட்டன. பல்வேறு பிரச்சினைகள் எனக்கு ஏற்பட்டபோதெல்லாம் என் மனைவி உடனிருந்திருக்கிறார். மூத்த மகள் இறந்தபோதும், என் ஆபரே‌ஷனின் போதும் மனைவி எனக்கு தைரியம் கொடுத்திருக்கிறார். என் அம்மாவும் உடனிருந்திருக்கிறார். உணவு வி‌ஷயத்தில் நான் கறாரானவன். குறைவாகவே சாப்பிட்டாலும் ருசியாக சாப்பிடவிரும்புவேன். அது என் மனைவி காயத்ரிக்கு சற்று கடினமான வி‌ஷயம். சினிமா நடிகர்களின் மனைவிகள் ஆடை அலங்கார கடை நடத்துவதுபோல் என் மனைவியும் தொடங்கியிருக்கிறார். குடும்பத்தை கவனித்துக்கொண்டு, அதையும் செய்துவருகிறார்’’ என்று மகிழ்ச்சியாக சொல்கிறார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>