எதிர்க்கட்சியானாலும் தமிழர் நலன் காக்கும் இயக்கம் தி.மு.க. தி.மு.க. தலைவர் கருணாநிதி

01-04-2016-075933_2079186767

கேள்வி :- காவிரிப் பிரச்சினைக்காக தமிழக முதலமைச்சர் டெல்லிக்கு கடிதம் எழுதுவதோடு நிறுத்திக் கொள்கிறாரே; ஏன் நேரடியாக கர்நாடக முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதக் கூடாதா? நேரில் சென்று பார்க்கக் கூடாதா? என்று தஞ்சை விவசாயி ஒருவர் கேட்கிறாரே?
கலைஞர் :- 1983ஆம் ஆண்டு! இப்பொழுது உள்ளது போன்ற ஒரு நெருக்கடி யான நிலை. டெல்டா பகுதிகளில் பாசனத்திற்குப் போதிய நீரின்றி விவசாயி கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தமிழக முதல் அமைச்சராக நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களும், எதிர்க்கட்சித் தலைவராக நானும் இருந்த நேரம்! அப்போது ஜனவரி மாதம் 18ஆம் தேதி, கர்நாடக மாநில முதல் அமைச்சராக திரு. ராம கிருஷ்ண ஹெக்டே அவர்கள் இருந்தபோது, நானே நேரடியாக அவருடைய அலுவலகத்திற்கே சென்றேன். அப்போது அங்கே அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நான் வந்திருக்கின்ற செய்தி கேட்டு, ஹெக்டே அவர்கள் தனது அறைக்கு வந்தார். அந்த அறையில் கர்நாடக முதலமைச்சர் ஹெக்டே அவர்களைச் சந்தித்து, காவிரி நீர் ஒப்பந்தம் குறித்த பிரச்சினைகளை மாநில அரசுகளின் முதல் அமைச்சர்கள் கலந்து பேசி முடிவெடுப்பது என்பது ஒரு புறமிருந்தாலும், தமிழ்நாட்டில் காய்ந்து கருகிக் கொண்டிருக்கும் சம்பா – தாளடிப் பயிர்களைக் காப்பாற்ற உடனடி யாக தேவையான தண்ணீர் தர வேண்டுமென்று கர்நாடக முதல் அமைச்சரை நான் நட்பு ரீதியாகக் கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர் “நீங்களே நேரில் வந்து கேட்டிருக்கிறீர்கள்; முடிந்ததைச் செய்கிறேன்” என்று சொன்னார்; அவ்வாறே செய்தார்.
அப்போது எனக்கு வயது 59; தமிழக எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், நமக்கென்ன என்று இருந்து விடாமல் நேரில் சென்று கேட்க முடிந்தது!
கேள்வி :- பரம்பிக்குளம் அணையைப் பார்வையிடச் சென்ற தமிழக அதிகாரி களை கேரள வனத்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பியதாக “தினமணி” நாளிதழில் செய்தி வந்திருக்கிறதே?
கலைஞர் :- “கொண்டவன் சரியில்லை என்றால் கண்டவன் எல்லாம் கடுங்கோபத்துடன் காலால் எட்டி உதைப்பான்” என்று கிராமங்களில் சொல்வார்கள். அந்த நிலைதான் தமிழர்களுக்கு ஏற்படுகிறது. பெங்களூரில் சந்தோஷ் என்ற இளைஞர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அது போலவே கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் தமிழர்கள் தாக்கப்படுவதாகச் செய்திகள் வருகின்றன. அந்தச் செய்திகளைப் படித்துவிட்டு தமிழ்நாட்டிலும் பரவலாக இப்படிப்பட்ட தாக்குதல் நடைபெறுவதாக வருகின்ற செய்திகள் பெரிதும் வருத்தத்தைத் தருகின்றன. இதுபோன்ற சம்பவங் கள் கர்நாடகத்தில் நடை பெற்றாலும், தமிழகத்தில் நடைபெற்றாலும் அது தேவையற்றவை என்பது தான் என்னுடைய கருத்து. இனிமேலாவது அப்படிப் பட்ட வன்முறைச் சம்பவங்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன திட்டத்தின் படி, (பி.ஏ.பி.) மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள ஆறு ஆறுகளையும், சமவெளியில் உள்ள இரண்டு ஆறுகளையும் இணைத்து, ஒன்பது அணைகள் கட்டி, தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் நீர் பகிர்மானம் செய்யப்பட்டு வருகிறது. ஒப்பந்தப்படி தமிழகத்துக்கு 30.5 டி.எம்.சி.யும், கேரளத்துக்கு 19.5 டி.எம்.சி.யும் நீர்பகிர்மானம் செய்து கொள்ள வேண்டும்.
பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டத்தில் உள்ள அணைகள் அனைத்திலும் நாற்பது கோடி ரூபாய் செலவில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வரு கின்றன. இந்தப் பணிகளை பி.ஏ.பி., அதிகாரிகள் கவனித்து வருகின்றனர். பராமரிப்புப் பணி களைப் பார்வையிட, சென்னை, பொள்ளாச்சியிலிருந்து பொதுப்பணித் துறையின் 12 அதிகாரிகள் 10-9-2016 அன்று பரம்பிக்குளம் பகுதிக்குச் சென்றுள்ளனர். பரம்பிக்குளம் அணைக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில், தமிழக அதிகாரிகள் சென்ற வாகனங்களை, பரம்பிக்குளம் மாவட்ட வன அலுவலர் ரஞ்சித்குமார் தலைமையிலான கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். தமிழக அதிகாரிகள் தாங்கள் அணையைப் பார்வை யிட வேண்டுமென பலமுறை தெரிவித்தும், மாலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரை காத்திருக்கச் செய்துவிட்டுக் கடைசியாக பரம்பிக்குளத்தை விட்டு வெளியேறுமாறு கேரள வனத் துறையினர் விடாப் பிடியாக தெரிவித்திருக்கி றார்கள். எனவே தமிழக அதிகாரிகள் தமிழகம் திரும்பியிருக்கிறார்கள்.
ஏற்கனவே பல முறை தமிழக அதிகாரிகளை பணி செய்யவிடாமல் இடையூறு செய்ததுடன், திருப்பி அனுப்பியும் இருக்கிறார்கள். தமிழகப் பொதுப் பணித் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியையும் கேரள வனத்துறையினர் உடைத்திருக்கிறார்கள். தொடர்ந்து நடைபெற்று வரும் இப்படிப் பட்ட அத்துமீறல் சம்பவங்களைத் தடுப்பதற்காக தமிழக அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இனியாவது தமிழக அரசின் சார்பில் மத்திய அரசிடமும், கேரள அரசிடமும் தொடர்பு கொண்டு, இப்படிப்பட்ட சம்பவங்கள் நடை பெறாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுத்துப் பரம்பிக்குளம் – ஆழியாறு ஒப்பந்தத்தைப் பாது காத்திட வேண்டும்.
கேள்வி :- காவிரிப் பிரச்சினையில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி கர்நாடக அரசுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருக்கிறாரே?
கலைஞர் :- மத்திய அரசிலே அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், “இந்திய அரசியல் சட்டப்படி நடந்து கொள்வேன்; மக்களிடத்தில் வேறுபாடு காட்ட மாட்டேன்” என்று பதவிப் பிரமாணம் எடுத்துப் பணி புரிவதால்; இதுபோன்ற பிரச்சினைகளில் இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவாக நடுநிலையோடு நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். ஆனால் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி, “சிவனசமுத்திரம் மற்றும் மேக்கேதாட்டுப் பகுதியில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு தமிழகம் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது. அணை கட்டுவதால் தமிழகத்துக்கு தண்ணீர் விடமாட்டோம் என்று கர்நாடகம் கூறவில்லை. காவிரி நதி நீர்ப் பங்கீட்டு விவகாரத்தை ஆராய்ந்து பார்த்தால், 200 ஆண்டுகளாக கர்நாடகத் துக்கு அநியாயம் ஏற்பட்டுள்ளதை உணர முடியும்” என்றெல்லாம் தெரிவித்திருப்பது சரியல்ல; பாரபட்சமானவை என்பதால் கண்டனத்திற்குரிய கருத்துக்களாகும்.
கேள்வி :- இந்த ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், போதிய அலுவலர்கள் இன்றிச் செயல்படுவதாகவும், குறிப்பாக தற்போது மாநிலத் தகவல் ஆணையத்திலும் போதிய அலுவலர்கள் இல்லை என்றும் செய்தி வந்துள்ளதே?
கலைஞர் :- தமிழகத்தில் மாநிலத் தகவல் ஆணையத்தில் மூன்று தகவல் ஆணையர் காலி யிடங்கள் உட்பட பத்து சதவிகித அளவுக்கு அலுவலர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மக்கள் நலத் திட்டங்கள், அரசு சேவைகளில் உள்ள குறைபாடுகள் போன்றவற்றை வெளிப்படையாக அறிந்து கொள்ள மத்திய அரசு தகவல் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின்படி தகவல் பெற விரும்பு வோர் பத்து ரூபாய் கட்டணம் செலுத்தி, அந்தந்தப் பகுதி அரசு அலுவலகங்களுக்குக் கடிதம் மூலமாக தகவல் கேட்டால், ஒரு மாதத்திற்குள் அந்தத் தகவலை அனுப்ப வேண்டும் என்பது விதிமுறை. சென்னை தேனாம்பேட்டையில் மாநிலத் தகவல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்களில் தரப்பட்ட தகவல் உண்மையற்றவையாக இருந்தால் மேல் முறையீடு மனு அளிக்கலாம். இதிலும் திருப்தியில்லாத பட்சத்தில் மாநிலத் தகவல் ஆணைய அலுவலகத்துக்கு மேல் முறையீடு அளிக்கலாம். தற்போது இதற்காக நாள் ஒன்றுக்கு சுமார் 80 பேர் வருகிறார்களாம். 3 தகவல் ஆணையர்கள் இடம் காலியாக உள்ளதால், தினந்தோறும் சுமார் 30 பேரின் மனுக்களைத்தான் விசாரிக்க முடிகிறதாம். அலுவலர்களில் பத்து சதவிகிதம் பற்றாக்குறை இருப்பதால், பணிகள் தாமதம் ஆகிறதாம். நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மையையும், தகவல் பெறும் உரிமையையும் உறுதி செய்திடும் மாநிலத் தகவல் ஆணையம் இந்த நிலையில் இருந்தால், தகவல் பெற விரும்பும் பொதுமக்கள் எங்கே போய் முறையிடுவார்கள்?
கேள்வி :- புலனாய்வு, ஆதாரம் சேகரிப்பதில் தமிழகப் போலீசார் பின்தங்கி இருப்பதால், தமிழகத்தில் 80 சதவிகித வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை என்று உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெயச்சந்திரன் கூறியிருக்கிறாரே?
கலைஞர் :- மேற்கு மண்டலப் போலீசாருக்கான சிறப்புப் புலனாய்வுத் திறன் மேம்பாடு குறித்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நேரத்தில், நீதியரசர் ஜெயச்சந்திரன் கூறும்போது, “தமிழகத்தில் 80 சதவிகித வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. ஏனெனில், புலனாய்வு, ஆதாரம் மற்றும் ஆவணம் சேகரிப்பதில் போலீசார் பின்தங்கியுள்ளனர். இதனால் குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுகின்றனர்” என்று கூறியிருக்கின்றார். தமிழ்நாடு காவல் துறைக்கு மேலும் ஒரு பாராட்டு (?) இது. நிரபராதிகளைக் காப்பாற்றக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் முறைப்படி தண்டிக்கப்படாவிட்டால், நாட்டில் குற்றங்கள் பெருகி, சட்டம், கேலிப் பொருளாகிவிடும். அ.தி.மு.க. ஆட்சியில் அந்த நிலைதான் தமிழகத்திற்கு ஏற்பட்டு வருகிறது!
கேள்வி :- காவிரிப் பிரச்சினைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட எதிர்க்கட்சிகளும், ஏடுகளும் கோரிக்கை வைத்தும், ஜெயலலிதா கூட்ட வில்லையே?
கலைஞர் :- 10-9-2016 தேதிய “தி இந்து” தமிழ் நாளிதழில் “அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏன் அவசியமாகிறது” என்ற தலைப்பில் காவிரிப் பிரச்சினை பற்றி எழுதியுள்ள தலையங்கத்தில், “அரசியல் ரீதியாக, கர்நாடக அரசின் செயல்பாடு களுடன் தமிழக அரசின் நடவடிக்கைகளை ஒப்பிட்டால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவு வெளியான சில மணி நேரங்களில் செய்தி யாளர்களைச் சந்தித்தார் அம்மாநில முதல்வர் சித்தராமைய்யா. “குடிநீருக்கே இல்லை என்கிற போது எப்படி தினமும் இவ்வளவு தண்ணீரைத் தமிழகத்து க்குத் திறந்துவிட முடியும்? கண்டிப்பாக முடியாது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறேன். அப்போது என்ன முடிவு எடுக்கப்படு கிறதோ, அதன்படி தான் இந்த அரசு நடந்து கொள்ளும்” என்றார். தமிழகத்தி லோ பெரும்பான்மை எதிர்க்கட்சிகள் “முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்” என்று கோரியிருக்கும் நிலையில், அ.தி.மு.க. அரசு இதுகுறித்துத் துளியும் அலட்டிக் கொள்ளவில்லை. தமிழக அரசு ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது, புதிய ஆலோசனைகளைக் கேட்டுப் பெற மட்டுமல்ல; காவிரிப் பிரச்சினையில் ஒட்டுமொத்தத் தமிழகமும் ஓரணியில் நிற்கிறது என்பதை வெளிப்படுத்தவும், விவசாயிகளுக்கு தார்மீக ரீதியிலான ஆதரவை வெளிப்படுத்துவதற்கும் அது பெரிய அளவில் உதவும். முதல்வர் ஜெயலலிதா அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும், தமிழகம் ஒருமித்த குரலில் தன்னுடைய நியாயத்தை உரக்கப் பேச வேண்டும்” என்றெல்லாம் எழுதியிருக்கிறது.
“தி இந்து” தமிழ் நாளேடு இன்று தலையங்கம் எழுதியிருப்பது மாத்திரமல்ல; 11-6-2014 அன்று “தி இந்து” ஆங்கில நாளிதழ் எழுதிய தலையங் கத்தில், “கர்நாடகத்தில் ஒருமித்த குரல் ஒலிக் கிறது. இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழக அரசும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கூறியிருப்பது மிக நியாயமானது. முதல்வர் ஜெயலலிதா, இந்த விஷயத்தில் தமிழகத்தில் எல்லாக் கட்சி களுக்கும் ஒருமித்த கருத்து இருப்பதால் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கான தேவை இல்லை என்று கூறியிருப்பது ஏற்கத்தக்கது அல்ல” என்றெல்லாம் எழுதியிருந்தது.
இன்னும் கூறவேண்டுமேயானால், 28-7-1998 அன்று பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்கள், காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்ற இடைக் காலத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்துவது பற்றிப் பேசுவதற்காக 6-8-1998 அன்று தமிழக முதல் அமைச்சர் என்ற முறையில் டெல்லிக்கு நான் வர வேண்டு மென்று எழுதியிருந்தார். ஒரு வார காலம் தான் இடைவெளி இருந்தது. இருந்தாலும் 3-8-1998 அன்று தமிழகத்திலே உள்ள அனைத் துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டி, அவர்களின் கருத்துகளைக் கேட்டபோது, மற்ற கட்சித் தலைவர்கள் எல்லாம் நான் டெல்லிக்குப் போகலாம் என்று கூறிய நேரத்தில், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. மட்டும் போகக் கூடாது என்று கூறியதும் நினைவிற் கொள்ளத்தக்கது. ஜனநாயகம் – சகிப்புத் தன்மை – எதிர்க்கட்சிகளை மதித்தல் – மாற்றுக் கருத்துக் களைச் செவி மடுத்தல் – கலந்தாலோசனை – அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பதெல்லாம் அ.தி.மு.க. அகராதியில் இடம் பெறாதவை. “நாம்” என்று சொல்லும்போது ஒட்டும் உதடுகள் – “நான்” என்று சொல்லும் போது உதடுகள் ஒட்டுவதில்லை!
கேள்வி :- சட்டப் பேரவையின் சார்பில், சட்டப்பேரவை விதிகளின்படி ஒவ்வொரு ஆண்டும் அனைத்துக் கட்சிகளைக் கொண்ட பல்வேறு குழுக்கள் இந்த ஆண்டு அமைக்கப் படவில்லை என்று ஏடுகளில் செய்தி வெளி யிட்டிருக்கிறார்களே?
கலைஞர் :- உண்மைதான்! அரசின் பல்வேறு பணிகளைக் கண்காணிக்க, சட்டப் பேரவை உறுப்பினர்களின் சார்பில், பல்வேறு தரப்புகளின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுக்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக் கப்படுவார்கள். மதிப்பீட்டுக் குழு, பொதுக் கணக்குக் குழு, பொது நிறுவனங்கள் குழு, பேரவை உரிமைக் குழு, அலுவல் ஆய்வுக் குழு, சட்ட விதிகள் ஆய்வுக் குழு, அரசு உறுதிமொழிக் குழு, பேரவைக் குழு, பேரவை விதிகள் குழு, மனுக்கள் குழு, பேரவை நூலகக் குழு, பேரவை முன் வைக்கப்பட்டட ஏடுகள் குழு என்று பல்வேறு குழுக்கள் இதுவரை நியமிக்கப்படவே இல்லை. சட்டமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும் ஓர் அம்சமான இந்தக் குழுக்கள் இதுவரை அமைக்கப் படாதது, பேரவை விதிகள் எந்த அளவுக்குப் பின்பற்றப்படுகின்றன என்பதையே புலப்படுத்தும். கேட்டால், அவையின் விதிகளுக்குப் புறம்பாக, இந்த ஆட்சியில் எதிர்க்கட்சியினரைப் பேச விடாமல் செய்வதற்கும், பேசினால் அவையை விட்டு வெளியேற்றுவதற்கும், “சஸ்பெண்ட்” செய் வதற்கும், எஞ்சிய நேரங்களில் “110வது விதியின்” அறிக்கைகளைப் படிக்கவும், அதற்காக முதல் அமைச்சரைப் போற்றிப் பாராட்டவுமே நேரம் போத வில்லை. அதிலே இந்தக் குழுக்களை அமைக்கவா நேரம் என்பார்கள்! குழுக்களாவது வெங்காய மாவது?

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>