உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு சென்னைக்கு பெண் மேயர் : தமிழக அரசாணை வெளியீடு

2016-21-9-22-08-59m

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளுக்கான இடஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை மாநகராட்சி மேயர் பதவி, பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இரண்டொரு நாளில் வெளியாகும் என தெரிகிறது. இதையடுத்து திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், எந்தெந்த வார்டுகள் பெண்களுக்கு என்பதும், எவை எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு என்பதும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனால், கட்சியினர் தங்களின் வார்டு யாருக்கு என்பதே தெரியாமல் விருப்ப மனு அளிப்பதில் குழம்பியிருந்தனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பதவிகளின் இடஒதுக்கீடு குறித்து தமிழக அரசு சத்தமில்லாமல் அரசாணை வெளியிட்டுள்ளது.

இதில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு: சென்னை, வேலூர், சேலம், கோவை, தஞ்சை, திண்டுக்கல் ஆகிய 6 மாநகராட்சி மேயர் பதவிகள், பெண்களுக்கு(பொது) ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி, திருப்பூர், மதுரை, நெல்லை, ஈரோடு ஆகிய 5 மாநகராட்சி மேயர் பதவிகள் பொதுவானவையாக ஒதுக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி, எஸ்சி/எஸ்டி பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நகராட்சிகளைப் பொறுத்தவரை தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம், காஞ்சிபுரம் ஆகிய நகராட்சிகள் பொதுப் பிரிவுக்கும், செங்கல்பட்டு, மதுராந்தகம் நகராட்சிகள் பெண்களுக்கும், மறைமலை நகர் நகராட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கும் (ஆண்/பெண்) ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல, 52 நகராட்சி தலைவர் பதவிகள், பெண்கள்(பொது) பிரிவுக்கும், நீலகிரி மாவட்டம் கூடலூர் மலைவாழ் பெண்களுக்கும், ராணிப்பேட்டை, சீர்காழி, திருத்துறைப்பூண்டி, வால்பாறை, உதகமண்டலம், சங்கரன்கோவில், பேரணாம்பட்டு, குன்னூர், பெரம்பலூர் ஆகிய 9 நகராட்சித் தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 8 நகராட்சிகள் தாழ்த்தப்பட்டோருக்கு(பொது) ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பேரூராட்சி தலைவர் பதவிகளில் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு 44 பதவிகளும், தாழ்த்தப்பட்ட (ஆண்/பெண்)பிரிவினர்களுக்கு 43 பதவிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. 218 பேரூராட்சித் தலைவர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற பேரூராட்சித் தலைவர் பதவிகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியைப் பொறுத்தவரை நீலகிரி, மலைவாழ்(ஆண்/பெண்), நாமக்கல், திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி ஆகிய 4 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட பெண்களுக்கும், தஞ்சை, அரியலூர், திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்ட ஊராட்சிகள் தாழ்த்தப்பட்டவர்கள் (ஆண்/பெண்) என ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை, தேனி, தூத்துக்குடி ஆகிய 12 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகள் பொதுப் பிரிவு பெண்களுக்கும், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவாரூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகள் பொது(ஆண்/பெண்) பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணையை நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா வெளிட்டுள்ளார். கடந்த தேர்தலில் திருச்சி, தஞ்சை, நெல்லை, தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாநகராட்சி ேமயர் பதவிகள், பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஈரோடு பொதுப்பிரிவிலும் பெண் மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>