உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம்; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை- முதல்வர்

eps

தமிழகத்தில் ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் நிவாரணமும், உயிரிழந்தவரின் வாரிசுக்கு அரசு வேலையும் அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
கடந்த நவ. 30 ஆம் தேதி ஒக்கி புயல் தாக்கியதில், குமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. ஒக்கி புயல் அறிவிப்புக்கு முன்பு குமரி மாவட்டத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் புயலில் சிக்கி மாயமானர்கள். மேலும் பலர் இன்னும் வீடுதிரும்பவில்லை. மாயமான மீனவர்களை தேடும் பணியில் கடலோரக் காவல் படையினர், கப்பல் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தத் தேடுதலை துரிதப்படுத்த வேண்டும், உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்துக்கு கேரள மாநிலத்தில் வழங்கப்படுவது போல ரூ. 20 லட்சம் வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நேரில் பார்வையிட வேண்டும் என மீனவர்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஒக்கி புயல் பாதிப்பை பார்வையிடுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை குமரி மாவட்டத்துக்கு வந்தார். மாவட்ட எல்லையான காவல்கிணறில் அவரை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் துரை, அதிமுக மாவட்டச் செயலாளர் அ. விஜயகுமார் எம்.பி. ஆகியோர் வரவேற்றனர்.
முதலில் கல்படிஏலா பகுதிக்குச் சென்று அங்கு புயலால் பாதிக்கப்பட்ட வாழை மரங்களை முதல்வர் பார்வையிட்டடு விவசாயிகளிடம் சேதவிவரங்களைக் கேட்டறிந்தார். தொடர்ந்து, தூத்தூர் புனித யூதா கலை, அறிவியல் கல்லூரியில் நீரோடி, குளச்சல், தூத்தூர், பூத்துறை, இரயுமன்துறை உள்ளிட்ட 8 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் மீனவ சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியது:
ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் தாக்கிய உடனேயே வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை அனுப்பி மீட்பு, நிவாரணப் பணிகளை விரைவாக மேற்கொள்ள கேட்டுகொண்டேன். அவரும் திருச்சியில் இருந்து குமரிக்கு நேரடியாக வந்து தங்கியிருந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டார்.
கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை என்ற தகவல் வந்தவுடன், மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் ஆகியவற்றை தொலைபேசியில் தொடர்புகொண்டு மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினேன். மத்திய அரசும் தேவையான தேடுதல் பணிகளை மேற்கொண்டது. தலைமைச் செயலகத்தில் 2 முறை கடலோர காவல் படை, விமானப் படை துறைகளைச் சேர்ந்தவர்களுடன் ஆலோசித்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தினேன். அவர்களும் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொண்டனர்.
4 ஐஏஎஸ் அதிகாரிகளை குமரிக்கு அனுப்பி வைத்து, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினேன். ஏற்கெனவே, குமரி மாவட்ட ஆட்சியராக இருந்து மாவட்டம் குறித்த புரிதலும், திறனும் உள்ள அதிகாரிகளைப் பயன்படுத்தினோம். வேளாண்மை துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, குமரியில் இருந்து வேளாண்மை சேதம் பற்றிய கணக்கெடுப்பு எடுத்து நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டார்.
மாயமான கடைசி மீனவர் கிடைக்கும் வரை தேடும் பணி: ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று மாயமான கடைசி மீனவர் கிடைக்கும் வரை, தேடுதல் பணிகள் தொடரும் என்று உறுதி கூறுகிறேன். மீனவர்களை மீட்பதே தமிழக அரசின் தலையாய கடமை. இப்பணியில் அரசு முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறது. மீனவர்கள் இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.
வீடு இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், பசுமை வீடு திட்டத்தில் வீடு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ரூ.20 லட்சம் நிவாரண நிதி, வாரிசுக்கு வேலை: நமது மீனவர்கள் கேரள மாநில அரசைப் போல இழப்பீடு கோரியிருந்தனர். அக்கோரிக்கையை ஏற்று உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இறந்த மீனவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அவரது கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும்.
ஒக்கி புயலால் வாழ்வாதாரம் இழந்த 32 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு ஏற்கெனவே ரூ. 2500 போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்கியிருந்தோம். இப்போது கூடுதலாக அவர்களுக்கு மேலும் ரூ. 2,500 சேர்த்து ரூ. 5 ஆயிரமாக இழப்பீடு வழங்கப்படும்.
காணாமல் போன மீனவர்களை இறந்ததாக அறிவிப்பது குறித்து தற்போதைய நடைமுறையில் சிக்கல் இருப்பதாக மீனவப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், காணாமல் போனவர்களை இறந்ததாக அறிவிப்பது குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் குழு அமைத்து, அரசாணை பிறப்பித்து சட்டப்பூர்வமான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். இதன்மூலம், காணாமல் போன மீனவ குடும்பங்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். மீனவர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளோம்.
விவசாயத்தை பொருத்தவரை, புயலால் வாழை, நெற்பயிர், ரப்பர் மரங்கள் சேதமடைந்துள்ளன. அனைத்து பயிர்ச் சேதமும் மதிப்பிடப்பட்டு அதற்கான நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
300 அடி உயர தகவல் தொடர்பு கோபுரம்: மீனவர்களுக்கு பேரிடர் காலத்தில் உரிய தகவல் அளித்தால் ஆபத்து இருக்காது என்று கூறுகின்றனர். அதன்படி, உலக வங்கியிடம் நிதி பெற்று 300 அடி உயரத்தில் கடற்கரையில் தகவல் தொடர்பு கோபுரம் அமைக்கப்படும். இதேபோல, புயலில் சேதமடைந்த படகு, விசைப்படகு, வள்ளம், கட்டுமரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் எடப்பாடி பழனிசாமி.
தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், விஜயகுமார் எம்.பி., குமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண், கண்காணிப்பு அலுவலர்கள் டி.கே. ராமச்சந்திரன், ககன்தீப் சிங் பேடி, கிள்ளியூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ்குமார், கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை மற்றும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>