உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை: ஒருவருக்கு ஆயுள்; மூவரை விடுவித்து நீதிமன்றம்

ஆணவ கொலை

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிரடி உத்தரவிட்டது. மேலும், ஒருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், மூவரை விடுவித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடுமலை அருகிலுள்ள மடத்துக்குளம் தாலுகாவுக்கு உள்பட்ட குமரலிங்கம், சாவடி வீதியைச் சேர்ந்தவர் வேலுசாமியின் மகன் சங்கர் (22). திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்தவர் கௌசல்யா (20). பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த நிலையில், இரு வேறு ஜாதிகளைச் சார்ந்த இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கௌசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், 2016 மார்ச் 13-ஆம் தேதி உடுமலை பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த இத் தம்பதியை, வாகனங்களில் வந்த ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியது. படுகாயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சங்கர் உயிரிழந்தார். சிகிச்சைக்குப் பிறகு கௌசல்யா வீடு திரும்பினார்.
இக்கொலை தொடர்பாக உடுமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தனிப் படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இவ்வழக்கில், பேருந்து நிலையம் அருகிலுள்ள கடை ஒன்றின் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மிகவும் உதவியாக இருந்தன.
இந்நிலையில், கௌசல்யாவின் தந்தையான திண்டுக்கல் மாவட்டம், பழனி, திருநகரைச் சேர்ந்த பி.சின்னசாமி (41), உடுமலையில் படித்து வந்த கல்லூரி மாணவரான பழனி, கரிகாரன்புதூரைச் சேர்ந்த பிரசன்னா (எ) வி.பிரசன்னகுமார் (20) ஆகியோர் நிலக்கோட்டை நீதிமன்றத்திலும், கௌசல்யாவின் தாய் சி.அன்னலட்சுமி (36) தேனி நீதிமன்றத்திலும் சரணடைந்தனர்.
இதுதவிர, கௌசல்யாவின் மாமா, திண்டுக்கல், ஆர்.எம்.காலனியைச் சேர்ந்த பி.பாண்டிதுரை (50), பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பி.ஜெகதீசன் (32), பழனி, ராமர் கோயில் தெருவைச் சேர்ந்த எம்.மணிகண்டன் (26), திண்டுக்கல், செல்லாண்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பி.செல்வகுமார் (26), புதுப்பட்டி, பொன்மாந்தூரைச் சேர்ந்த பி. தமிழ் கலைவாணன் (25), வாணிவிலாஸ் இறக்கம் பகுதியைச் சேர்ந்த எம்.மதன் (எ) மைக்கேல் (26), புதுப்பட்டி, காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கே.ஸ்டீபன் தன்ராஜ் (24), பட்டிவீரன்பட்டி, இளங்கோவடிகள் தெருவைச் சேர்ந்த எம்.மணிகண்டன் (40) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது கூட்டு சதி, கொடூர ஆயுதங்களுடன் கலகம் செய்தல், கொலை, கொலை முயற்சி, வன்கொடுமைத் தடுப்பு சட்டப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
உடுமலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கு, 2016 ஜூன் 8-ஆம் தேதிமுதல் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, திருப்பூர் வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
6 பேருக்கு தூக்கு தண்டனை: வழக்கில் கைது செய்யப்பட்ட அன்னலட்சுமி, பாண்டிதுரை, பிரசன்னகுமார் ஆகிய மூவரைத் தவிர, மற்ற அனைவரையும் குற்றவாளிகள் என்று அறிவித்தார் நீதிபதி. அதையடுத்து, குற்றம் சுமத்தப்பட்ட கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், தமிழ் கலைவாணன், மைக்கேல் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 9-ஆவது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், அன்னலட்சுமி, பாண்டிதுரை, பிரசன்னகுமார் ஆகியோரை விடுதலை செய்தார். வழக்கில் மொத்தமாக ரூ. 11 லட்சத்து 95 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, அந்தப் பணத்தை கௌசல்யா, சங்கரின் தந்தை வேலுசாமி ஆகியோருக்கு நிவாரணமாக அளிக்கவும், அபராதம் செலுத்தத் தவறினால் குற்றவாளிகள் கூடுதல் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். தண்டனை வழங்கப்பட்ட அனைவருக்கும் தீர்ப்பு நகல் வழங்கப்பட்டு, கோவை மத்திய சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
நீதி கிடைத்துள்ளது

கௌசல்யா.

உடுமலை சங்கர் கொலை வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து சங்கரின் மனைவி கௌசல்யா, உடுமலையை அடுத்துள்ள குமரலிங்கம் கிராமத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘சங்கர் சிந்திய ரத்தத்துக்கான நீதிக்கு ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தேன். அந்த வகையில் இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன். இந்தத் தீர்ப்பு ஜாதியக் கொலைகளுக்கு எச்சரிக்கையாக இருக்கும். அதிலும் அதிகபட்ச தண்டனையாக பெரும்பாலான குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு ஜாதி வெறியர்களுக்கும், கௌரவக் கொலை செய்பவர்களுக்கும் இனிமேல் அச்சத்தையும், மனத் தடையையும் ஏற்படுத்தும்.

வழக்கில் இருந்து அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னா ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வேன்’
சங்கர் வழக்கு தீர்ப்புக்கு உறுதுணையாக இருந்த அரசியல் கட்சிகளுக்கும், ஊடகங்களுக்கும், மனித உரிமை செயல்பாட்டாளர்களுக்கும், போராட்ட குழுவினருக்கும், நாளிதழ்களுக்கும் மனமார்ந்த நன்றி.”

சங்கருக்குரிய நீதி இந்த வழக்கு தீர்ப்பில் மட்டும் அடங்கி இருக்கவில்லை, சாதிய கவுரவ கொலைக்களுக்கு எதிரான தனிச்சட்டம் படைப்பதுதான் சங்கருக்குரிய நீதியாக நான் கருதுகிறேன்.
இவ்வாறு கவுசல்யா தெரிவித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>