‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் நடமாடும் சமூக விரோதிகள் பிரதமர் மோடி

இரவு நேரத்தில் சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுகிறார்கள் ‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் நடமாடும் சமூக விரோதிகள் பிரதமர் மோடி

இரவு நேரத்தில் சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுகிறார்கள் ‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் நடமாடும் சமூக விரோதிகள் பிரதமர் மோடி

புதுடெல்லி,

பசு பாதுகாப்பு என்ற பெயரில் சமூக விரோதிகள் கடையை தொடங்கி இருக்கிறார்கள், அவர்கள் இரவு நேரத்தில் சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்று பிரதமர் மோடி ஆவேசமாக கூறினார்.

முதல்முறையாக கருத்து
பசுக்களை துன்புறுத்தியதாக சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் சமீபகாலமாக நடந்து வருகின்றன. குறிப்பாக, உத்தரபிரதேசம், குஜராத், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்தன. இதுதொடர்பாக மத்திய அரசுக்கும், பா.ஜனதாவுக்கும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக கருத்து தெரிவித்தார். அவரது அரசு தொடங்கிய ‘மை கவ்’ என்ற செயலியின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

சமூக விரோதிகள்
‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில், சிலர் கடையை தொடங்கி இருக்கிறார்கள். அவர்கள் மீது நான் கடும் ஆத்திரத்தில் இருக்கிறேன். பசு பாதுகாப்பு என்று கூறிக்கொண்டால், மற்றவர்களை துன்புறுத்தலாம் என்று அர்த்தம் அல்ல. அவர்களில் பெரும்பாலானோர் சமூக விரோதிகள். 80 சதவீதம்பேர், பகலில் பசு பாதுகாப்பாளர்களாவும், இரவு நேரத்தில் சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்குமாறு நான் மாநில அரசுகளை கேட்டுக்கொள்வேன்.

பசுக்கள், இறைச்சிக்காக வெட்டிக் கொல்லப்படுவதை விட பிளாஸ்டிக்கை சாப்பிடுவதன் மூலம்தான் அதிகமாக இறக்கின்றன. பசுக்கள் மீது அவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், அவை பிளாஸ்டிக்கை சாப்பிடாமல் தடுக்க வேண்டும். அதுதான் அவர்கள் செய்யும் மிகப்பெரிய சேவையாக இருக்கும்.

நான் பசுக்களுக்காக ஒரு மருத்துவ முகாம் நடத்தினேன். அதில் ஒரே ஒரு பசுவின் வயிற்றில் இருந்து மட்டும், 2 வாளி நிறைய பிளாஸ்டிக் எடுக்கப்பட்டது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

300 கிராமங்கள் மேம்படுத்தப்படும்
பிற கேள்விகளுக்கு பதில் அளித்து, பிரதமர் மோடி கூறியதாவது:–

நாட்டில் ஸ்மார்ட் சிட்டிகளுக்கு பஞ்சம் இல்லை. அதுபோல், கிராமங்களும் முன்னேற வேண்டாமா? அதற்காக தேசிய ஊரக திட்டம் என்ற திட்டத்தை தொடங்க உள்ளோம். அதன்கீழ், நாடு முழுவதும் 300 கிராமங்களை வளர்ச்சியடைந்த மையங்களாக மேம்படுத்த உள்ளோம். இந்த 300 கிராமங்களும் அடையாளம் காணப்பட்டு விட்டன.

நகரங்களில் உள்ள உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், டிஜிட்டல் தொடர்பு என அனைத்து வசதிகளும் இந்த கிராமத்தில் உருவாக்கப்படும். கிராமத்தின் ஆன்மாவை தக்க வைத்துக்கொள்வதுடன், நகரங்களில் உள்ள வசதிகளும் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.

நாட்டில் அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் இரண்டாவது துறை, ஜவுளித்துறை. அந்த துறையை ஊக்குவிக்கும்வகையில், 125 கோடி இந்தியர்களும் தங்கள் ஆடை தேவையில் 5 சதவீதத்தை கதர் மற்றும் கைத்தறி உடைகளுக்கு ஒதுக்க வேண்டும்.

வளர்ச்சியின் பலன்கள் அடிமட்டம்வரை சென்று சேருவதற்கு நல்லாட்சி அவசியம். ஆனால், நல்லாட்சி என்பது மோசமான அரசியல் என்று அடிக்கடி கூறப்படுகிறது. காரணம், ஒரு தேர்தல் வெற்றிக்கு பிறகு அமையும் அரசு, நல்லாட்சியை பின்னுக்கு தள்ளி விட்டு, அடுத்த தேர்தலில் எப்படி வெற்றி பெறலாம், ஓட்டு வங்கியை எப்படி அதிகரிக்கலாம் என்பதிலேயே கவனம் செலுத்துகிறது.

திட்டங்களை தொடங்குவதன் மூலம், சிறிது காலத்துக்கு பாராட்டுகளை பெறலாம். ஆனால், நல்லாட்சி அளிக்காவிட்டால், சாமானியர்களின் வாழ்க்கைத்தரம் முன்னேறாது. ஜனநாயகம் என்பது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டு போடுவதுடன் முடிந்து விடக்கூடாது. அதில் மக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும்.

தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, நல்லாட்சி அளிப்பதன் மூலம் மட்டுமே அந்த பங்களிப்பை உறுதி செய்ய முடியும். ஆட்சிமுறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம், சாமானியர்களுக்கு செய்தியை சேர்க்க முடியும். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு விலையை நிர்ணயிக்க செய்ய முடியும்.

எதற்கெடுத்தாலும் பிரதமரை குறை கூறுவது வேலைக்கு ஆகாது. பஞ்சாயத்திலோ, மாவட்ட பஞ்சாயத்திலோ அல்லது மாநிலத்திலோ ஏதேனும் தவறு நடந்தால், பிரதமரை குறை கூறுகிறார்கள். இது மற்ற அமைப்புகளை பொறுப்பற்றதாக்கி விடுகிறது.

இது அரசியல்ரீதியாக சரியாக இருக்கலாம். ஆனால், நிர்வாகத்துக்கு நல்லது அல்ல. நேரடி பொறுப்பானவரிடம் தான் கேள்வி கேட்க வேண்டும்.

எங்கள் அரசின் வெளியுறவு கொள்கையின் மைய கருத்து ‘முதலில் இந்தியா’ என்பதுதான். இந்தியா, பொருளாதார வளத்தை எட்டுவதே எங்கள் நோக்கம். காலம் மாறிவிட்டது. நாடுகள் அணி சேருவது முடிந்து விட்டது. ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டை சார்ந்தே செயல்பட வேண்டி உள்ளது.

வெளிநாடுகளுடனான இந்தியாவின் உறவை வலுப்படுத்துவதில், வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் முக்கிய பங்காற்றலாம். அவர்களின் வலிமையை நாம் பயன்படுத்திக் கொள்வோம்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>