இரட்டை இலை யாருக்கு ?: ஆர்.கே.நகர் விடை செல்லுமா?

இந்த இடைத் தேர்தலில் சசிகலா அணியை விட ஓபிஎஸ் அணி அதிக ஓட்டுக்கள் வாங்கினால், அவருக்கு கட்சியும் இரட்டை இலை சின்னமும் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த இடைத் தேர்தலில் சசிகலா அணியை விட ஓபிஎஸ் அணி அதிக ஓட்டுக்கள் வாங்கினால், அவருக்கு கட்சியும் இரட்டை இலை சின்னமும் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை: அதிமுக பெயர், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால், ஓபிஎஸ் அணியினருக்கு மின்கம்பம் சின்னமும், சசிகலா தரப்புக்கு தொப்பி சின்னத்தையும் ஒதுக்கி தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், இரண்டு அணியினருக்கும் புதிய கட்சியின் பெயர்களையும் அங்கீகரித்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டாக உடைந்துள்ளது. அதன்பின் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி சார்பில், தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதனால் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கூறி தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் மனு கொடுத்தனர். இதனால் இரு தரப்பினரையும் நேற்று முன்தினம் நேரில் ஆஜராகும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரணை நடந்தது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு, இரட்டை இலையை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதோடு நிற்காமல், அதிமுக என்ற பெயரையும் இருவரும் பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டது. ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பினால், இரு தரப்பினரும் சின்னம் கேட்டு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், ஓபிஎஸ் அணியின் சார்பில் புதிய கட்சியின் பெயர் மற்றும் புதிய சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனோஜ்பாண்டியன், வக்கீல்கள் பாலாஜி, சீனிவாசன் ஆகியோர் சென்று மனு அளித்தனர். அவர்களது மனுவை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், ஓபிஎஸ் அணிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் (புரட்சித் தலைவி அம்மா) என்ற பெயரில் இயங்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதேநேரத்தில், ஆர்கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், ‘‘மின்கம்பம்’’ சின்னத்தையும் ஒதுக்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தகவல் தமிழக தேர்தல் அதிகாரிக்கும், எதிர்மனுதாரரான டிடிவி தினகரனுக்கும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, சசிகலா அணியின் சார்பில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், வக்கீல்கள் செந்தில், பரணிகுமார் ஆகியோர் சென்று தங்களுக்கு புதிய கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்(அம்மா) என்ற பெயரில் கட்சியை நடத்தவும், கிரிக்கெட் பேட், தொப்பி, ஆட்டோ ஆகிய 3 சின்னத்தில் ஒரு சின்னத்தை ஒதுக்கும்படியும் கோரியிருந்தனர். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், அவர்கள் கேட்ட கட்சியின் பெயரை அனுமதித்தனர். பின்னர் இடைத் தேர்தலுக்கு மட்டும் தொப்பி சின்னத்தை ஒதுக்கி ஆணையம் உத்தரவிட்டது. இந்த தகவல் தேர்தல் அதிகாரி மற்றும் எதிர் மனு தாரரான மதுசூதனனுக்கும் தெரிவிக்கப்பட்டது.

2வது முறையாக முடக்கம்
எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுக, அவரது மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா, ஜானகி என இரு அணிகளாக பிரிந்ததால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு சேவல் சின்னமும், ஜானகிக்கு இரட்டை புறா சின்னமும் வழங்கப்பட்டது. பின்னர் இரு அணிகளும் ஒன்று சேர்ந்த பிறகு இரட்டை இலை சின்னம் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது. தற்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலை சின்னம் 2வது முறையாக முடக்கப்பட்டுள்ளது. இந்த இடைத் தேர்தலில் சசிகலா அணியை விட ஓபிஎஸ் அணி அதிக ஓட்டுக்கள் வாங்கினால், அவருக்கு கட்சியும் இரட்டை இலை சின்னமும் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், சசிகலா அணியில் உள்ள எம்எல்ஏக்கள் பலரும் தற்போது ஓ.பன்னீர்செல்வத்துடன் நல்ல தொடர்பில் உள்ளனர். அவர்களும், அணிமாறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இரு அணியினரில் யார் அதிகமாக ஓட்டுக்கள் வாங்குவார்கள் என்ற பரபரப்பு தமிழகம் முழுவதும் எழுந்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>