இந்த வினாடியைக் கைப்பற்றிக் கொள் :என்.சொக்கன்

இந்த வினாடியைக் கைப்பற்றிக் கொள் :என்.சொக்கன்

இந்த வினாடியைக் கைப்பற்றிக் கொள் :என்.சொக்கன்

‘கார்பே டீயெம்’ (Carpe Diem) என்பது ஒரு பிரபலமான லத்தீன் மொழி வாசகம்.
ஏதோ வீரவேசமான போராட்ட கோஷம்போல் உச்சரிக்கச் சுகமாக ஜம்மென்றுதான் இருக்கிறது. ஆனால் இதன் அர்த்தம்?

‘ Seizure the movement’. அதாவது இந்த வினாடியைக் கைப்பற்றிக் கொள், சந்தோஷமாக வாழ்ந்து கொள் என்பதுதான் இந்த வாசகத்தின் நேரடிப் பொருள். ‘கோல்கேட் ஜெல்’ விளம்பரத்தில் வருவதுபோல், ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்பது இதன் உள்ளர்த்தம்.

முன்பு எப்போதோ தங்களுக்கு நேர்ந்த சோகங்களை, தோல்விகளை, சரிவுகளையெல்லாம் நினைத்துக் கொண்டு, எந்நேரமும் கவலையோடு உட்கார்ந்திருக்கிறவர்களைத் தட்டியெழுப்பி, ‘அதையெல்லாம் மறந்துவிடுங்கள், இந்த விநாடியை உற்சாகமாக அனுபவியுங்கள்’ என்று ஜாலியாக அறிவுரை சொல்கிறது ‘கார்பே டீயெம்’.

143811555க

ஹொராஸ் என்ற லத்தீன் கவிஞர் எழுதிய ஒரு பழை கவிதையிலிருந்து எடுக்கப்பட்ட இந்த வாசகம், நவீன இலக்கியம், இசை, திரைப்படங்கள் எனப்பலவற்றிலும் இடம் பெற்று பல தலைமுறைகளை உற்சாகமூட்டியிருக்கிறது.

மனித வாழ்க்கை மிகக் குறுகியது. ஆகவே, நடந்தவை, நடக்கக் கூடியவைகளைப் பற்றியெல்லாம் யோசித்துக் கொண்டிருக்காமல் இன்றையப் பொழுதை நல்லபடியாக வாழ வேண்டும் என்று சொல்லும் இந்தத் தத்துவத்தை, மிக இளம் வயதிலிருந்தே குழந்தைகளின் மனத்தில் பதித்தால், அவர்கள் தோல்விகளால் துவண்டு போகாத மனிதர்களாக வளர்வார்கள் என்கிறது ஒரு புதிய சிந்தனை.

இந்தச் சிந்தனையின் அடிப்படையில், சிங்கப்பூரில் பல சிறார் பள்ளிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. ‘கார்பே டீயெம் பள்ளிகள்’ என்றே அழைக்கப்படும் இவற்றில், குழந்தைகள் அவர்களின் வயதுக்கேற்ற பல்வேறு விஷயங்களைக் கற்பதுடன், வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடியையும் அனுபவிக்கிற ‘கார்பே டீயெம்’ சந்தோஷத்தையும் பழகிக் கொள்கிறார்கள்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்தக் ‘கார்பே டீயெம் பள்ளிகள்’, ‘MI’ எனப்படும் பன்முக அறிவு – அதாவது (Multiple Intelligence) அடிப்படையில் தங்களது பாடத்திட்டத்தை அமைத்திருக்கிறார்கள். ‘MI’ தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்வியாளர் டாக்டர் ஹோவர்ட் கார்ட்னர் (Dr. Howard Gardner). நாம் ‘அறிவு’ அல்லது ‘புத்திசாலித்தனம்’ என்று பொதுவாகச் சொல்வதைப் பலவிதமாகப் பிரித்து, மொத்தம் ஏழுவிதமான அறிவுகள் உண்டு என்கிறார் டாக்டர் கார்ட்னர்.

இந்த வினாடியைக் கைப்பற்றிக் கொள் :என்.சொக்கன்

இந்த வினாடியைக் கைப்பற்றிக் கொள் :என்.சொக்கன்

மொழி அறிவு என்பது, பேசுகிற, எழுதுகிற வார்த்தைகளைக் குறிக்கிறது. இந்த அறிவை அதிகம் கொண்ட குழந்தைகளால், மற்றவர்கள் பேசுவதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்; கடினமான வார்த்தைகளைக் கூடச் சட்டென்று பிடித்துக் கொண்டு பேச முடியும்; இலக்கண விதிமுறைகள், கதை, கவிதை, கட்டுரை போன்ற விஷயங்கள் இவர்களுக்குச் சுலபத்தில் வசப்படுகின்றன.

இசை அறிவு அதிகமுள்ள பிள்ளைகளுக்கு, பாடல்களைக் கேட்பது, அவற்றின் மெட்டு, பயன்படுத்தப்பட்டிருக்கும் இசைக் கருவிகள், தாளம் போன்றவற்றைக் கவனிப்பதில் அதிக ஆர்வம் இருக்கும். வருங்காலத்தில் இவர்கள் நல்ல பாடகர்களாகவோ, இசைக்கலைஞர்களாகவோ வரக்கூடும்.

கணித – தர்க்க அறிவுதான் நாம் குழந்தைகளிடம் அதிகம் எதிர்பார்ப்பது, இரண்டு எண்களைக் கூட்டி விடை சொல்வதில் தொடங்கி, இது இப்படியானால் அது எப்படியாகும் என்பது போன்ற ரீதியிலான சிந்தனையெல்லாம் சில குழந்தைகளுக்குப் பிரமாதமாக வரும். பல்வேறு பொருள்களுக்கிடையிலான தொடர்புகளை நினைவில் வைத்திருந்து, சரியான நேரத்தில் பயன்படுத்தி அசத்துவார்கள்.

நம் ஊரில், ‘கண் பார்ப்பதைக் கை செய்யும்’ என்று ஒரு வாசகம் சொல்வார்கள். அதுதான் இந்த நான்காவது வகையான காட்சி அறிவு. காட்சிபூர்வமாகப் பொருள்களைப் பார்த்து, வகைப்படுத்தி அறிவது; தாங்கள் பார்த்ததை அப்படியே திரும்பச் சொல்வது, செய்வது அல்லது வரைந்து காண்பிப்பது போன்ற திறமைகள் இந்த வகையில் அடங்கும்.

இந்த வினாடியைக் கைப்பற்றிக் கொள் :என்.சொக்கன்

இந்த வினாடியைக் கைப்பற்றிக் கொள் :என்.சொக்கன்

அடுத்த அறிவு. உடலைச் சரியாகப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. உதாரணமாக, ஒரு பந்தைக் குழந்தையின் மீது எறிந்தால், சட்டென்று கைகளை நகர்த்தி அதைப் பிடிப்பது. பொதுவாக எல்லாக் குழந்தைகளுக்கும் இந்த அறிவு உண்டு. எனினும் சிலர் இதில் விற்பன்னர்களாக உருவாவதைப் பார்க்கலாம். இவர்கள் விளையாட்டு, நடனம் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.

ஆறாவது, ‘அக அறிவு’ எனப்படுகிற உள்ளுணர்வுகளைப் புரிந்து கொள்ளும் கலை. அடுத்தவர்களின் குறுக்கீடு இல்லாமல், பல விஷயங்களைப் பற்றித் தங்களுக்குள் சிந்திப்பது, ஒரு முடிவுக்கு வருவது எனத் தொடங்கி தத்துவ அலசல்களில் ஈடுபடுவது, கவிதைகள் எழுதுவது என்று பல்வேறு நுணுக்கமான விஷயங்கள் இந்தப் பிரிவின் கீழ் வருகின்றன.

கடைசியாக, தங்களுடைய செயல்கள் மற்றவர்களை எப்படிப் பாதிக்கும், அவர்களுடைய உணர்வுகள், எதிர்வினைகள் எப்படி இருக்கும் என்றெல்லாம் சிந்தித்துப் பழகுகிற ‘புற அறிவு’. இந்த அறிவைக் கொண்ட குழந்தைகள், பிறருடன் நன்கு பழகுவார்கள், கலந்துரையாடல்கள், விவாதங்களில் ஈடுபடுவார்கள். மற்றவர்களைத் தங்களின் கருத்தை ஏற்கும்படி சமாதானப்படுத்துகிற கலையும் இவர்களுக்கு நன்றாக வரும். பின்னாள்களில் இவர்கள் ஆசிரியர்களாக, நல்ல பெற்றோராக, பலரை வழி நடத்தும் தலைவர்களாக வருகிற வாய்ப்புகள் உண்டு.

இப்படி அறிவை ஏழு வகையாகப் பிரிந்து அலசியிருக்கும் டாக்டர் ஹோவர்ட் கார்ட்னர், ஒவ்வொரு மனிதருக்கும் இவற்றுள் எந்த அறிவுகள் அதிகம் இருக்கும், எந்த அறிவுகள் குறைவாக இருக்கும் என்கிற சதவிகிதம் வேறுபடும் என்கிறார்.

இந்த வினாடியைக் கைப்பற்றிக் கொள் :என்.சொக்கன்

இந்த வினாடியைக் கைப்பற்றிக் கொள் :என்.சொக்கன்

வளர்ந்த மனிதர்களுக்கே இப்படியென்றால், சின்னக் குழந்தைகள் எல்லோருக்கும் இந்த அறிவுகள் எல்லாம் நிறைந்திருக்கும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஆகவே, எந்தக் குழந்தைக்கு எந்தவிதமான ஞானம் உள்ளது என்பதை அறிந்து, அதை மேலும் வளர்ப்பதற்கான பயிற்சிகளை வழங்குவதுதான் ‘MI’ கல்விமுறை.

பாடம் படிப்பது, பிற மொழிகளைக் கற்றுக் கொள்வது, பாட்டுப்பாடுவது, நடனம் ஆடுவது, தபேலா வாசிப்பது, நீச்சலடிப்பது, புட்பால் விளையாடுவது என்று எல்லாவற்றையும் நம் குழந்தைகள் செய்தாக வேண்டும் என்று ஒரேயடியாக எதிர்பார்ப்பதைக் காட்டிலும், அவர்களுடைய இயற்கையான திறமை என்ன என்பதை அறிந்து, அதில் அதிக கவனம் செலுத்துவதால், இந்தக் கல்வி முறைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
இதில், நம் குழந்தைக்குக் குறைபாடு ஏதாவது இருந்தால், அதை மேம்படுத்துவதற்கு விசேஷப் பயிற்சிகளும் இருக்கின்றன.

சுருக்கமாகச் சொன்னால், எல்லாக் குழந்தைகளையும் ஒரு வகுப்பில் உட்காரவைத்து, எல்லோருக்கும் ஒரே மாதிரியாகப் பாடம் நடத்துகிற காலமெல்லாம் போய்விட்டது. ஒவ்வொரு குழந்தைக்கும் வெவ்வேறு விதமான அறிவுகள் இருக்கின்றன. சில அறிவுகள் குறைபடுகின்றன. சிலதை அவர்களால் வேகமாகக் கற்றுக் கொள்ள முடியும். சிலது மெதுவாகத்தான் வரும், அல்லது வரவே வராது.

மொழி அறிவு (Linguistic)
இசை அறிவு (Musical)
கணித / தர்க்க அறிவு (Mathematical / Logical)
காட்சி அறிவு (Visual)
உடலைக் கையாளும் அறிவு (Bodily / Kinesthetic)
புற அறிவு (Exter personal)
அக அறிவு (Inter personal)

ஆகவே, குழந்தைகளின் தன்மைக்கேற்ப, அவர்கள் கற்றும் பாணி (Style)க்கேற்ப பாடத்திட்டங்களை மாற்றியமைத்து, ஒவ்வொரு பிள்ளைக்கும் சிறப்புக் கவனத்துடன் கல்வி புகட்டுவது, இந்த விநாடியை அனுபவித்துக் கற்கும் சந்தோஷத்துக்கு அவர்களைப் பழக்கப்படுத்துவது – இவைதான் நாளையப் பள்ளிகளின் அடையாளமாக இருக்கப் போகின்றன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>