இந்திய, இலங்கை அமைச்சர்கள் பேச்சு; கூட்டு நடவடிக்கை குழு அமைப்பது கண்துடைப்பு: தமிழக மீனவர்கள் கருத்து

jakkamma news

குழு அமைப்பதை விட, இலங்கைக்கு இடையூறின்றி பாரம்பரிய பகுதியில் 83 நாட்கள் மீன்பிடிக்க ஏற்பாடு செய்யவேண்டும். 115 படகுகளையும் உடனே மீட்டு தரவேண்டும். பிரச்னையை தீர்க்க எந்த முடிவும் எடுக்காமலே கூட்டுக்குழு அமைப்பது வீண்.

திருச்சி: இரு நாட்டு மீனவர் பிரச்னை தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரா இடையே டெல்லியில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இரு நாட்டு மீனவர்களின் பிரச்னைகளைத் தீர்க்க இரு நாட்டு பிரதிநிதிகள் குறிப்பாக இரு நாட்டு மீன்வளத்துறை அமைச்சர்கள், வெளிவிவகாரத் துறை பிரதிநிதிகள், இருநாட்டு கடலோர காவல் படை, கடற்படையினர் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த குழு 3 மாதங்களுக்கு ஒரு முறை கூடி பிரச்னைகளை ஆய்வு செய்து தீர்த்து வைக்கும். இந்த குழுவின் முதல் கூட்டம் 2017 ஜனவரி 2ம் தேதி கொழும்பில் நடக்கவுள்ளது. கூட்டு நடவடிக்கை குழுவின் வழிமுறைகளின்படி இரு நாட்டு கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவால் தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது. இது கண்துடைப்பு என தமிழக மீனவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர் சங்க பிரதிநிதி தேவதாஸ்: கூட்டு நடவடிக்கை குழு அமைப்பதால் எந்த பயனும் இல்லை. நாளடைவில் குழுக்கள் செயல்படாமல் போகும். எனவே மீனவர் பிரச்னையை தீர்த்தாலே போதும். கூட்டுக்குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி படகுகளை விடுவிப்பதற்குள் அனைத்து படகுகளும் சேதமடைந்துவிடும். இதனால் மீனவர்கள் பிரச்னை தீராது. எனவே குழு அமைப்பதை விட, இலங்கைக்கு இடையூறின்றி பாரம்பரிய பகுதியில் 83 நாட்கள் மீன்பிடிக்க ஏற்பாடு செய்யவேண்டும். 115 படகுகளையும் உடனே மீட்டு தரவேண்டும். பிரச்னையை தீர்க்க எந்த முடிவும் எடுக்காமலே கூட்டுக்குழு அமைப்பது வீண்.

மீனவர் சங்கப் பிரதிநிதி சேசு: படகை பணயமாக வைத்து இலங்கை அரசு தமிழக மீனவர்களை துன்புறுத்தி வருகிறது. பலகோடி மதிப்புள்ள படகுகளையும், வருமானத்தையும் இழந்து பிழைப்பு நடத்தமுடியாமல் தவித்து வருகிறோம். பேச்சுவார்த்தை கண் துடைப்பாக உள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் நல்ல தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தோம். இதுவும் ஏமாற்றமாக உள்ளது. குழுக்கள் அமைப்பதால் மீனவர் பிரச்னை தீராது. எனவே இந்தியா வரும் இலங்கை அதிபர், பிரதமரிடம் பேசி படகுகளை உடனடியாக மீட்டுதரவும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>