ஆர்.கே.நகரில் வளர்ச்சிப் பணிகளை அ.தி.மு.க. அரசு செய்யவில்லை: மு.க.ஸ்டாலின்

10 ஆண்டுகாலம் ஆர்.கே.நகர் தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை அ.தி.மு.க. அரசு செய்யவில்லை

10 ஆண்டுகாலம் ஆர்.கே.நகர் தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை அ.தி.மு.க. அரசு செய்யவில்லை

சென்னை:

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறதே?

பதில்:- ஏற்கனவே நடைபெற்ற 89 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தி.மு.க. சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்கும் சூழல் வந்துள்ளது. எனவே, இப்படிப்பட்ட செய்திகள் வந்தவுடன் தேர்தல் ஆணையம் முறைப்படி செயல்பட்டு அதையெல்லாம் தடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

கேள்வி:- மேயராக, அமைச்சராக, துணை முதல்-அமைச்சராக நீங்கள் இருந்தபோது ஆர்.கே.நகர் தொகுதியில் எந்த திட்டமும் கொண்டுவரவில்லை என்று முதல்-அமைச்சர் தெரிவித்து இருக்கிறாரே?

பதில்:- 1996-2001 காலகட்டத்திலும், பிறகு இரண்டு ஆண்டுகள் நான் மேயராக பொறுப்பேற்றபோதும், முதல் நிகழ்ச்சியாக ஆர்.கே.நகரில் ஆய்வு நடத்தும் பணியில் தான் ஈடுபட்டேன். எனவே, ஆர்.கே.நகர் தொகுதியில் எங்கெங்கு சிமெண்டு சாலைகள் போடப்பட்டுள்ளன, தண்டையார்பேட்டையில் உள்ள டி.பி. மருத்துவமனை எந்த அளவுக்கு சீர்படுத்தப்பட்டன என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள். அதுமட்டுமல்ல, சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க மேம்பாலங்கள் கட்டப்பட்டன. அதேபோல, உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது ஆர்.கே.நகரில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றன.

ஆனால், நேற்றைய தினம் பிரசாரத்தில் பேசியுள்ள எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், இனிமேல் இந்த தொகுதியை நாங்கள் தத்தெடுத்துக் கொண்டு பல பணிகளை நிறைவேற்ற போகிறோம் என்று சொல்லி இருக்கிறார் கள். அதன் மூலமாக கடந்த 10 ஆண்டுகளாக ஆர்.கே.நகரில் எந்தப் பணியையும் நிறைவேற்றவில்லை என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்.

கேள்வி:- ஒகி புயலால் கன்னியாகுமரி மக்கள் தவித்து வரும் நிலையில் முதல்-அமைச்சர் அங்கு செல்லாமல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாரே?

பதில்:- அது தொடர்பாக நான், உடனடியாக முதல்- அமைச்சர் கன்னியாகுமரிக்கு சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதுடன், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிக்கை விடுத்துள்ளேன். பிரதமருக்கு, பேரிடர் மாவட்டமாக கன்னியாகுமரியை அறிவிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இதை ஏற்கனவே நான் பலமுறை வலியுறுத்தியுள்ளேன். ஆனால், முதல்-அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் எத்தனை பேர் உயிரிழந்து இருக்கிறார்கள், எவ்வளவு பேர் காணாமல் போயிருக்கிறார்கள் உள்ளிட்ட எந்தவொரு புள்ளி விவரங்களையும் குறிப்பிடவில்லை. எனவே, அதுகுறித்த கணக்கை முறையாக எடுக்கவில்லை என்பதே எனது கருத்து.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>