ஆந்திரா – ஒடிசா எல்லையில் துப்பாக்கி சண்டை 23 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஆந்திரா - ஒடிசா மாநில எல்லையில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும், சிறப்பு அதிரடிப் படையினருக்கும் இடையே விடிய, விடிய நடந்த துப்பாக்கிச்சூட்டில் 23 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஆந்திரா – ஒடிசா மாநில எல்லையில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும், சிறப்பு அதிரடிப் படையினருக்கும் இடையே விடிய, விடிய நடந்த துப்பாக்கிச்சூட்டில் 23 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

திருமலை: ஆந்திரா – ஒடிசா மாநில எல்லையில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும், சிறப்பு அதிரடிப் படையினருக்கும் இடையே விடிய, விடிய நடந்த துப்பாக்கிச்சூட்டில் 23 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் ஒரு போலீஸ்காரர் பலியானார். மேலும், ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சையில் உள்ளார். ஆந்திரா – ஒடிசா எல்லையோர கிராமங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அதிகம் உள்ளனர். சில கிராமங்கள் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இவர்களை ஒழிக்க எல்லையில் இரு மாநில அரசின் அதிரடிப்படையும் கூட்டாக செயல்பட்டு வருகிறது. ஆந்திர எல்லையையொட்டி ஒடிசாவில் உள்ள மால்கன்கிரியில் சிறப்பு அதிரடிப்படை அடிக்கடி சோதனை நடத்தி மாவோயிஸ்ட்களின் அட்டகாசத்தை ஒடுக்கி வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்ட எல்லையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒடிசா மாநிலம், மால்கன்கிரி மாவட்டம், ஜந்த்ரி வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக சிறப்பு அதிரடிப் படையினருக்கு நேற்று முன்தினம் மாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆந்திர மற்றும் ஒடிசா மாநில சிறப்பு அதிரடிப்படையினர் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அடர்ந்த வனப்பகுதிக்குள் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்தனர்.

உடனடியாக அவர்களை சுற்றி வளைத்து, சரணடையும்படி எச்சரித்தனர். ஆனால் தீவிரவாதிகள் திடீரென அதிரடிப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். மேலும் கற்களை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர். சுதாரித்துக்கொண்ட அதிரடிப்படையினர், தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். விடிய, விடிய இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. நேற்று அதிகாலை வரை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 23 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிரடிப் படையினர் தெரிவித்தனர். தொடர்ந்து, அவர்கள் பதுங்கியிருந்த இடத்தில் சோதனை நடத்தியதில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஏகே-47 துப்பாக்கிகள் 4, எஸ்எல்ஆர் துப்பாக்கிகள்-2, சிறிய அளவிலான துப்பாக்கிகள் 2 மற்றும் ஆயுதங்களை அதிரடிப்படையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து 23 சடலங்கள் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் ஒடிசாவின் மால்கன்கிரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வனப்பகுதியில் தீவிரவாதிகள் மேலும் பதுங்கியிருக்கிறார்களா என்று அதிரடிப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில்
ஈடுபட்டுள்ளனர்.

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஆந்திர மாநிலம், காஜூவாக்கா பகுதியைச் சேர்ந்த போலீஸ்காரர் அபுபக்கர், சதீஷ் ஆகியோர் படுகாயமடைந்து விசாகபட்டினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி போலீஸ்காரர் அபுபக்கர் நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். சதீஷிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து, ஆந்திர மாநில டிஜிபி சாம்பசிவராவ் நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திர, ஒடிசா மாநில எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதியில் அதிரடிப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு தீவிரவாதிகள் ரகசிய கூட்டம் நடத்தி வந்துள்ளனர். இதை பார்த்த போலீசார் உடனடியாக அவர்களை சரணடையும்படி கூறினர். ஆனால் அவர்கள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் எதிர்தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்துகொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

20 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டவர்
சித்தூர் மாவட்டம், தவனம்பல்லி மண்டலம், பைபல்லி கிராமத்தை சேர்ந்தவர் ஜலபதி(60). இவர், கடந்த 1979ம் ஆண்டு மாநில அரசின் பட்டு பூச்சி வளர்ச்சித் துறையில் அதிகாரியாக பணியாற்றி, விஜயவாடாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து, மாவோயிஸ்ட்களிடம் பழக்கம் ஏற்பட்டு, ஆந்திர, ஒடிசா மாநில அரசுகளின் தேடப்படும் மாவோயிஸ்ட் மண்டல செயலாளராக இருந்தார். இவரை உயிருடன் பிடித்து கொடுத்தாலோ அல்லது பிணமாக பிடித்தாலோ அவர்களுக்கு 20 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று ஆந்திர மற்றும் ஒடிசா மாநில அரசுகள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகளில் மற்றொருவர் கஜ்ராலா ரவி என்கிற உதய். இவரும் மாவோயிஸ்ட் அமைப்பில் முக்கிய தலைவராக இருந்தார். இவர்களை சுட்டுக்கொன்றதன் மூலம் மாவோயிஸ்ட்களின் நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

* 1967 முதல் மாவோயிஸ்ட் இயக்கம் இந்தியாவில் இயங்கி வருகிறது.
* மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்க 2010ல் சுமார் 50ஆயிரம் கூட்டுப்படை வீரர்கள் நாடு முழுவதும் வேட்டை நடத்தினர்.
* மால்கன்கிரி மாவட்டத்தில் இதற்கு முன் 2013ல் நடத்திய தாக்குதலில் 13 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர்.
* 1990 முதல் 2015 வரை 7,719 மக்கள், 2,606 வீரர்கள், 3,009 மாவோயிஸ்ட்கள் உள்பட 13,490 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>