ஆட்சி அமைக்க அழைப்பா? பேரவை முடக்கமா? கவர்னர் வித்யாசாகர்

www.jakkamma.com

சென்னை: இரு தரப்பில் யாரை ஆட்சி அமைக்க அழைப்பது அல்லது சட்டப்பேரவையை முடக்குவதா? என்று எந்த முடிவை எடுப்பது என்பது குறித்து தமிழக பொறுப்பு கவர்னர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கிடையில், தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை, அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர், டிஜிபி, கமிஷனர் ஆகியோருடன் அவர் நேற்று அதிரடியாக ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கேட்டு அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், சசிகலா அணியினரும் போட்டி போட்டு கவர்னர் வித்யாசாகர் ராவை நேற்று முன்தினம் சந்தித்து மனு அளித்தனர்.

அதில், பன்னீர்செல்வம் சந்திப்பின்போது, “என்னிடம் மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கப்பட்டது. எனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் மெஜாரிட்டியை நிரூபிக்க தயார். எம்எல்ஏக்களை சசிகலா தரப்பினர் கட்டாயப்படுத்தி சிறை வைத்துள்ளனர். அவர்களை சுயமாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால், எனக்கு மெஜாரிட்டி கிடைக்கும். அவர்களிடம் இருந்து தப்பி வந்த 2 பேர் தற்போது எங்களுடன் உள்ளனர். மேலும் பலர் வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். அதனால், மீண்டும் ஆட்சி அமைக்க என்னை அழைக்க வேண்டும்” என்று கோரினார்.

ஆட்சிக்கு உரிமை: இதைத்தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, மூத்த அமைச்சர்கள் மற்றும் அக்கா மகன் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் தமிழக கவர்னரை சந்தித்தனர். அப்போது சசிகலா, “அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் என்னை அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டி ராஜினாமா செய்ய சொல்லவில்லை. தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்” என்று உரிமை கோரினார். தற்போது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகிய இருவரும் தனித்தனியாக தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளனர். இந்த இருவரில் யாரை ஆட்சி அமைக்க அழைப்பது என்பது குறித்து முடிவெடுப்பது குறித்து சட்ட வல்லுநர்கள் மற்றும் மத்திய அரசின் அதிகாரிகளுடன் கவர்னர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

14 ம் தேதி தீர்ப்பு: மேலும் உச்சநீதிமன்றத்தில் சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் வருகிற 14ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சசிகலா பதவி ஏற்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் ஓரிரு நாளில் விசாரணைக்கு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்திலும் சசிகலா பதவி ஏற்புக்கு எதிராக 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த 4 வழக்கிலும் என்ன முடிவு வரும் என்பது தெரியாததால் அது குறித்தும் கவர்னர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனால், தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களிடம் தற்போது கவர்னர் யாரை ஆட்சி அமைக்க அழைப்பார் என்ற ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பினர், “தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை மிரட்டி ராஜினாமா வாங்கியுள்ளனர். பொதுமக்களின் ஆதரவு தனக்கு உள்ளது என்று வலியுறுத்தி கூறியுள்ளதால் அவரைதான் கவர்னர் அழைப்பார்” என்று கூறுகின்றனர். மற்றொரு தரப்பினர், “சசிகலாவிடம்தான் அதிக எம்எல்ஏக்கள் உள்ளனர். மேலும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக கவர்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார். இனி அவரை அழைக்க வாய்ப்பு இல்லை. சசிகலாவை தான் அழைப்பார்” என்று கூறி வருகிறார்கள்.

என்ன முடிவு: எந்த முடிவானாலும், கவர்னர் தெரிவிக்கபோகும் பதிலில்தான் அடங்கியுள்ளதால், தற்போது தமிழக அரசியல்வாதிகள், பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள், ஓ.பன்னீர்செல்வம் அணியினிர், சசிகலா ஆதரவாளர்கள் என அனைவரின் பார்வையும் தற்போது கவர்னர் வித்யாசாகர் ராவ் பக்கம் தான் உள்ளது. அவர் தனது முடிவை விரைவில் அறிவிக்க வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால், கவர்னர் அவசரப்படாமல் ஒன்று, இரண்டு நாள் பொறுத்திருந்துதான் தனது முடிவை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோருடன் நேற்று காலையில் வித்யாசாகர் ராவ் ஆலோசனை நடத்தினார்.

அப்போது தற்போது ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு பிரச்னை, எம்எல்ஏக்கள் கடத்தப்பட்டதாக எழுந்துள்ள புகார், .பி.எஸ். ஆதரவாளரும் எம்எல்ஏவுமான சண்முகநாதன், கடத்தப்பட்டதாக எழுந்த புகார் குறித்து போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் சசிகலா மீதான உச்சநீதிமன்ற தீர்ப்பு வருகிற 14ம் தேதி வரும் என்று எதிர்பார்க்கப்படுவால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தினார். அதோடு, தமிழகத்தில் இரு அணியினரும் போட்டிபோட்டு ஆட்சி அமைக்க உரிமை கோருவதால், சட்டப்பேரவையை 6 மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்வது குறித்தும் சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் தமிழக கவர்னர் எடுக்கும் முடிவை தமிழக மக்கள் ஆவலோடும், பரபரப்போடும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>