அ.தி.மு.க அணிகள் இணைப்பில் தாமதம் ஏன்?

201708191120540860_Why-are-the-ADMK-teams-delaying-the-connection-_SECVPF

அ.தி.மு.க அணிகள் குறித்து முதல்-அமைஅச்சர் எடப்பாடி பழனிசாமி
தலைமையிலும், ஒ.பன்னீர் செல்வம் தலைமையிலும் தனித்தனியாக ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தின் முடிவில் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்று எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் ஒன்றாக செய்தியாளர்களிடம் அறிவிப்பு வெளியிடுவார்கள் என்றும் கூறப்பட்டது. இருவரும் நேராக ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்து அணிகள் இணைப்பு பற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் ஆலோசனை கூட்டம் முடியாமல் இழுத்துக்கொண்டே சென்றது.

அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்த அமைச்சர்கள், ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவை எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால், அங்கிருந்து எந்த வித சாதகமான பதிலும் வராத நிலையில், இரவு 8.45 மணி அளவில் ஒவ்வொரு அமைச்சராக அங்கிருந்து புறப்பட்டு செல்லத் தொடங்கினார்கள்.

ஜெயலலிதா நினைவிடத்தில் காத்திருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும், தொண்டர்களும் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்ல தொடங்கினார்கள். இதனால், அ.தி.மு.க. இரு அணிகள் இணைவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

கட்சியிலும், ஆட்சியிலும் பதவிகளை பகிர்ந்துகொள்வதில் ஏற்பட்ட இழுபறியின் காரணமாகவே அ.தி.மு.க. அணிகள் இணைப்பில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆட்சியில் துணை முதல்- அமைச்சர் பொறுப்பும், கட்சியில் வழிநடத்தும் குழு தலைவர் பொறுப்பும் வழங்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2 பேருக்கு அமைச்சர் பொறுப்பு தருவதாகவும், வழிகாட்டி குழுவில் இருவருக்கு உறுப்பினர் பொறுப்பு தருவதாகவும் கூறப்பட்டது.

ஆனால், ஓ.பன்னீர்செல்வம், தனக்கு பொதுப்பணித்துறையும், உள்துறையும் கேட்பதாக கூறப்படுகிறது. மேலும், தனது அணியில் உள்ள மாபா பாண்டியராஜன், செம்மலை ஆகியோருக்கு முக்கிய துறைகளை தரும்படி கேட்டுள்ளார். தனது ஆதரவாளர்களுக்கும் கட்சியில் மாவட்ட செயலாளர்கள் பொறுப்பையும், மாநில நிர்வாகிகள் பொறுப்பையும் அதிகமாக தரும்படி ஓ.பன்னீர்செல்வம் நிர்ப்பந்தித்ததாக கருதப்படுகிறது.

இதற்கு எடப்பாடி பழனிசாமி அணியினர் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் தங்கள் முடிவில் இருந்து இறங்கி வருவதாக இல்லை. தொடர்ந்து, இரு அணி நிர்வாகிகளும் போன் மூலமே பேசிக்கொண்டனர். ஆனால், எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், ஒவ்வொருவராக புறப்பட்டு செல்லத் தொடங்கினார்கள்.

இந்நிலையில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான நிர்மலா பெரியசாமி, “சுமார் ஆறு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் அனைவரது கருத்துகளையும் தனித்தனியாக ஓ.பன்னீர்செல்வம் கேட்டார் என்றும், ஜனநாயக நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவர் என்பதை மீண்டும் அவர்
நிருபித்திருக்கிறார் என்றும், முடிவு என்ன என்பதை அவரே நேரடியாக அறிவிப்பார்” என்றும் கூறினார்.

ஆனால், நள்ளிரவுக்குப் பின்பும் பன்னீர்செல்வமோ அவரது சார்பிலோ யாரும் வந்து ஊடகத்திடம் பேசவில்லை.

இந்நிலையில் இணைப்புக்கு முட்டுக்கட்டையாக உள்ள பிரச்னைகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் சனிக்கிழமையும் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்துவார் என்று அதிமுகவினர் தெரிவித்தனர்.

ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற சில நிர்வாகிகள், “நாங்கள் இதுவரை
எடப்பாடி பழனிசாமி அணியை விமர்சித்து பேசி வந்துள்ளோம். உங்களை நம்பிதான் இத்தனை நாட்கள் தொகுதி முழுக்க இப்படி செயல்பட்டு உள்ளோம். எங்களுக்கு எந்த உத்தரவாதமும் தராமல் அணியை இணைத்து விட்டால் தொகுதியில் நாங்கள் இனி எப்படி செயல்பட முடியும்” என்ற குமுறலை வெளியிட்டனர். கே.பி.முனுசாமி பேசுகையில், “ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை மட்டும் போதாது சி.பி.ஐ. விசாரணை கோரி வலியுறுத்த வேண்டும்” என்ற புது சர்ச்சையை எழுப்பினார்.

இதையடுத்து மூத்த தலைவர்கள் இடையே சில பதவி பிரிப்பு விஷயத்தில் கருத்து வேறுபாடு உருவாகி விவாதம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் காரசார மாக பேசிக்கொண்டனர்.

இதற்கிடையே ஓ.பி.எஸ். அணியில் நடத்தப்பட்ட ஆலோசனை பற்றி எடப்பாடி தரப்புக்கு தெரிவிக் கப்பட்டது. ஆனால் எடப்பாடி அணியினர் ஓ.பி.எஸ். அணியின் புதிய கோரிக்கைகள் எதையும் ஏற்க மறுத்து விட்டனர். குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவியை தர இயலாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

அடுத்து கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், நத்தம் விசுவநாதன் ஆகியோருக்கு பதவி கொடுப்பதற்கு எடப்பாடி தரப்பில் இருந்து திருப்தியான பதில் அளிக்கப்படவில்லை. இது அணிகள் இணைப்புக்கு சிக்கலை அதிகரிக்க செய்துள்ளது.

இரவு 9 மணி வரை இத்தகைய சிக்கல்களுக்கு தீர்வு காண முடியாததால் இரு அணிகள் இணைப்பு இழுபறியாகி நீடித்துக் கொண்டு இருக்கிறது. ஓ.பி.எஸ். அணியை பொறுத்தவரை சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும், முக்கியமான அதிக பதவிகளை பெற வேண்டும் என்ற இந்த 2 விஷயங்களிலும் தீவிரமாக உள்ளனர்.

ஆனால் எடப்பாடி அணியினருக்கு இது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவை நீக்க வேண்டுமானால் பொதுக் குழுவை கூட்ட வேண்டும் என்ற சிக்கல் இருப்பதால் அவர்கள் அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி வருகிறார்கள்.

குறிப்பாக சசிகலா பதவி செல்லுமா? என்ற விவகாரத்தில் தேர்தல் கமிஷன் வழங்க இருக்கும் தீர்ப்பை பார்த்து விட்டு பிறகு முடிவு செய்வோம் என்று கூறி வருகிறார்கள். ஆனால் ஓ.பி.எஸ். அணியினர் அந்த பதவியை விட்டு விடக்கூடாது என்று நினைக்கிறார்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>