அரசு – தனியார் டாக்டர்கள் போராட்டம்

201801021059196131_doctors-strike-IMA-strike-government-private-doctors-strike_SECVPF

அரசு – தனியார் டாக்டர்கள் போராட்டம்: சென்னையில் புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டதால் நோயாளிகள் தவிப்பு
புதிய மருத்துவ மசோதாவை கண்டித்து இன்று ராஜீவ் காந்தி மருத்துவமனை டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை:

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு (எம்.சி.ஐ) பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மருத்துவ கல்வி தொடர்பான முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்தில் இந்த புதிய ஆணையத்தை மத்திய அரசு அமைக்க உள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க வகை செய்யும் மசோதா பாராளுமன்ற மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த ஆணையம் மக்கள் நலனுக்கு எதிரானது என்றும் மருத்துவ, சுகாதார பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இந்த சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்து நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ ஆணையம் அமைக்கும் புதிய மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் டாக்டர்கள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் மருத்துவமனைகளில் அவசர அறுவை சிகிச்சை மற்றும் உள் நோயாளிகள் சிகிச்சை தவிர டி.பி. நோயாளிகளுக்கு இன்று சிகிச்சை அளிக்கப்படவில்லை. புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டன.

தமிழகத்தில் சுமார் 5 ஆயிரம் தனியார் மருத்துவமனைகள் செயல்படுகின்றன. இந்த மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பெறுவதற்கு மட்டுமே நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். தனியார் மருத்துவமனைகளில் பணியாளர்களும், 60 ஆயிரம் டாக்டர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் பிரசித்தி பெற்ற தனியார் மருத்துவமனைகளில் கூட இன்று புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு மட்டும் அந்த பிரிவில் பணியாற்றிய மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒரு மணி நேரம் புற நோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து விட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி, கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஒருமணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் புறநோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நீரிழிவு, சிறுநீரகம், ரத்த கொதிப்பு, இருதயம், நரம்பியல் உள்ளிட்ட துறை சார்ந்தவர்களும், காய்ச்சல், தலைவலி, கைகால் வலிக்கு சிகிச்சை பெற வந்தவர்களும் பாதிக்கப்பட்டனர்.

ஸ்டான்லி மருத்துவமனையில் அரசு டாக்டர்கள் சங்க சென்னை மாவட்ட தலைவர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் தர்ணா போராட்டம் நடந்தது.

வேலை நிறுத்தம் குறித்து இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் பிரகாஷ், ரவி சங்கர் கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டு வரும் மருத்துவ ஆணையத்தால் மாநில அரசுகளுக்கு உரிமையும், தொடர்பும் இல்லாத நிலை உருவாகி விடும். புதிய நலத்திட்டம், தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் போன்ற வற்றை நிர்ணயம் செய்வதில் பெரும் பாதிப்பு ஏற்படும்.

தகுதியற்ற மருத்துவ கல்லூரி களை நீக்கம் செய்யவும் முடியாது. நீட் தேர்வு எழுதி எம்.பி.பி.எஸ். படித்து முடிக்கும் மாணவர்கள் பின்னர் பதிவு பெறுவதற்கு மீண்டும் தகுதித் தேர்வு எழுத வேண்டும். சித்தா, ஒமியோபதி போன்ற மருத்துவ முறைகளுக்கும் ஒரே பதிவை கொண்டு வருகிறார்கள். இதனால் மக்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள்.

இந்த மசோதாவால் சில மாற்றங்களை செய்ய வேண்டும். ஒரு மாநிலத்திற்கு ஒரு பிரதிநிதி இடம் பெற வேண்டும்.

புதிய மசோதாவை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. அவசர ‘கேஸ்களை’ தவிர மற்ற சிகிச்சை பிரிவுகள் எதுவும் செயல்படாது.

சென்னையில் மட்டும் 5 ஆயிரம் தனியார் டாக்டர் கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு இதில் கவனம் செலுத்தவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வோம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>