அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதியம்: அக். 13 வரை அரசுக்கு கெடு

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவிடமிருந்து அறிக்கையை பெற்று வரும் அக். 13-ம் தேதிக்குள் அரசு முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவோ, சம்பளத்தில் பிடித்தம் செய்யவோ கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் டி.சேகரன், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிமன்ற தடை உத்தரவை ஏற்று அரசு ஊழியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி கே.கே. சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜரானார். அரசு தரப்பு கருத்துகளை அறிக்கையாக சமர்ப்பித்தார். பின்னர், அது தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார்.

முன்னதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் வாதிடுகையில், “மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிறது.

இதற்காக மாநில அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு ஓராண்டு ஆன பிறகும் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.

1.4.2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களையும் பழைய ஓய்வூதிய திட்டத்துக்குள் கொண்டுவர வேண்டும். இதற்காக அமைக்கப்பட்ட குழுவும் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதனால் 11 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பலமுறை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு ஏற்படாததால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோம். இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும்” என்றார்.

அதற்கு பதிலளித்து, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன் கூறியதாவது: தமிழகத்தில் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த அலுவல் குழு அமைக்கப்பட்டு செப்டம்பர் 30-க்குள் அரசுக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கிடைத்தவுடன் 4 அல்லது 5 மாதங்களில் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்.

1.4.2003-க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குள் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக ஆய்வு செய்வதற்காக ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட தனி குழுவின் பதவி காலம் வரும் நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியத் திட்டத்தைப் பொறுத்தவரை, மத்திய அரசு ஊழியர்களுக்கும் பங்களிப்பு (புதிய) ஓய்வூதியத் திட்டம்தான் அமலில் உள்ளது. அதேபோன்று மேற்குவங்கம், திரிபுரா மாநிலங்கள் தவிர்த்து அனைத்து மாநிலங்களில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்தான் அமலில் உள்ளது.

7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படுவதற்கு தாமதம் ஏற்படுவதால் இடைக்கால நிவாரணம் அளிக்க வேண்டும் என கேட்கின்றனர். அலுவல் குழு இன்னும் அறிக்கை அளிக்காத நிலையில் இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து இப்போது எதையும் சொல்ல முடியாது.

அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்தான் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், நாட்டிலேயே தமிழகத்தில்தான் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.7,642 முதல் ரூ.10,710 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இருப்பினும், அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருகிறது” என்றார்.
highcourt_2597637f
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும் என அரசு தலைமை வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய 3 வாரம் அவகாசம் தர வேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை நிறுத்திவைக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 10 நாள் சம்பளத்தை பிடித்தம் செய்யவுள்ளனர். இதற்கும் தடை விதிக்க வேண்டும்.

இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என ஜாக்டோ- ஜியோ அமைப்பின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், “வேலை செய்யாவிட்டால் ஊதியம் இல்லை என்ற கோட்பாட்டின்படியே வேலை செய்யாத நாட்களுக்கு சம்பளம் பிடிக்கப்படுகிறது. இதற்கு தடை விதிக்கக் கூடாது” எனக் கேட்டுக்கொண்டார்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவு:

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு அரசிடம் செப். 30-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையை ஏற்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக தமிழக அரசு அக்டோபர் 13-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும். அதற்குள் முடிவு எடுக்காவிட்டால், ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும். வேலைநிறுத்த நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்யக் கூடாது. அதற்கு பதிலாக சனிக்கிழமைகளில் வேலைக்குச் சென்று வேலைநிறுத்த காலத்தை சமன் செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அடுத்த விசாரணை அக்டோபர் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகளில் ஒருவரான கே.கே.சசிதரன் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாறுதலாகி செல்வதால், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்க இரு தரப்பும் தலைமை நீதிபதியிடம் மனு அளிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>