அரசுக்கு எதிராக குமரியில் போராட்டம் 10,000 மீனவர்கள் மீது வழக்கு

36912

நாகர்கோவில்: ஓகி புயலில் மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய 10 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் குமரி, நாகை மாவட்டத்தில் மீனவர்கள் போராட்டம் வலுத்துள்ளது. ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. புயலில் சிக்கி ஏராளமான மீனவர்களை காணவில்லை. இதுவரை 13 மீனவர்கள் உயிர் இழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பில் 582 மீனவர்கள் மாயமாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த கணக்கு குறைவு என்று மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கேரளா போல் நிவாரணம்வழங்கவும், மாயமான மீனவர்களை உடனடியாக மீட்கவும் வலியுறுத்தி பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், ராஜாக்கமங்கலம் அடுத்த கல்லுக்கட்டி சந்திப்பில் நேற்று முன்தினம் நடந்த போராட்டம் பற்றி நீண்டகரை கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அழிக்கால் பங்குதந்தை ரொனாஜியஸ், துணை பங்குதந்தை மரியதாஸ், பிள்ளைதோப்பு பங்குதந்தை அருள்சீலன், ராஜாக்கமங்கலம் ஒன்றிய திமுக செயலாளர் சற்குரு கண்ணன், குருந்தன்கோடு ஒன்றிய செயலாளர் குட்டி ராஜன் உள்பட 1,000 ஆண்கள், 1,500 பெண்கள் என 2,500 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதேபோல கன்னியாகுமரி ரவுண்டானா பகுதியில் நேற்று முன்தினம் நடந்த போராட்டம் குறித்து எஸ்ஐ ஜெபஸ்டின் கிரேஷியஸ் புகாரின் பேரில் குமரி கடலோடிகள் இயக்க செயலாளர் சகிம்சன் உள்பட 1,690 ஆண்கள், 750 பெண்கள் என 2,440 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. குமரியில் நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டத்தில் மொத்தம் 4,940 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

குழித்துறையில் கடந்த 7ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடந்தது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரயில் போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாகவும், தண்டவாளங்களில் அமர்ந்து விதிமுறைகளை மீறியதாகவும் பல்வேறு சட்ட விதிகளின் அடிப்படையில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார், 18 பங்கு தந்தைகள் உள்பட 5 ஆயிரம் பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இவர்கள் மீதான குற்ற அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்றுவருகிறது.இப்படி 10 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்தபோதிலும் மீனவர்கள் போராட்டம் ஓயவில்லை. நேற்றும் குமரி, நாகை, உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நீடித்தது. கன்னியாகுமரியில் ராஜாக்கமங்கலம் துறை, பெரியகாடு, பொழிக்கரை, கேசவன்புத்தன்துறை, புத்தன் துறை, பள்ளம், அன்னை நகர், முட்டம் ஆகிய 8 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை அந்தந்த பகுதி கடற்கரைகளில் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதில் 4000 பேர் பங்கேற்றனர். அவர்கள் கையில் கருப்பு கொடிகளை ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். கடலில் அலையடித்த போதிலும் சிறுவர், சிறுமிகளும் பெரியவர்களுடன் சேர்ந்து கடலில் இறங்கி போராடியது குறிப்பிடத்தக்கது. தூத்தூர் மண்டலம் சின்னத்துறையில் மீனவர்கள் 2வது நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். இதில் பள்ளி மாணவ மாணவிகள் உள்பட 2,000 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

நாகை: நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தை சேர்ந்த வெற்றிச்செல்வன் (28), கவிமணி (24) உள்ளிட்ட 12 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. மாயமான 12 பேரையும் மீட்க வலியுறுத்தி நம்பியார் நகர் சமுதாய கூடத்தில், மீனவர்களின் குடும்பத்தினர் நேற்று காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ேபாராட்டத்தின்போது பெண்கள் தங்களது தலை முடியை அவிழ்த்து தலைவிரி கோலத்தில் கதறி அழுதனர். மாயமான 12 மீனவர்கள் மீட்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தங்கச்சிமடத்தில் 2 கி.மீ. பேரணி: ஓகி புயலில் மாயமான கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை மீட்கக் கோரி, தங்கச்சிமடம் மீனவ மக்கள் நேற்று பேரணி நடத்தினர். தங்கச்சிமடம் சவேரியார் ஆலயத்தில் இருந்து கருப்பு பேட்ஜ் அணிந்து 2 கி.மீ தூரம் பேரணியாக, குழந்தை ஏசு தேவாலயம் வந்த மீனவர்கள் அங்கு மெழுகுவர்த்தி ஏந்தி மாயமான மீனவர்கள் கிடைக்க பிரார்த்தனை செய்தனர்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட 1000க்கு அதிகமானோர், கோட்டக்குப்பம் இசிஆர் சாலை ரவுண்டானா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தரங்கம்பாடி மீனவர் பலி: தரங்கம்பாடி அருகே உள்ள குட்டியாண்டியூர் கிராமத்தை சேர்ந்த சஞ்சிகண்ணு (45). 12 பேருடன் தேங்காய்பட்டணத்தில் மீன் பிடித்தார். புயலில் இவர்களது படகு கவிழ்ந்து பலியானவர்களின்உடல்கள் மிதப்பதாகவும், விசைப்படகில் இருந்த பாதுகாப்பு பெட்டி லட்சத்தீவில் ஒதுங்கி மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இதனால், சஞ்சிகண்ணு இறந்ததை அறிந்து குட்டியாண்டியூர் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

கடலூரில் ஒப்பாரி போராட்டம்
கடலூர் மாவட்டத்தில் இருந்து 500 பேர், கன்னியாகுமரி-கேரள கடற்கரையில் மீன்பிடிக்க சென்றனர். இவர்களில் பலரது நிலை பற்றி எந்த தகவலும் இல்லை. அவர்களை மீட்கக்ேகாரி கடலூரில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். தேவனாம்பட்டினத்தில் இருந்து 1000க்கு அதிகமானோர் ஊர்வலமாக புறப்பட்டு கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் சென்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் ஒப்பாரி வைத்து அழுதனர். இதேபோல், கடலூர் தலைமை அஞ்சல் நிலையம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கடலூர் துறைமுகம், ரயில் நிலையம் சந்திப்பில் பல்வேறு மீனவ அமைப்புகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

2 மீனவர்கள் மீட்பு
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள சந்திரபாடி கிராமத்தை சேர்ந்த அறிவழகன் (22), சுகன் (18), பரதன் (22), சபரிநாதன் (23), சத்தியசகிலன் (21) ஆகிய 5 மீனவர்களும் கொச்சின் துறைமுகம் அருகே புயலில் சிக்கித்தவித்தனர். இவர்களில் அறிவழகனையும், சுகனையும் கடலோரபடையினர் மீட்டு வந்தனர். இதுகுறித்து, ஊர் திரும்பிய அறிவழகன் கூறும்போது, ‘ஓகி புயலில் சிக்கி திசை தெரியாமல் எங்கள் படகு சென்றது. 9 நாட்களாக படகிலேயே தத்தளித்தோம். 5ம் தேதி கடற்படையை சேர்ந்தவர்கள் ஹெலிகாப்டரில் வந்து என்னையும், சுகனையும் காப்பாற்றி லட்சத்தீவில் இறக்கிவிட்டனர். அங்கிருந்து கேரளா அரசு எங்களை நாகைக்கு அனுப்பி வைத்தது. மற்ற 3 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை’ என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>