அரசியல் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெற்றிக்கும் ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம் : அமைச்சர் ஜெயக்குமார்

1486649087-6353

சென்னை: ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. தற்போது இரு அணிகளும் இணைவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். முன்னதாக, சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து விலக்கி வைத்தால்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று ஓபிஎஸ் அணியினர் கூறினர். இதையடுத்து, சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் குடும்பத்தை கட்சியில் இருந்து விலக்கி வைத்து விட்டோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் மூன்று நாட்களுக்கு முன் அறிவித்தார். இதுபற்றி நேற்று முன்தினம் கருத்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், “சசிகலா குடும்பத்தை விலக்கி வைத்தது எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி” என்றார்.இந்நிலையில், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தனித்தனியாக தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை நேற்று காலை சந்தித்து பேசினர். கவர்னரை சந்தித்துவிட்டு வெளியே வந்த அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கவர்னரை திடீரென சந்தித்த காரணம்?

மீன்வள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. இணை வேந்தர் என்ற முறையில் கவர்னரை சந்தித்து பேசினேன். அப்போது துணை வேந்தருக்கான கலந்தாய்வும் நடந்தது.

ஓபிஎஸ்சை உங்கள் அணி சார்பில் சந்திப்பீர்களா?

யார் யாரை சந்திப்பது என்பது முக்கியம் அல்ல. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஒரு கருத்தை சொல்லி, அந்த கருத்தின் அடிப்படையில் அவர்கள் வந்து பேசுவதற்கு தயார் என்று சொன்னார்கள். நாங்களும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சொன்னோம். அந்த அடிப்படையில் நாங்களும் ஒன்று கூடி, ஒரு குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தோம். அவர்களும் ஒரு குழு அமைக்கப்படும் என்ற கருத்தை தெரிவித்தனர். குழு அமைத்து அவர்கள் ஒருநாள் குறித்து, இந்த தேதியில் பேச வேண்டும் என்றும் எங்களை கேட்டால் நிச்சயம் நாங்கள் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம்.

ஓபிஎஸ் நிர்ப்பந்தத்தால்தான் சசிகலா, டி.டி.வி.தினகரன் அவர்களது குடும்பத்தை விலக்கி வைத்தீர்கள் என்றும், இது எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளாரே?

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். அந்த கருத்தெல்லாம் ஏற்புடைய கருத்து கிடையாது. அமெரிக்க அதிபர் டிரம்ப் என்னால்தான் வெற்றி பெற்றார் என்று நான் சொல்லிக் கொள்ளலாம். ஓபிஎஸ்சால் தான் ஜெயித்தார் என்று அவரும் சொல்லிக் கொள்ளலாம். அதெல்லாம் அவுங்கவுங்கள பொறுத்துதான் இருக்கு. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள்:

குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் பகுதியில் 1149 ஏக்கர் பரப்பளவில் இசா ஏரியில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, தினகரன் சொல்வதுபோல் வருமான வரித்துறை சோதனைக்கு அமைச்சர்கள் யாரும் பயப்படவில்லை. ஓபிஎஸ் தரப்பில் எல்லாவற்றிற்கும் முற்று புள்ளி வைத்த போதும். சிலர் ஒவ்வொன்றாக பேசி வருகின்றனர். இது அவர்கள் மனதில் தெளிவு இல்லை என்பதையே காட்டுகிறது.
ஓபிஎஸ் அணியுடன், எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். பேச வருவதற்கு அவர்களுக்கு விருப்பம் இல்லை. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் பார்த்தார்களாம் என்ற கதை போல் அவர்களது நிலை உள்ளது. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சொன்னதை போல் நாங்கள் நடந்து வருகிறோம். தொண்டர்களின் மன ஓட்டத்தையே நான் பிரதிபலித்தேன். தொண்டர்களின் உணர்வு, பொதுமக்களின் உணர்வை நாங்கள் ஒன்று கூடி சொன்னோம். அதை ஓபிஎஸ் தங்களது வெற்றி என்று சொன்னால் என்ன அர்த்தம். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>