அணைப் பாதுகாப்பு மசோதாவை செயல்படுத்தக் கூடாது: தமிழகமுதல்வர்

jayalalithac அணைப் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு செயல்படுத்தக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள கடிதம் விவரம்: அணைப் பாதுகாப்பு மசோதா-2016 தொடர்பாக மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டு, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் உங்களின் (பிரதமர்) நடவடிக்கை கோரி இந்தக் கடிதத்தை அனுப்புகிறேன். இது போன்ற மசோதா, 2010-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. மீண்டும் அதே அம்சங்கள்: அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 2011 ஜூலை 29-ஆம் தேதியும், 2012 மார்ச் 17-ஆம் தேதியும் அப்போதைய பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அதே அம்சங்கள் தற்போதைய வரைவு மசோதாவிலும் இடம்பெற்றுள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அணைகளின் பாதுகாப்பு என்பது மாநில அரசுகளின் உரிமைகளுக்கு உள்பட்டதாகும். தற்போதைய அணைப் பாதுகாப்பு மசோதாவில் இதுபோன்ற உரிமைகள் மாநில அரசுக்கு இல்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால், பெருமளவில் விவசாயிகள் பாதிக்கப்படுவதுடன், குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும். ஏற்க முடியாது: ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் அமைந்துள்ள அணைகள் எந்த மாநிலத்துக்குச் சொந்தமானாலும், எந்த மாநிலம் அதனைப் பராமரித்தாலும், எந்த மாநிலம் அணையை இயக்கினாலும், அந்த அணையானது அமைந்திருக்கும் மாநிலத்தின் அணைப் பாதுகாப்பு அமைப்பின் அதிகார வரம்புக்குள்பட்டது என்ற நிபந்தனை மசோதாவில் இடம்பெற்றுள்ளது. இந்த அம்சத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இந்த அம்சத்தை ஏற்கெனவே குறிப்பிட்டபடி பொருத்தமான முறையில் திருத்தியமைக்க வேண்டும். மறு பரிசீலனை தேவை: பல அணைகள் மலைப் பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும், வனவிலங்கு சரணாலயங்களிலும், தேசியப் பூங்காக்களிலும் அமைந்துள்ளன. அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும் வனங்கள் மற்றும் பாதுகாப்புப் பகுதிகளுக்குச் செல்ல அணை பராமரிப்பு அதிகாரிகளுக்கு கட்டுப்பாடற்ற உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அதற்கான பிரத்யேக அம்சம் இந்த மசோதாவில் இடம்பெற வேண்டும். புதிய மசோதாவில் இந்த அம்சம் இடம்பெறாதது துரதிருஷ்டவசமானது. அணைப் பாதுகாப்பில் மாநில அரசுகளுக்கு போதிய அனுபவம், நிபுணத்துவம் உள்ளது. மத்திய நீர் ஆணையமும் அணைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் மத்திய அரசு அணைப் பாதுகாப்புக்கென தனிச் சட்டம் கொண்டு வரத் தேவையில்லை. எனவே, அணைப் பாதுகாப்பு மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும், தமிழக அரசைக் கலந்து ஆலோசிக்காமல் இந்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்று முதல்வர் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>